ஒரு மாதம் நோன்பு வைத்து, ஈட்டிய செல்வத்தைக் கொண்டு இல்லாதோர்க்குக் கொடை வழங்கி, இரவுதோறும் தொழுகையில் ஈடுபட்டு புனித ரமலான் மாதத்தைக் கடந்த முஸ்லிம்கள், மிக ஆவலோடும் நன்றியுணர்வோடும் நோன்புப் பெருநாளை வரவேற்கின்றனர்.
ரமலான் மாதமும் நோன்புப் பெருநாளும் முஸ்லிம்களுக்கு மிகுந்த சிறப்புமிக்க காலமாக இருக்கும் நிலையில் சிங்கப்பூரில் அதன் சிறப்பும் தனித்துவமும் போற்றுதலுக்குரியது.
நாட்டின் தலைவர்களும் அமைச்சர்களுடன் பல இன, சமய மக்களும் ஒன்றுசேர்ந்து நோன்புத் துறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, சமூக நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் இந்த புனித மாதத்தை அரவணைப்பது இந்நாட்டின் சிறப்பு.
சமய, இன நல்லிணக்கம் பேணுவதில் உலக நாடுகளுக்கு வழிகாட்டியாகத் திகழும் சிங்கப்பூர், சமய, இனப் பூசல்களையும் வெறுப்புணர்வையும் அறிவோடும் உணர்வோடும் எதிர்கொண்டு சமாளித்த தருணங்கள் போற்றத்தக்கவை. நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதலில் தொடங்கி, அண்மைய காஸா போர்வரையில் மக்களின் உணர்வுரீதியான ஊசலாட்டங்களை அறிவார்ந்த வழியிலும் உண்மையான சமய விழிப்புணர்வு மூலமும் கடுமையான சட்டதிட்டங்கள் மூலமும் திறம்படச் சமாளித்து வருகிறது சிங்கப்பூர். அது இந்நாட்டின் முஸ்லிம் சமூகத்தின் ஒத்துழைப்பு, ஆதரவு, பங்களிப்பாலேயே சாத்தியமாகிறது.
உலகின் வேறு பகுதியில் இருந்தாலும் காஸா மக்களின் அவலநிலையைக் களையும் நோக்கில் உதவிக்கரம் நீட்ட முன்வரும் சிங்கப்பூர் மக்களின் நல்லுள்ளமும் இந்த மாதத்தில் நன்கு வெளிப்பட்டது.
இவ்விழாக்காலம் நாட்டின் தொடக்கக் காலத்திலிருந்து பல வழிகளிலும் பல்வேறு துறைகளிலும் பங்காற்றிய முன்னோடிகளையும் நினைவுகூர்ந்து நன்றி நவிலவும் நல்வாய்ப்பு அளிக்கிறது.
நீண்டகால நோக்குடன் திட்டங்களை வகுத்து, முன்னோக்கிச் செல்லும்போது, கடந்தகால அனுபவங்களும் நினைவுகளும் பண்பாட்டு நிலைகளும் நமது பாதை தடம்புரளாமல் இருக்க வகைசெய்யும்.
வலுமிக்க சமுதாயமாக முஸ்லிம் சமூகம், குறிப்பாக இந்திய முஸ்லிம்கள் இந்நாட்டின் தொடக்கக் காலத்திலிருந்து செய்துவந்த பணிகளை நினைவுகூர நோன்புப் பெருநாள் போன்ற விழாக்கள் வாய்ப்பளிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
ரமலான் மாதம் முழுதும் கொண்டாட்ட உணர்வில் களைகட்டி, இறை வழிபாட்டிற்குப் புகலிடம் தந்த சில பள்ளிவாசல்களும் அதன் வரலாற்றுச் சிறப்புகளும் நல்ல எடுத்துக்காட்டுகள்.
