மின்சிகரெட் பயன்பாட்டிற்கும் விநியோகத்துக்கும் எதிரான புதிய சட்டங்களும் கடுமையாக்கப்பட்ட தண்டனைகளும் நாளை (செப்டம்பர் 1) முதல் நடப்புக்கு வருகின்றன.
இந்தக் கடுமையாக்கப்பட்ட விதிமுறைகளும் சட்ட திட்டங்களும் நமது சமூகத்தை, குறிப்பாக இளையர்களைப் பாதுகாக்க அரசாங்கம் எடுத்துள்ள ஆக்கவழி நடவடிக்கை.
அண்மைக்காலங்களில் மின்சிகரெட் பயன்பாடு பெருகிவந்துள்ளது. முக்கியமாக, இளையர்களிடையே இந்தப் பழக்கம் அதிகரித்து வருவது கவலைக்குரியது. நமது அரசாங்கம், இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள புதிய, கடுமையான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்த நடவடிக்கைகளின் முக்கிய நோக்கம், நமது இளையர்களைப் பாதுகாப்பதுதான்.
இந்தப் புதிய சட்டங்கள், மின்சிகரெட் பயன்பாட்டைத் தடுக்க பல்வேறு வழிகளிலும் முயல்கின்றன.
மின்சிகரெட் வைத்திருந்ததாக அல்லது பயன்படுத்தியதாக முதன்முறையாகப் பிடிபடுவோர்க்கும் விதிக்கப்படும் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு $500, பெரியவர்களுக்கு $700 என அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது முறையாக சிக்கிக்கொள்பவர்கள், கட்டாய மேற்பார்வை மற்றும் மறுவாழ்வுத் திட்டங்களுக்கு உட்படுத்தப்படுவர். இந்தத் திட்டங்களை நிறைவேற்றத் தவறினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மின்சிகரெட்டுகளில் எட்டோமிடேட் போன்ற போதைப்பொருள்கள் கலக்கப்பட்டு வருவதால், அதை ஒரு கட்டுப்படுத்தப்பட்ட மருந்தாக அரசு வகைப்படுத்தியுள்ளது. இந்த மின்சிகரெட்டுகளை இறக்குமதி செய்பவர்கள், விற்பனை செய்பவர்கள், விநியோகம் செய்பவர்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு நீண்டகாலச் சிறைவாசமும் பிரம்படியும் விதிக்கப்படும்.
இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள, பல அரசு நிறுவனங்கள் இணைந்து செயல்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் காவல்துறை, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, சுகாதார அறிவியல் ஆணையம், தேசிய சுற்றுப்புற வாரியம், தேசிய பூங்காக் கழகம் ஆகியவை இணைந்து சோதனைகளையும் அமலாக்க நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளன.
இணையத் தளங்கள், சமூக ஊடகங்களிலிருந்து மின்சிகரெட் விளம்பரங்களை அகற்றுதல், எல்லைகளில் கடுமையான கண்காணிப்பு போன்ற நடவடிக்கைகள் மூலம் மின்சிகரெட் விநியோகச் சங்கிலியைத் துண்டிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மின்சிகரெட்டுகளுடன் பிடிபடும் வெளிநாட்டவர்களின் விசா அல்லது வேலை அனுமதி ரத்து செய்யப்பட்டு, அவர்கள் நாடுகடத்தப்படுவார்கள். மேலும், மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைய அவர்களுக்குத் தடை விதிக்கப்படும் என்ற சட்டம் வெளிநாட்டவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதைக் காட்டுகிறது.
கல்வி அமைச்சு பள்ளிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மின்சிகரெட் பயன்படுத்தும் மாணவர்களுக்குத் தடுப்புக் காவல், இடைநீக்கம், பிரம்படி போன்ற தண்டனைகள் வழங்கப்படும். அவர்களின் நன்னடத்தை மதிப்பும் பாதிக்கப்படும்.
சந்தேகப்படும் மாணவர்கள் மீது நிக்கோடின் சோதனை நடத்த பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கலந்த மின்சிகரெட் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்பட்டால், அவர்களுக்கு சிறுநீர்ப் பரிசோதனையும் நடத்தப்படும்.
மின்சிகரெட் பயன்பாட்டின் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்குத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
பள்ளிகளிலும் பொது இடங்களிலும் மின்சிகரெட்டுக்கு எதிரான செய்திகள் பரப்பப்படுகின்றன.
‘குவிட்வேப்’ போன்ற உதவித் திட்டங்கள் மூலம், இந்தப் பழக்கத்தைக் கைவிட விரும்புபவர்களுக்கு ஆதரவு வழங்கப்படுகிறது. இது இளையர்களை நல்வழிப்படுத்துவதற்கான இயக்கம். இளையர்களின் மனத்திற்கும் நல்லொழுக்கத்திற்கும் நாம் இணைந்து செயல்படக்கூடிய பணி.
மின்சிகரெட் பழக்கத்தில் சிக்கித் தவிக்கும் இளையர்களை அவர்களின் நலனுக்காக இந்தத் திட்டத்தில் இணைந்து பலன்பெற ஊக்குவிக்க வேண்டும்.
கல்வி அமைச்சு அறிவித்துள்ள புள்ளிவிவரங்கள் கவலையளிக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 3,100 மாணவர்கள் மின்சிகரெட் பயன்பாட்டிற்காகப் பிடிபட்டுள்ளனர். இதை வெறும் எண்களாகவோ புள்ளிவிவரங்களாகவோ மட்டும் பார்க்காமல் நமது பிள்ளைகளையும் எதிர்காலத் தலைமுறையினரையும் பாதுகாக்கும் நோக்கில் இணைந்து செயலாற்ற வேண்டும்.
மின்சிகரெட் பயன்பாடு பிரச்சினை இல்லாத, கேடு விளைவிக்காத பொழுதுபோக்கு என்ற எண்ணம் தவறானது என்பதையும் அதனால் விளையும் தீங்குகளையும் புரியவைக்க வேண்டும்.
இதில் சமூகத்தின் பணி மிகவும் இன்றியமையாதது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், மதியுரைஞர்கள், ஆலோசகர்கள் என அனைவரும் கைகோத்து, இளையர்களை அரவணைத்து, அவர்களுக்கு ஆதரவளித்து தீய பழக்கத்தைக் கைவிட வழிவகை செய்யவேண்டும்.
விழிப்புணர்வும் மிக முக்கியம். எவரேனும் மின்சிகரெட் பயன்படுத்துவதைக் கண்டால், பார்த்தும் பார்க்காதவாறு சென்றுவிடுவது நல்லதன்று. அமைதியாக அவர்களுடன் பேசி அறிவுறுத்துவது, அதிகாரிகளிடம் கூறுவது, உதவி வழங்கும் அமைப்புகளுக்குச் செல்லுமாறு கூறுவது போன்ற வழிகள் அவர்களுக்குப் பேருதவியாக அமையலாம்.
மின்சிகரெட்டுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்து பொறுப்பேற்பதுடன், தீர்வுக்கான வழிகளில் அனைவரும் பங்கெடுத்தால் ஒரு சமூகமாக மீளலாம்.
இந்தச் சிக்கலை எதிர்த்துப் போராடுவது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமன்று, சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரின் பொறுப்புமாகும். பெற்றோர், ஆசிரியர்கள், மூத்தவர்கள் அனைவரும் இம்முயற்சியில் இணைந்து, இளையர்களுக்கு நல்வழிகாட்ட வேண்டும்.
நம் இளையர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க, மின்சிகரெட்டுக்கு எதிரான போராட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட உறுதிகொள்வோமாக!

