இமயமலைப் பகுதியில் நேப்பாளம் - திபெத் எல்லைப் பகுதியில் ஆகஸ்ட் 26ஆம் தேதி நிகழ்ந்த கடுமையான வெள்ளப்பெருக்கு, மனிதகுலத்திற்கு இயற்கை விடுத்துள்ள மிகப்பெரிய எச்சரிக்கை மணி.
இதனை இயற்கைப் பேரிடர் எனக் கூறுவோர் பலர். ஆனால், மனித இனம் பல ஆண்டுகளாக இயற்கையின்மீது எதிர்மறையாக ஏற்படுத்திவரும் தாக்கமே இப்பேரிடருக்கு முக்கியக் காரணம்.
திபெத்தின் ஆற்றுப் படுகையில் ஏறத்தாழ 4 முதல் 6 மில்லியன் கன மீட்டர் அளவு கொண்ட மாபெரும் பனிப்பாறைகள் சரிந்து விழுந்து ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, எண்ணற்ற உயிர்களைப் பலிவாங்கியதோடு, வாழ்வாதாரங்களையும் உள்கட்டமைப்புகளையும் அடியோடு அழித்துள்ளது.
நேப்பாளம் இப்பேரிழப்பிலிருந்து மீண்டுவருவதற்குப் பல ஆண்டுகள் ஆகும். குறைந்தது சில பில்லியன் டாலர் தேவைப்படும் என்று அந்நாட்டின் நிதி அமைச்சர் சுவார்னிம் வாக்லே கூறியுள்ளார்.
புறக்கணிக்கப்பட்ட உண்மை
உலக அளவில் கரியமில வாயு உமிழ்வு அதிகரித்து வருவதால், இமயமலைப் பகுதிகள் உலகின் பிற பகுதிகளைவிட இருமடங்கு வேகத்தில் வெப்பமடைந்து வருகின்றன. அதனால் பல தலைமுறைகளாக உறைந்துகிடந்த பெர்மாஃரோஸ்ட் (Permafrost) எனும் உறைபனி நிலங்கள் தளர்ந்து, பனிப்பாறைகளைத் தாங்கிப் பிடிக்கும் பிடிப்பு பலவீனமடைகிறது. அத்துடன், விரைவாக உருளும் பனிப்பாறைகளும் பனிப்பாறை ஏரி உடைப்பும் வெள்ளத்திற்கு வழிவகுக்கின்றன. நடந்த பேரிடர், உலக வெப்பமயமாதலின் கோர முகம்.
பல பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே அரிதாக நிகழ்ந்த இத்தகைய பனிச்சரிவுகளும் வெள்ளப்பெருக்கும், தற்போது ஆண்டுதோறும் தொடர்கதையாகிவிட்டன. அறிவியல் ஆய்வுகளின் எச்சரிக்கைப்படி, நிலைமை இதோடு முடியப்போவதில்லை. உலகளாவிய வெப்பநிலை உயர்வு கட்டுப்படுத்தப்படாவிட்டால், வரும் ஆண்டுகளில் இமயமலை மண்டலத்தில் மேலும் பல பனி ஏரிகள் உடைந்து வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆசிரியர்களின் கடமை
சிங்கப்பூரில் ஆசிரியர் தினம் வரும் வாரத்தில் கொண்டாடப்படுகிறது. அதோடு, தமிழ் முரசு, சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம், தமிழ் கற்றல் வளர்ச்சிக் குழு இணைந்து ஆண்டுதோறும் நடத்திவரும் நல்லாசிரியர் விருதுகள் நேற்று வழங்கப்பட்டன. இத்தருணத்தில், நல்லாசிரியர்கள் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச்செல்ல வேண்டிய செய்தி குறித்து சிந்திப்பது முக்கியம்.
எதிர்காலத் தலைமுறையை இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது. சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் திரும்பப் பெற முடியாதவை என்பதை மாணவர்களுக்கு உணர்த்துவது மிக முக்கியம்.
பனிப்பாறைகள் உருகுவது, கடல் மட்டம் உயர்வது, உயிரினங்கள் அழிவது போன்ற செயல்பாடுகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர முடியாது என்பதை எளிய கதைகள், அறிவியல் சான்றுகள் மூலம் விளக்குவது மிக முக்கியம். தொழில்நுட்பத்தின் மூலம் எல்லாப் பாதிப்புகளையும் சரிசெய்துவிட முடியும் என்ற தவறான எண்ணத்தை மாற்றி, இயற்கைச் சுழற்சி சிதைந்தால் அதை மனிதனால் மீண்டும் உருவாக்க முடியாது என்ற உண்மையை ஆசிரியர்கள் வகுப்பறையில் ஆழமாகப் பதிய வைக்க வேண்டும்.
மொழி, கலைப் பாடங்கள் வழியாகச் சுற்றுச்சூழல் சார்ந்த நாடகங்கள், கவிதைகள், ஓவியப் போட்டிகளை நடத்தி மாணவர்களின் படைப்பாற்றலைத் தூண்டலாம். மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது, தேவைக்கு மட்டுமே பொருள்களை வாங்குவது போன்ற நல்ல பழக்கங்களை வலியுறுத்தலாம். ஆசிரியர்கள் விதைக்கும் இந்த விழிப்புணர்வு, வருங்காலத்தில் புவி பாதுகாப்பாக மலரும்.
இமயமலையின் எச்சரிக்கை மணி
இயற்கையின் எச்சரிக்கைகளைப் புறக்கணித்தால், எதிர்காலத்தில் இன்னும் கடுமையான இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை நேப்பாளப் பேரழிவு தெளிவாக உணர்த்துகிறது
பேரிழப்பை ஓரே எண்ணிக்கையாக ஊடகங்களில் படிக்கலாம். ஆனால், உயிர்விட்டோர் ஒவ்வொருவரும் ஒரு குடும்பத்தின் தந்தை, தாய், தனையன், தமக்கை, தாத்தா, பாட்டி, சொந்த பந்தங்கள். அக்குடும்பங்களின் வாழ்க்கை முற்றிலும் தலைகீழானதை அனைவரும் உணரவேண்டும். வெள்ளத்தில் காணாமல் போனவர்கள் குடும்பங்களில் கேள்விகள் வாழ்க்கை முழுவதும் நிற்கும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பனிச்சரிவிற்கும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்திற்கும் நேரடியாகப் பொறுப்பானவர்களில்லை. அதிக அளவிலான இந்த உயிர்ப்பலி மூலம் இயற்கை உணர்த்தியிருக்கும் படிப்பினை, ‘தாமதிக்க நேரமில்லை, இயற்கைப் பாதுகாப்பு அவசரமாய் அவசியம்’ என்பதே.
அனைவரையும் தட்டியெழுப்பிய இப்பேரிடர், உலக அரசாங்கங்களின் இயற்கைப் பாதுகாப்பு முயற்சிகள் முடுக்கிவிடட்டும், மக்கள் அனைவரையும் இம்முயற்சியில் ஒன்று சேர்க்கட்டும்.