சிங்கப்பூரின் பழமை வாய்ந்த பள்ளிவாசல்களில் ஒன்றான, 1826ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஜாமியா சூலியா பள்ளிவாசல், சிங்கப்பூர்த் தமிழ் முஸ்லிம்களின் அடையாளச் சின்னங்களில் இன்றியமையாத ஒன்று. அடுத்த ஆண்டு இருநூறாம் ஆண்டைக் கொண்டாட உள்ள ஜாமியா சூலியா பள்ளிவாசலுடன், தமிழ் முஸ்லிம்கள் கட்டிய வழிபாட்டுத் தலங்களில் நான்கு தேசிய நினைவுச் சின்னங்களாக உள்ளன. 1827ல் தெலுக் ஆயர் ஸ்திரீட்டில் கட்டப்பட்ட நாகூர் தர்கா, அல் அப்ரார் பள்ளிவாசல், லிட்டில் இந்தியாவில் 1859ல் கட்டப்பட்ட அப்துல் கஃபூர் பள்ளிவாசல் ஆகியவையும் மரபுடைமையைத் தாங்கி நிற்கும் வரலாற்றுப் பெட்டகங்கள்.
இலக்கியத் துறையிலும் தொழில்களிலும் பெருமைமிகு பங்களிப்புகளைச் செய்த தமிழ் முஸ்லிம்களின் பணிகள் ஏராளம்.
சிங்கப்பூரில் அச்சிடப்பட்ட, நமக்குக் கிடைத்துள்ள முதல் தமிழ் நூல், 1872ல் நா.மு. முகம்மது அப்துல் காதிறுப் புலவர் வெளியிட்ட முனாஜாத்துத் திரட்டு.
தீனோதயவேந்திரசாலை என்ற முதல் தமிழ் அச்சகத்தை 1873ஆம் ஆண்டில் நிறுவிய சி.கு.மகுதூம் சாயுபு, சிங்கை வர்த்தமானி என்ற சிங்கப்பூரின் முதல் தமிழ் பத்திரிக்கையையும், தொடர்ந்து சிங்கை நேசன் உள்ளிட்ட பத்திரிகைகளையும் நடத்தியுள்ளார்.
தொழில்துறையிலும் கொடிகட்டிப் பறந்த தமிழ் முஸ்லிம்கள் ஏராளம்.
வைரம், மருந்துக் கடை, மாட்டுப் பண்ணை, துணிக்கடை எனப் பல்வேறு வணிகங்களையும் செய்துள்ளனர். நாணய மாற்று வணிகத்தில் அவர்கள் பங்கு குறிப்பிடத்தக்கது. காசுக்கடை காதிறுமுகையத்தீன் என்பவர் 1827ஆம் ஆண்டிலேயே இந்தத் தொழிலை நடத்திவந்தது வரலாற்றுச் சுவடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
தமிழ்க் கல்வியில் தமிழ் முஸ்லிம்களின் பங்களிப்பின் முத்தாய்ப்பாக, 1946ஆம் ஆண்டு இந்நாட்டின் முதல் உயர்நிலைத் தமிழ்ப் பள்ளியான, உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியை கடையநல்லூரைச் சேர்ந்த அ.நா. மைதீன் அமைத்தார்.
வக்ஃப் எனப்படும் கொடைகளையும் பேரளவில் சமூகப் பணிகளுக்காக விட்டுச் சென்ற பெருமையும் இச்சமூகத்திற்கு உண்டு.
19ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட பல வக்ஃப் சொத்துகள் இன்றுவரை சமூகத்திற்கு பெரும்பலனளித்து வருகிறது.
தொலைநோக்குச் சிந்தனையுடன், தலைமுறைகள் தாண்டி தங்களின் பங்களிப்பை நிலைக்கச் செய்ய அவர்கள் அமைத்த வக்ஃப், நன்றியுணர்வோடு நினைவுகூரப்பட வேண்டியது.
அதன்தொடர்ச்சியாக, எதிர்காலத் தலைமுறையினருக்காக சமூக அளவில் நிதிப் பங்களிக்க விரும்புவோருக்காக, அண்மையில் முயிஸ் எனப்படும் இஸ்லாமிய சமய மன்றம் சமூக வக்ஃப் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
சிங்கப்பூரின் பல இனச் சூழலில் சிறுபான்மைச் சமூகமான இந்திய முஸ்லிம்கள், தொடர்ந்து வலுவான சமூகமாக, அனைவரையும் அரவணைத்து நல்லிணக்கம் பேணும் சமூகமாக நிலைபெறச் செய்வோம்.
அனைவருக்கும் இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகள்.

