தொகுதி எல்லை மாற்றங்களால் கட்சிகளின் தேர்தல் அணுகுமுறைகள் மாறலாம்

3 mins read
b71e7c64-9103-4ebd-a5cd-3df5ba819277
தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு மார்ச் 11ஆம் தேதி தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு (இபிஆர்சி) அறிக்கை மார்ச் 11ஆம் தேதி வெளியிடப்பட்டதை அடுத்து சிங்கப்பூரில் பொதுத் தேர்தல் மிகவும் நெருங்கிவிட்டதை உணர முடிகிறது.

கடந்த மூன்று தேர்தல்களும் மறுஆய்வுக் குழு அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு ஆறு வாரங்கள் முதல் நான்கு மாதங்களுக்குள் நடத்தப்பட்டன.

விலைவாசி அதிகரிப்பு, கடினமாகும் வேலைவாய்ப்புச் சூழல், அதிகரிக்கும் வீட்டுவிலைகள் போன்ற உள்ளூர்ச் சிக்கல்கள் மட்டுமன்றி, அமெரிக்கா-சீனா வணிகப் பதற்றம், ரஷ்யா-உக்ரேன் போர், இஸ்ரேல்-காஸா போர் போன்ற பல உலகப் பிரச்சினைகளுக்கு இடையிலும் அடுத்த சிங்கப்பூர் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

புவிசார் அரசியல் பதற்றங்கள் மிகுந்த இத்தகைய சூழலில், உள்நாட்டு, அனைத்துலக விவகாரங்களை திறம்படக் கையாளும், நம்பகத்தன்மைமிக்க அரசாங்கம் நமக்குத் தேவை.

இவ்விவகாரங்கள் அனைத்தும் தேர்தல் பிரசாரத்தின்போது பேசுபொருளாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.

ஆனால், பொதுத் தேர்தல் என்றாலே எழக்கூடிய முதல் சர்ச்சை, தொகுதி எல்லைகள் மறுவரையறை குறித்ததுதான். அவ்வறிக்கை எச்சூழலிலும் எல்லாத் தரப்பினர்க்கும் மனநிறைவு அளிக்கக்கூடியதாக அமைவதற்கு வாய்ப்பே இல்லை.

அவ்வகையில், அண்மையில் வெளியிடப்பட்ட தொகுதி எல்லை மறுஆய்வு அறிக்கையிலும் பல மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. இப்போதுள்ள ஐந்து தனித்தொகுதிகள் நீக்கப்பட்டு, ஆறு புதிய தனித்தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. குழுத்தொகுதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தனித்தொகுதிகள், குழுத்தொகுதிகள் என இப்போது மொத்தம் 31 தொகுதிகள் இருக்கும் நிலையில், அவ்வெண்ணிக்கை 33ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல, 93ஆக இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 97ஆக உயர்கிறது.

கடந்த காலங்களைப் போலன்றி, இம்முறை தொகுதி எல்லை மாற்றங்களைப் பரிந்துரைத்ததற்கான காரணங்களையும் மறுஆய்வுக் குழு தனது அறிக்கையில் விளக்கியுள்ளது.

மக்கள்தொகை உயர்வும் புதிய வீடமைப்புகளுமே முக்கியக் காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

பாசிர் ரிஸ் - பொங்கோல், செம்பவாங், தெம்பனிஸ் குழுத்தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கை கணிசமான அளவில் கூடியிருப்பதை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அவற்றுடன், ஹொங் கா நார்த், பொத்தோங் பாசிர் தனித்தொகுதிகளிலும் புதிய வீடமைப்புத் திட்டங்கள் இடம்பெற்று, புதிய குடியிருப்பாளர்கள் சேர்ந்துள்ளனர்.

சென்ற 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு இத்தொகுதிகள் ஒவ்வொன்றிலும் வாக்காளர் எண்ணிக்கை 10,000க்கும் மேல் கூடியுள்ளது.

