நம் வேர்களைப் போற்றும் இந்திய மரபுடைமை நிலையம்

4 mins read
2c8b1646-a1f6-48a0-87c3-68e30460b5e7
இந்திய மரபுடைமை நிலையத்தின் பத்தாண்டு நிறைவு இரவு விருந்தின் சிறப்பு விருந்தினராகப் பிரதமர் லாரன்ஸ் வோங் கலந்துகொண்டார். - படம்: தமிழ் முரசு

புலம்பெயர்ந்து பொருள் தேட பயணம் செய்த மக்களில் சிங்கப்பூர் இந்தியர்களும் அடங்குவர். நாம் கடந்து வந்த சுவடுகள் தலைமுறைகள் தாண்டும்போது தேய்ந்து மறைந்துவிடுவது இயற்கையே. அவ்வரலாற்றையும் நினைவுகளையும் தக்கவைத்துக்கொள்ளப் பெருமுயற்சி தேவைப்படும். அம்முயற்சியின் வெளிப்பாடே இந்திய மரபுடைமை நிலையம்.

பிறந்த நாடு, குடும்பம், நண்பர்களைவிட்டு, தெரிந்த சூழ்நிலையிலிருந்து வெளிநாட்டிற்குச் செல்வதென்பது மிகப் பெரிய முடிவு. கனவுகளோடும் எதிர்பார்ப்போடும் தொடங்கும் பயணம் குறித்து ஒரு பயம், பதற்றம் நிச்சயம் இருந்திருக்கும்.

பல நாள் கப்பல் பயணத்திற்குப் பின் அந்நிய மண்ணில் புது வாழ்க்கையைத் தொடங்குவதில் இருக்கும் சோதனைகளை நாம் சிறிதாய் மதிப்பிட்டுவிடக் கூடாது. வெற்றி பெற்றவர்கள் மத்தியில் தோல்வி அடைந்தோர் பலர் இருந்திருப்பர். நம் முன்னோர்கள் பல்வேறு காரணங்களால் இங்கு வந்திராவிட்டால், காலப்போக்கில் இங்கேயே தங்கள் குடும்பங்களோடு வேரூன்றாவிட்டால், இப்போது நாம் உலகின் தலைசிறந்து விளங்கும் சிங்கப்பூரில் வாழ்ந்திருக்க மாட்டோம். நம்மைச் சுற்றியிருக்கும் இந்தியப் பண்பாடு, மொழி, உணவு வகைகள், இந்திய மரபுடைமை நிலையம் இருந்திருக்காது.

மொழி, உடை, அணிகலன், சமயம், தொழில், பழக்கவழக்கங்கள், யாவும் ஓர் இனத்தின் அடையாளங்களாய் விளங்குகின்றன. இவ்வடையாளங்கள் நம்மைப் பிரித்துக் காட்டினாலும் நம் பூர்வீகம், நம் சொத்து, நம் வரலாறு என நம்மை எதோ ஒரு வகையில் ஊக்குவிக்கின்றன. இவற்றை அழியவிட்டுக் கொண்டுவரப்படும் ஒற்றுமை நிலைத்திருக்காது. வேறுபாடுகளுக்கிடையே பிறக்கும் புரிந்துணர்வின் வழிவரும் ஒற்றுமையே பல்லாண்டு காலம் நீடிக்கும்.

இந்திய மரபுடைமை நிலையம் சிங்கப்பூர் இந்தியர்களின் பல நூற்றாண்டுகால நினைவுகளை ஆவணப்படுத்தி, பத்தாண்டுகள் கழிந்துவிட்டன. கடந்த வெள்ளிக்கிழமை, அதன் பத்தாண்டு நிறைவுவிழாக் கொண்டாட்டத்தில் பிரதமர் லாரன்ஸ் வோங் வருகையளித்து புகழாரம் சூட்டினார். நிறுவியோர் நினைவகம் நவீன சிங்கப்பூர் வரலாற்றைக் காக்குமெனில், இந்திய மரபுடைமை நிலையம் இந்தியர்களின் வருகையையும் வளர்ச்சியையும் நிரந்தரப்படுத்தும். வரும் தலைமுறைகளின் கேள்விகளுக்குப் பதிலாய் அமையும் என்பது உறுதி.

மரபுடைமை நிலையத்தின் தலைவர் ரா.ராஜாராம், “இந்த நிலையத்தை நிறுவியது, இது ஒரு நினைவுச் சின்னமாகவோ பொருள்கள் வெறுமனே வைக்கப்படும் களஞ்சியமாகவோ இருக்க வேண்டும் என்பதற்காக அன்று. மாறாக, இது ஒரு வாழும் இடமாக, நினைவுகளும் அதற்கான அர்த்தங்களும் ஒன்றிணையும் ஓர் இடமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே,” என்று கூறினார்.

