உறவுக்கு உரம் சேர்த்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம்

3 mins read
06ada0c3-bdeb-411c-a1bd-f00213f56e78
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் (இடது) சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம். - படம்: இபிஏ

சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டு பிறந்தநாளைக் கொண்டாடும் 2025ஆம் ஆண்டில் பல சாதனைகள் கொண்டாடப்படும். அவ்வகையில், மலேசியாவிலிருந்து பிரிந்த சிங்கப்பூரின் சுதந்திரத்தை அங்கீகரித்த முதல் சில நாடுகளில் ஒன்றான இந்தியாவுக்கு அதிபர் தர்மன் சண்முகரத்னத்தின் முதல் அரசுமுறைப் பயணம்  அமைந்தது தனிச்சிறப்பு.  

அலுவல்கள் நிறைந்த பயணத்தில் அதிபர், பாரம்பரியம் தழுவும் கைவினை அரும்பொருளகம், மரபுடைமைக் கிராமம், உலக மரபுடைமை வளாகமாக அங்கீகரிக்கப்பட்ட கோவில் முதலியவற்றுக்கும் சென்று வந்தது, பொருளியல் ரீதியான உறவுகளுக்கு அப்பால், மக்களுக்கு இடையிலான உறவுகளிலும் பண்பாட்டுப் பரிமாற்றத்திலும் சிங்கப்பூர் ஆர்வம் கொண்டுள்ளதைக் கோடிட்டுக் காட்டுகிறது. 

அதிபரின் இந்தப் பயணத்தில் ஒடிசா மாநிலத்துடன் ஏற்பட்டுள்ள அணுக்க உறவும் ஒத்துழைப்பும் சிங்கப்பூரின் வளர்ச்சி வேட்கைக்கும் வேகத்துக்கும் தீனிபோடுவதாக அமையும்.

நூற்றாண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக்கும் இலக்குடன் ‘விக்சித் பாரத் 2047’ பெருந்திட்டத்தைச் செயல்படுத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு தற்போது இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் கவனம் செலுத்துகிறது. 

இந்தியாவின் வளர்ச்சி இயந்திரங்களாகக் கிழக்கு மாகாணங்களை வருணிக்கும் பிரதமர் மோடி, உலகளவில் முதலீடுகளை ஈர்த்து அந்த மாநிலங்களை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச்செல்ல கடப்பாடு கொண்டுள்ளார். குறிப்பாக, தனித்துவமிக்கச் சிறப்புகளைக் கொண்ட ஒடிசாவின்மீது தனிக் கவனம் செலுத்தப்படுகிறது.

கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மாநிலம் ஆளும் பாஜகவசம் சென்றுள்ளது.  வங்கக் கரையோரம் அமைந்துள்ள இந்தியாவின் எட்டாவது பெரிய மாநிலத்தில் 1,000க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. கண்கவரும் கைவினைக்கும் பண்பாட்டுக் கூறுகளுக்கும் பாரம்பரிய கலைகளுக்கும் பெயர் பெற்ற இடம் அது. சுற்றுப்பயணத்துறைக்குப் புத்துயிரூட்ட அங்கு வளமும் வாய்ப்பும் கொட்டிக்கிடக்கின்றன.

உலகின் மூன்றாம் பெரிய பொருளியலைக் கொண்ட நாடாக முன்னேறி வரும் இந்தியாவில் மேலும் முதலீடுகளைச் செய்ய தக்க இடமாக ஒடிசா அமையும் என்று சிங்கப்பூர் அரசாங்கம் எண்ணுவதற்கு இவற்றையெல்லாம்விட முக்கியக் காரணம், திரு தர்மன் குறிப்பிட்டது போல அந்த மாநில மக்கள் வளர்ச்சியடையவேண்டும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் இருப்பவர்கள். 

அதிபருடன் சென்ற சிங்கப்பூரின் ஒன்பது பெரிய நிறுவனங்களின் வணிகப் பேராளர் குழு ஒடிசாவில் எட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.