இருந்தாலும், மறுஆய்வுக் குழு குறிப்பிட்டுள்ள காரணங்களை எல்லாருமே ஏற்றுக்கொள்வர் என எதிர்பார்க்க இயலாது.

கடந்த சில ஆண்டுகளாக தாங்கள் சீராகக் களப்பணியாற்றி வந்துள்ள தொகுதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக பாட்டாளிக் கட்சி தெரிவித்துள்ளது.

இப்போதுள்ள தொகுதிகளின் எல்லைகளில் அதிரடி மாற்றங்களைச் செய்திராமல், மக்கள்தொகை மாற்றத்தை மறுஆய்வுக் குழு கவனத்தில் கொண்டிருக்கலாம் என்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி கருத்துரைத்துள்ளது.

கடந்த தேர்தல்களில் புக்கிட் பாத்தோக் தனித்தொகுதியில் முன்னேற்றம் கண்டு வந்த சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் டாக்டர் சீ சூன் ஜுவான், அத்தொகுதி நீக்கப்பட்டது குறித்து சமூக ஊடகம் வழியாகக் கவலை தெரிவித்துள்ளார்.

ஆயினும், இந்த மாற்றங்கள் எதிர்கட்சிகளை முறியடிப்பதற்கான சதி எனும் வாதம் ஏற்புடையதன்று. வெற்றிநோக்குடன் மேற்கொள்ளப்பட்டுள்ள தொகுதிப் பிரிப்பு நடவடிக்கை என்றும் ஒரேயடியாகக் கூறிவிட முடியாது.

இதற்கு ஜூரோங் குழுத்தொகுதி சிறந்ததோர் எடுத்துக்காட்டு. கடந்த சில பொதுத் தேர்தல்களில் மக்கள் செயல் கட்சியின் கோட்டையாகத் திகழ்ந்துவந்துள்ள அக்குழுத்தொகுதியில் இடம்பெற்றுள்ள பகுதிகள் பிரிக்கப்பட்டு, வரும் தேர்தலில் நான்கு வெவ்வேறு தொகுதிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அவ்வகையில், மக்கள்தொகை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ஒரு தொகுதியின் எல்லையில் மாற்றம் செய்யும்போது, அதனை ஒட்டிய தொகுதிகளும் மாற்றங்களுக்கு உள்ளாவது தொடர்விளைவே.

முந்தைய அறிக்கைகளைக் காட்டிலும், பிரதமராகத் திரு லாரன்ஸ் வோங் பதவியேற்றபின் வெளியாகியுள்ள முதலாவது தொகுதி எல்லை மறுஆய்வுக் குழு அறிக்கையில் கூடுதல் விளக்கங்கள் இடம்பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது. இதனால் வாக்காளர்களுக்குத் தேர்தல், தொகுதி எல்லை குறித்த புரிந்துணர்வு அதிகமாகும், தவறான சிந்தனைகளும் கருத்துகளும் குறையும் என நம்பலாம்.

புதிய மாற்றங்களால் கட்சிகளும் தங்கள் உத்திகளில் மாற்றம் செய்ய வேண்டியிருக்கலாம். பல தொகுதிகளில் பன்முனைப் போட்டி நிலவினாலும் வியப்படைவதற்கில்லை. அதனால், வெற்றி வாய்ப்பு குறித்து கணிப்பதும் சிரமமாக இருக்கலாம்.

எது எப்படியிருப்பினும், 2025ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான களம் அமைக்கப்பட்டுவிட்டதால், மக்கள் மனங்களைக் கவர்ந்து, வாக்குகளை அள்ளி, வெற்றியை அறுவடைசெய்ய, வாக்களிப்புநாள் வரையிலும் கட்சிகள் பம்பரமாகச் சுழன்று செயலாற்றப்போவது உறுதி!

குறிப்புச் சொற்கள்