ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி முதல் தேதி பிறக்கும்போது, அனைவரின் இதயங்களிலும் ஒரு புதிய நம்பிக்கைத் துளிர். பழைய தோல்விகளையும் கசப்பான அனுபவங்களையும் கடந்த காலத்தின் பக்கங்களில் விட்டுவிட்டு, ஒரு புதிய மனிதனாக உருவெடுக்க வேண்டும் என்கிற தீராத தாகமே ‘புத்தாண்டுத் தீர்மானங்களாக’ உருவெடுக்கின்றன.
உடலை வலுவாக்குவது, தீய பழக்கங்களை ஒழிப்பது, புதிய திறன்களைக் கற்பது எனப் பல ஆழமான வாழ்வியல் மாற்றங்களை நாம் செயல்முறைப்படுத்த உறுதி எடுப்போம். உடற்பயிற்சிக் கூடங்களில் கூட்டம், நடைப்பயிற்சித் தளங்களில் அதிக மக்கள், சத்தான உணவு விற்பனையில் ஏற்றம்.
இருப்பினும், ஜனவரி மாதத்தின் உற்சாகம் அடுத்தடுத்த மாதங்களில் நிலைப்பதில்லை. பலரின் உறுதிமொழிகளும் சபதங்களும் உறைந்து போவதும் காற்றில் கரைந்து போவதும் தீராத முரண்பாடாகவே தொடர்கிறது. புத்தாண்டுத் தீர்மானங்களைப் புதைத்துவிட்டு மீண்டும் பழைய வாழ்க்கை.
ஏன் இந்த நிலை? இந்தத் தொடர் தோல்விகளுக்குப் பின்னால் உள்ள உளவியல் காரணங்களைச் சற்று ஆராய்வோம். பெரும்பாலான புத்தாண்டுத் தீர்மானங்கள் தர்க்கரீதியான திட்டமிடலைவிட, தற்காலிக உணர்ச்சி வேகத்திலேயே எடுக்கப்படுகின்றன. பழகிப்போன வாழ்க்கை முறையை, புத்தாண்டு முதல் தேதி அன்றே மாற்றிவிட முடியும் என்று நம்புவது எதார்த்தத்திற்குப் புறம்பானது.
“இன்று முதல் இனிப்பைத் தொடவே மாட்டேன்” அல்லது “தினமும் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்வேன்” என அசாத்தியமான இலக்குகளை நிர்ணயிக்கும்போது, நமது மூளை அந்த மாற்றத்தை ஒரு சுமையாகக் கருதி எதிர்க்கத் தொடங்குகிறது. காலப்போக்கில், இந்தத் தீவிரக் கட்டுப்பாடுகள் மனச்சோர்வைத் தந்து, பழைய பழக்கங்களுக்கே நம்மைத் தள்ளிவிடுகின்றன.
இந்தச் சறுக்கல்களிலிருந்து மீண்டு, புத்தாண்டுத் தீர்மானங்களை வாழ்நாள் மாற்றமாக மாற்றுவதற்குச் சிறு சிறு தொடக்கங்களே சிறந்த வழியாகும். ஒரு பெரிய மலையை ஒரே நாளில் நகர்த்த நினைப்பதைவிட, தினமும் ஒரு சிறு கல்லை அகற்றுவதே புத்திசாலித்தனம்.
எடுத்துக்காட்டாக, அதிகாலையில் எழுந்திருக்க விரும்புபவர்கள், முதல் நாளிலேயே இரண்டு மணி நேரம் முன்னதாக எழ முயலாமல், ஒவ்வொரு வாரமும் ஒரு பதினைந்து நிமிடங்கள் முன்னதாக எழும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம். இந்தச் சிறு வெற்றிகள் மூளைக்கு ஊக்கமளிப்பதோடு, தன்னம்பிக்கையையும் வளர்க்கின்றன. மாற்றங்களைப் பழக்கங்களாகக் கொண்டுவருவது ஒரு விதையை ஊன்றி, நீர் ஊற்றி வளர்ப்பது போன்றது.
தீர்மானங்கள் நிலைத்து நிற்க வேண்டுமானால், அந்த மாற்றத்திற்கான வலுவான காரணம் ஆழமாக நம் மனத்தில் பதிந்திருக்க வேண்டும். மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக எடுக்கப்படும் சபதங்கள் நீடிப்பதில்லை. மாறாக, அந்த மாற்றம் உங்கள் ஆரோக்கியத்திற்கோ, பொருளாதார முன்னேற்றத்திற்கோ எவ்வளவு அவசியம் என்பதை உணரும்போது, தடைகள் வந்தாலும் பயணம் நிற்காமல் தொடரும்.
தொடர்புடைய செய்திகள்
தனிமனித மன உறுதி சில நேரங்களில் தடுமாறலாம். ஆனால், சுற்றியுள்ளவர்களின் ஊக்கமும் துணையும் இருக்கும்போது அந்தப் பயணம் எளிதாகிறது. புத்தாண்டுத் தீர்மானங்களை கூட்டு முயற்சியாக மாற்றும்போது அதன் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கிறது. நமது இலக்குகளை நம் நெருங்கியவர்களிடம் பகிர்ந்துகொள்வதன்வழி நாம் சோர்வடையும் தருணங்களில் அவர்கள் ஊக்கமளிப்பார்கள். நம்மோடு சேர்ந்து செயல்படுவார்கள். சில வேளைகளில் அன்பாய் கடிந்துகொள்வதும் நம்மை முன்னேறத் தூண்டும். ஓர் ஆதரவுக் குழு உருவாகும்போது, தனிநபரின் பலவீனம் குழுவின் பலத்தால் சரி செய்யப்படுகிறது. இறுதியில், அனைவரும் இணைந்து முன்னேறும் வாய்ப்பாக மாறுகிறது.
புத்தாண்டுத் தீர்மானங்கள் நமக்காக மட்டுமே அமையவேண்டும் என்பதில்லை. நம்மையும் தாண்டி, குடும்பம், நண்பர்களைக் கடந்து, வேலையிட மேம்பாட்டிற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் உறுதுணையாய் அமையலாம். வெற்றியைத் தேடி சக ஊழியர்களைப் பின் தள்ளி மேலேறுவதை விடுத்து, அனைவருக்கும் உதவியாய் அன்பாய் நடந்துகொண்டால், அவர்களே கைகொடுத்துத் தூக்கிவிடுவார்கள். வேலை நெறிமுறைகளைக் கடைப்பிடித்து நல்ல பேர் எடுப்பதும் நல்ல தீர்மானமே. வாக்கு இனிமையாய், நினைவு நல்லதாய் இருந்தால் அனைவருக்கும் நன்மைதானே.
இந்த 2026ஆம் ஆண்டில், நம் புத்தாண்டுத் தீர்மானங்கள் வெறும் காகிதத்தோடு முற்றுப்பெற்றுவிடாமல், நினைவுகளாய் நின்றுவிடாமல் நம் ஆளுமையின் அங்கமாக மாறட்டும். வேகம் என்பதைவிட விவேகமான நிதானமே நிலையான வெற்றியைத் தரும் என்பதை நினைவில்கொண்டு நம் பயணத்தைத் தொடங்குவோம்.