இந்தியாவின் முன்னேற்றத்துடன், அந்நாட்டின் முன்னணி முதலீட்டாளர்களில் ஒன்றாக பல காலமாகத் திகழும்  சிங்கப்பூரும் மேலும் முன்னேற்றம் அடைய பெருவாய்ப்பாக இது அமையும்.

இந்தியாவுடனான  சிங்கப்பூரின் பிணைப்பு நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த போதும்,  சிங்கப்பூரர்கள் அதிகம் சென்றிராத இடம் ஒடிசா. சுற்றுப்பயணத்துக்கோ வர்த்தகத்துக்கோ ஒடிசா இயல்பான தெரிவாக இதுவரை இருந்ததில்லை.

அம்மாநிலத்தின் மொழி, பண்பாடு, பருவநிலைகள் போன்றவை அதிகம் அறிந்திரா நிலையில், புதிய களத்தில் அடியெடுத்து வைக்க விரும்பும் சிங்கப்பூரர்கள் பரந்த கண்ணோட்டத்[Ϟ]துடன் லாப நட்டங்களைச் சீர்தூக்கி பார்த்து முடிவுகளை எடுக்கவேண்டும். சிங்கப்பூர் முதலீட்டாளர்களும் இந்தியாவாழ் சிங்கப்பூர் வர்த்தகர்களும் அதை அறிந்தே உள்ளனர்.

திரைகடலோடி திரவியம் தேடச் செல்லும் சிங்கப்பூர் வணிகங்களுக்கு சவால்கள் புதியவையல்ல. இருநாடுகளுக்கும் இடையிலான நீண்டகால, அணுக்கமான அரசந்திர உறவுகளும் பண்பாட்டுப் பிணைப்பும் பல்வேறு வழிகளில் கதவுகளைத் திறந்துவிடுகின்றன. 

அடித்தளத்தில் மக்களுக்கிடையில் நல்லெண்ணமும் நன்னம்பிக்கையும் இருக்கிறது.

இணைப்புப் பாலம் உறுதியாக இருப்பது பெரும்பலம் என்றாலும் இதற்கு இடைப்பட்ட நிலையில் பல பரிணாம மாற்றங்களும் தேவைப்[Ϟ]படுகின்றன. வெளிநாட்டு முதலீடுகளுக்கும் தொழில்[Ϟ]முனைப்புகளுக்கும் எளிமையான நம்பகமான செயல்முறைகள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.

இருநாட்டு அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையில் பணியிட ஒற்றுமைகள் மேலோங்கி, அரசியல் தாக்கமற்ற தொழில்முறை உறவு வலுப்பெற்றால்  இன்னும் ஏராளமான சிறிய, நடுத்தர நிறுவனங்கள் இங்கும் அங்கும் துளிர்விடும். 

இருநாடுகளுக்கும் இடையிலான சுற்றுப்[Ϟ]பயணிகளின் வரத்து ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. சுற்றுப்பயணத்துக்கு உகந்த மாநிலமாகக் கருதப்படுவதாலும் அங்கு சிங்கப்பூர் நிறுவனங்களின் முதலீடும், ஒடிசா மாணவர்கள் சிங்கப்பூரில் வேலையிடப் பயிற்சி மேற்கொள்வதும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும் சிங்கப்பூர் - ஒடிசா இடையே நேரடி விமானச் சேவை பெரும் வசதியாக அமையும்.

சிங்கப்பூர் - இந்தியா 60 ஆண்டு நட்புறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது அதிபரின் பயணம். வெளிநாட்டு உறவுகளைப் பலப்படுத்தி, உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கி, நிலையான வளர்ச்சி கொண்ட எதிர்காலத்தைத் திட்டமிடும் புதிய தலைமைத்துவத்தின் பயணத்துக்கு நம்பிக்கையளிக்கும் தொடக்கம் இது.

குறிப்புச் சொற்கள்