உலகில் ‘அன்பு’ என்ற சொல்லுக்கு உருவம் கொடுத்தால் அது அன்னையாகத்தான் இருக்க முடியும். அவளே அன்பின் ஊற்றுக்கண். ஒரு தாயே தன் குழந்தையின் முதல் ஆசிரியர், முதல் நண்பன், முதல் வழிகாட்டி.
‘ஒரு தாய் நூறு ஆசிரியர்களுக்குச் சமமானவள்’ என்கிறார் புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர் ஜார்ஜ் ஹெர்பர்ட்.
ஒரு நாட்டின் எதிர்காலத்தையே தன் வளர்ப்பின்மூலம் செதுக்கும் ஆற்றல் தாய்க்கு உண்டு. மராட்டியப் பேரரசர் சிவாஜியின் வீரத்திற்கு வித்திட்ட ஜீஜாபாயும், ‘மந்தபுத்தி’ எனப் பள்ளியால் ஒதுக்கப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசனை உலகமே வியக்கும் கண்டுபிடிப்பாளராக மாற்றிய அவரின் தாய் நான்சியும் இதற்குச் சான்று.
சிங்கப்பூரின் பரபரப்பான சூழலில் மற்றுமோர் அன்னையர் தினத்தை நாம் கொண்டாடுகிறோம்.
கடந்த தலைமுறை அன்னையர்களின் உலகம் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே இருந்தது. ஆனால் இன்று, நவீன சிங்கப்பூர்ப் பெண்கள், ஆண்களுக்கு நிகராகப் பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர்.
இல்லத்தரசியாகவும் வேலைக்குச் செல்லும் பெண்ணாகவும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம்.
வீட்டை நிர்வகிப்பதுடன், பணியிடத்திலும் போராடும் இந்த ‘இரட்டைச் சுமை’ சவால்மிக்கது. ஒரு தாய் தன் உடல், பொருள், ஆவியை அர்ப்பணிப்பதால்தான் இன்று நம் குடும்பம், சமுதாயம், பண்பாடு காப்பாற்றப்படுகின்றன. நமது பொருளியல் வலிமைக்கும் அவர்களின் உழைப்பே அடித்தளம்.
அன்னையரைப் போற்றிப் பேணுவது என்பது பிள்ளைகளின் கடமை மட்டுமன்று, கணவர்களுக்கும் அதில் பெரும்பங்குண்டு. அன்னையருக்குத் தேவைப்படுவது வெறும் பாராட்டு மட்டுமன்று, குடும்ப உறுப்பினர்களின் உண்மையான ஒத்துழைப்பும் ஆதரவும்தான்.
தொடர்புடைய செய்திகள்
இந்த அங்கீகாரம் மே மாதத்தின் ஒரு ஞாயிற்றுக்கிழமையோடு முடிந்துவிடாமல், ஆண்டு முழுவதும் தொடர வேண்டும். அவர்கள் செய்யும் பணிகளை ‘இயல்பானதுதான்’ என்று கடந்துபோகாமல், அவர்களுக்குத் தேவையான ஓய்வையும் மனமகிழ்ச்சியையும் நாம் உறுதிசெய்ய வேண்டும்.
உண்மையில், ஒரு தாய்க்கு நாம் தரும் மிகச்சிறந்த பரிசு எது? விலையுயர்ந்த பொருள்களோ, விருந்தோ அல்ல. தன் பிள்ளைகள் சமூகத்தில் நல்ல நிலையில் இருப்பதையும், சான்றோர்களாகத் திகழ்வதையும் காண்பதே ஒரு தாய்க்குப் பேரின்பம்.
இதனைத் திருவள்ளுவர், “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்” என்கிறார். தன் பிள்ளை அறிவில் சிறந்தவன் என்று பிறர் சொல்லக் கேட்கும் தாய், அவனைப் பெற்றெடுத்தபோது அடைந்த மகிழ்ச்சியைவிட பெருமகிழ்ச்சி அடைவாள்.
அன்னையர் தினம் என்பது சிறு பிள்ளைகளுக்கு மட்டுமேயானது அன்று; வளர்ந்த பெரியவர்களுக்கும்தான். நாம் பேசக் கற்காத போதே நம் மௌனத்தைப் புரிந்துகொண்ட தாய்க்கு, நாம் பேசக் கற்றபின் அவளது மௌனத்தைப் புரிந்துகொள்ளும் கடமை நமக்கு இருக்கிறது.
“அம்மா... உனக்கு ஒரு கவிதை சொல்ல வந்தேன். நீயே ஒரு கவிதையாய் இருப்பதால் நான் மௌனமாகிவிட்டேன்” என்ற வைர வரிகளுக்கேற்ப, அவர்கள் வாழ்நாளெல்லாம் நமக்காக மௌனமாகச் செய்யும் தியாகங்களை உணர வேண்டும்.
‘தாயிற் சிறந்த கோவிலும் இல்லை’ என்பது முதுமொழி. தெய்வம் வரம் கொடுக்கும். ஆனால், தாய் தன்னையே வரமாகக் கொடுப்பவள். ‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே’ என்ற பாரதியின் வரிகளை நெஞ்சில் நிறுத்துவோம்.
அன்னையர் தினம் என்பது ஒரு சடங்கன்று; அது நம் வாழ்வின் படிக்கல்லாகத் திகழ்வோரைப் போற்றும் ஒரு வாழ்நாள் நன்றியறிதல். நமது அன்னையரை என்றும் போற்றிப் பாதுகாப்போம்!


