சிங்கப்பூரின் வெற்றி எப்போதும் அதன் நிலப்பரப்பையோ இயற்கை வளங்களையோ சார்ந்து இருந்ததில்லை. மாறாக, நம் மக்களையும் அவர்களின் உழைப்பையுமே சார்ந்து இருந்துள்ளது.
துணைப் பிரதமர் கான் கிம் யோங் நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 26ஆம் தேதி ஆற்றிய உரை, சிங்கப்பூர் இன்று எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவாலைப் படம்பிடித்துக் காட்டியது. நமது மொத்தக் கருவள விகிதம் (Total Fertility Rate) 2025ஆம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குச் சரிந்துள்ளது.
2024ஆம் ஆண்டில் 0.97ஆக இருந்த இவ்விகிதம் 2025ஆம் ஆண்டில் 0.87ஆகச் சரிந்துள்ளது. அதாவது, ஒரு பெண் கருத்தரிக்கும் ஆற்றலுடன் உள்ள காலகட்டத்தில் தற்போதைய கருவள விகிதங்களின்படி சராசரியாகப் பெற்றுக்கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை 1ஐவிடக் குறைவாக இருக்கிறது. இது வெறும் புள்ளிவிவரமன்று. இது நமது சிங்கப்பூர்ச் சமூகத்தின் எதிர்காலம் குறித்த ஓர் எச்சரிக்கை மணியாகும்.
கடந்த ஆண்டு சிங்கப்பூரில் 27,500 குழந்தைகள் பிறந்தன. இது நமது வரலாற்றிலேயே மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.
இப்போக்கு நீடித்தால், இப்போது இருக்கும் சிங்கப்பூரர்களின் வருங்காலச் சந்ததியினர் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும். எடுத்துக்காட்டாக, சிங்கப்பூரர்கள் 100 பேரை 50 தம்பதியராகப் பார்க்கலாம். 0.87 என்ற கருத்தரிப்பு விகிதத்தைவைத்துக் கணக்கிடுகையில், அடுத்த தலைமுறையில் 44 குழந்தைகளே பிறப்பார்கள். அந்த 44 பேர், அதாவது 22 தம்பதியர், 19 குழந்தைகளையே பெற்றெடுப்பார்கள். இரண்டு தலைமுறையில், 100ஆக இருந்த சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை 19 ஆகிவிடும். இச்சரிவு நம் அனைவரையும் தட்டியெழுப்ப வேண்டும்.
மக்கள்தொகை குறைவதால் ஏற்படும் பாதிப்புகள் இளைய தலைமுறையினரைக் கடுமையாகத் தாக்கும் என்பதை நாம் உணர வேண்டும். ஒவ்வோர் இளையரும் எண்ணிக்கையில் அதிகரிக்கும் முதியோரைத் தாங்க வேண்டியிருக்கும். மக்கள்தொகை குறைவதனால் உற்பத்தியும் குறையும். அதனால், தனிநபர் வருமான உயர்வு பாதிக்கப்படும். அதே வேளையில், சுகாதாரம், மருத்துவம், சமூகப் பாதுகாப்புக்கான செலவுகள் விண்ணைத் தொடும். இது நாட்டின் மீதும் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் தாங்க முடியாத சுமையைச் சேர்க்கும்.
இத்தகைய கவலைதரும் போக்கைச் சரிசெய்ய இரு வழிகளே உள்ளன. சிங்கப்பூரர்களின் பிறப்பு எண்ணிக்கை கூட வேண்டும். அல்லது, நிரந்தரவாசிகள், புதிதாகக் குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கை உயரவேண்டும்.
இங்குதான் சிங்கப்பூரர்களிடையே ஒரு முரண்பாடான மனநிலை நிலவுகிறது. மொத்தக் கருவள விகிதம் குறைவதனால், ‘சிங்கப்பூர் அடையாளம்’ மறைந்துபோவதையும் நாம் விரும்பவில்லை. ஆனால் அதே நேரம், அந்த இடைவெளியை நிரப்பவரும் புதிய குடியேறிகளை முழுமனத்துடன் ஏற்கவும் தயங்குகிறோம். இந்நோக்கு, பகுத்தறிவிற்கு முரண்பாடானது. இத்தருணத்தில், கவனமாக நிர்வகிக்கப்படும் குடியேற்றம் என்பது நன்மை மட்டுமல்லாமல் ஒரு கட்டாயத் தேவையாகிறது.
தொடர்புடைய செய்திகள்
இளைய தம்பதியினருக்கு ஆதரவளிக்க விடுப்புத் திட்டங்கள், வீடமைப்பு, குழந்தைப் பராமரிப்புச் சேவைகள் போன்ற பல உதவிகளை அரசாங்கம் தொடர்ந்து வழங்கி வருகிறது. இருப்பினும், பிறப்பு விகிதம் உடனடியாக உயரப்போவதில்லை என்பதால், தகுதியுள்ள வெளிநாட்டினர்க்குக் குடியுரிமை வழங்குவதை நாம் தவிர்க்க முடியாது.
வருடாந்தர அடிப்படையில் 25,000 முதல் 30,000 புதிய குடிமக்களை இணைத்துக்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. நிரந்தரவாசிகளின் எண்ணிக்கையும் கூடும். நாம் ஒரு நாடாய் இயங்க வேண்டுமெனில், ஒற்றுமையாய், ஒரே சிங்கப்பூர்ச் சமுதாயமாய்ச் செயல்பட வேண்டும். நம் நாட்டை வந்தடைவோர் நமது வரலாறு, பல்லின, சமூக நல்லிணக்கம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், நாட்டுப்பற்று ஆகியவற்றைப் பற்றிப் புரிந்துகொள்ளச் செய்யவேண்டும். நாமும் ஒருகாலத்தில் இந்நாட்டிற்குப் புலம்பெயர்ந்து வந்தவர்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது.
இருப்பினும், வெளிநாட்டில் பிறந்தவர்களின் எண்ணிக்கை கூடும்போது சில பிரச்சினைகள் தலைதூக்கத்தான் செய்கின்றன. அவர்களின் பழக்கவழக்கங்கள் உள்ளூர்வாசிகளுக்கு அந்நியமாகத் தோன்றலாம். அவர்கள் தங்கள் தாய்நாட்டிலிருந்து வந்தவர்களோடு மட்டும் கலந்துபழக விரும்புவார்கள். அது இயற்கையே. இருதரப்பினரும் விட்டுக்கொடுத்துப் புரிந்துணர்வோடு இணைந்து செயல்படாவிட்டால் சிங்கப்பூரின் திடமான எதிர்காலத்தை உருவாக்க இயலாது.
சிங்கப்பூரர்களாகிய நாம் இந்த நடைமுறை உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டிய தருணம் இது. இந்நாட்டின் இதயத் துடிப்பைத் தக்கவைக்க, கருவள விகிதத்தை அதிகரிக்க முயல்வதோடு, நம் நாட்டிற்குப் புதியவர்களையும் வரவேற்று அவர்களை நமது சமூகத்தில் முழுமையாக ஒருங்கிணைப்பதே ஒரே வழி.