இந்த நிலையம் நம் முன்னோர்களின் பயணம், நாட்டின் சமூக பொருளியலுக்கு அவர்கள் ஆற்றிய பங்கு, தியாகம், பங்களிப்பு ஆகியவற்றைக் காட்சிப்படுத்தும் சரித்திரக்கூடமாக விளங்குகிறது. இங்குள்ள அரிய பொருள்கள், புகைப்படங்கள் மேலும் காட்சிப் பதிவுகள் நமது வேர்களைப் பற்றிய ஆழமான புரிதலை வழங்குகின்றன. இந்தியச் சமூகத்தின் பல்வேறுபட்ட பண்பாடுகளையும் பாரம்பரியங்களையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவந்து, இந்தியரின் பொதுவான கூறுகளையும் மேலும் தனித்துவமான மரபுகளையும் காட்சிப்படுத்துகிறது. இது இந்தியர்களுக்கிடையே நல்லிணக்கத்தை வளர்க்க உதவுவதோடு, இந்தியச் சமூகத்தின் பன்முகத்தன்மையைச் சிங்கப்பூரின் மற்ற இனத்தவர்க்கும் எடுத்துக் கூறுகிறது.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பிரதமர், “சிங்கப்பூர் இந்தியச் சமூகம் எவ்வாறு நமது தேசிய அடையாளத்தின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக மாறி நிலைத்திருக்கிறது என்ற கதையைச் சொல்வதற்காகவே இந்திய மரபுடமை நிலையம் அமைக்கப்பட்டது,” எனக் குறிப்பிட்டார். ஏறத்தாழ 1.8 மில்லியன் பார்வையாளர்கள் மரபுடைமை நிலையத்திற்கு வந்துசென்றிருந்தாலும், இதில் உள்ளூர் இந்தியர்கள் எத்தனை பேர் எனும் கேள்வி எழுகிறது. கற்றல் பயணமாக வந்து சென்ற மாணவர்களும் வெளிநாட்டுப் பயணிகளும் இந்த எண்ணிக்கையில் கலந்திருக்கிறார்கள்.

இங்கு வாழும் எல்லா இந்தியர்களும் இந்திய மரபுடைமை நிலையத்திற்குக் கட்டாயம் செல்ல வேண்டும். இந்தியக் குடும்பங்கள் மரபுடைமை நிலையத்தையும் தங்கள் வார இறுதித் திட்டங்களில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பத்து ஆண்டுகளை எட்டிவிட்டாலும், நம்மில் பலர் இவ்விடத்திற்கு இன்னும் செல்லாதிருப்பது வருத்தம் அளிக்கிறது.

அதிலும், சிங்கப்பூரில் வாழும் இளைய தலைமுறையினரை நிலையத் திட்டங்களில் வழக்கமாக ஈடுபடுத்த வேண்டும். அவர்கள் நிலைய வழிகாட்டிகளாகச் செயல்படலாம். அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு நெறியாளர்களாகச் செயல்படலாம். பல்கலைக்கழக இந்திய மன்ற நிகழ்ச்சிகளுக்கு இந்நிலையம் இடமளித்து ஊக்குவிக்க வேண்டும்.

தங்கள் பாரம்பரியத்திலிருந்து இளையர்கள் விலகிச் செல்லும்போது, நிலையம் ஒரு பண்பாட்டு வழிகாட்டியாகத் திகழும் ஆற்றல்வாய்ந்தது. நமது மொழி, இசை, நடனம், உணவு, விழாக்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர்கள் கண்டறிந்து, தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள நிலையம் தளமாக அமைய வேண்டும்.

இந்திய மரபுடைமை நிலையத்திற்குச் செல்வது வெறும் சுற்றுலா அன்று. அது நம்மைப் பற்றிய தேடல். நமது முன்னோர்கள் சிங்கப்பூரைக் கட்டியெழுப்பியதில் ஆற்றிய பங்கின் கதைகள், காட்சிகள். அவைகளைப் பார்க்கும்போது, நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். இங்கே செல்வது தலைமுறை இடைவெளியைக் குறைத்து, பாரம்பரியத்தின் மதிப்பை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதற்கான சிறந்த வழி.

இந்திய மரபுடைமை நிலையம், சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் உயிரோட்டமான வரலாற்றின் இதயத்துடிப்பு, நம் வேரின் கதை.

குறிப்புச் சொற்கள்