தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வளம் காப்பதை வழக்கமாக்கிக் கொள்வோம்

3 mins read
b59b02e4-efa0-42d8-8998-d6f9942f4657
‘பசுமையாவோம் எஸ்ஜி’ கதைப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள படங்களை வரைந்த தொடக்கப் பள்ளி மாணவர்கள் (இடமிருந்து) கைரா நைலா பிந்தே கைரில் நிஸாம், ஃபூ ஜுன் ஆன், ஸ்ரீகார்த்திகா சிதம்பரம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மனிதனின் ஆகச் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒன்று மின்சாரம்.

எல்லாமே மின்மயமாகிவிட்ட சூழலில், இன்றைய உலகமானது மின்சாரம் இல்லையேல் அப்படியே நிலைகுத்திப் போய்விடும்.

மனிதகுலத்திற்குத் தன்னேரிலாத் துணையாக விளங்கும் மின்சாரத்திற்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு போன்ற புதைபடிம எரிபொருள்கள் மின்சாரத் தயாரிப்பிற்கு மூலமாக இருந்து வருகின்றன. அத்தகைய வளங்கள் குறைந்துவரும் நிலையில், நீர், காற்று, கடலலை, சூரிய ஒளி போன்ற புதுப்பிக்கத்தக்க வளங்களைக்கொண்டு மின்சாரம் தயாரிப்பதில் பெரும்பாலான நாடுகள் ஆர்வங்காட்டி வருகின்றன.

புதைபடிம எரிபொருள்களே உலக வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணமாக விளங்கிவரும் நிலையில், புதுப்பிக்கத்தக்க வளங்கள் அவற்றுக்கு மாற்றாக விளங்கி வருகின்றன.

ஆயினும், புதைபடிம எரிபொருள்களே மின்சாரத் தயாரிப்பிற்கு இப்போதும் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருவதால் வளிமண்டலத்தில் அதிக அளவில் கரிமம் உமிழப்பட்டு உலகம் வெப்பமடைவதும் அதனால் பனிப்பாறைகள் உருகி கடல்மட்டம் உயர்வதும் தொடர்ந்து வருகிறது.

அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கங்கள் பெருமுயற்சிகள் எடுத்துவந்தாலும், தனிப்பட்ட வகையில் நாம் ஒவ்வொருவரும் மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வதன் மூலமும் அதற்குப் பங்காற்றலாம்.

ஆண்டிற்கு ஆண்டு வளிமண்டல வெப்பநிலை உயர்ந்து வருகிறது. அதனால் ஏற்படும் புழுக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் குளிரூட்டிகளை நாடும் போக்கும் அதிகமாகி வருகிறது.

இதனால், மின்சாரப் பயன்பாடும் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சிங்கப்பூர் தனது மின்சாரத் தேவைக்கு பெரிதும் இறக்குமதியையே சார்ந்திருக்கிறது. அதனால், மின்சாரப் பயன்பாடு அதிகரிப்பு வீட்டளவிலும் நாட்டளவிலும் கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது.

இவ்வேளையில், மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கத்துடன் கட்டடங்களில் நிலையான குளிரூட்டலுக்கான ‘கோ 25’ எனும் தேசிய இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் ஒட்டுமொத்தக் கரிம உமிழ்வில் கட்டடங்களின் பங்கு 20 விழுக்காட்டிற்கும் மேலாக இருக்கிறது.

கட்டடங்களின் எரிசக்திப் பயன்பாட்டில் குளிரூட்டிகள் முக்கிய இடம் வகிக்கின்றன. அதனைக் குறைக்கும் நோக்கில், உட்புறங்களில் குளிரூட்டிகளின் குறைந்தபட்ச வெப்பநிலையை 25 டிகிரி செல்சியசாக வைத்திருக்க ஊக்குவிப்பதே புதிய ‘கோ 25’ இயக்கத்தின் நோக்கம்.

குளிரூட்டிகளின் வெப்பநிலையில் 23 டிகிரியிலிருந்து 25 டிகிரி செல்சியசுக்கு உயர்த்தும்போது, ஒவ்வொரு டிகிரிக்கும் குளிரூட்டுவதற்கான எரிசக்தியில் 12 விழுக்காட்டைச் சேமிக்கலாம் என ஆய்வின்மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

அவ்வாறு வெப்பநிலையை உயர்த்தியபோது, உட்புறங்களில் இருப்போர் எந்த மாறுதலையும் வசதிக்குறைவையும் உணரவில்லை.

குளிரூட்டி வெப்பநிலையை ஒவ்வொரு டிகிரி உயர்த்தும்போதும் குடும்பங்கள் ஆண்டிற்கு $13 சேமிக்க முடியும் எனத் தேசிய சுற்றுப்புற அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன.

குளிரூட்டிகளையும் மின்விசிறிகளையும் சேர்த்துப் பயன்படுத்தியபோது 30 விழுக்காடுவரை மின்சாரம் குறைவாகச் செலவானதும், ஈராண்டிற்குமுன் சிங்கப்பூரில் செயல்படுத்தப்பட்ட முன்னோடித் திட்டத்தின்மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

சுற்றுப்புற வெப்பநிலை உயர்வு வேளாண்மையில் தாக்கத்தை ஏற்படுத்தி, விளைச்சலைக் குறைக்கிறது. குறைந்த உற்பத்தித்திறன், பொருளியல் இழப்பு, பணியிட விபத்து, மனநல பாதிப்பு போன்ற அபாயங்களுக்கும் அது மறைமுகக் காரணமாக விளங்குகின்றது.

வளிமண்டல வெப்பநிலை உயரும்போது வெளிப்புறங்களில் பணிபுரிவோரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

அதனாலேயே, சிங்கப்பூரில் பசுமையைப் பேண ‘பசுமையாவோம் எஸ்ஜி’ திட்டம் அறிமுகமாகியுள்ளது.

பார்க்கும் இடமெல்லாம் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கும்படி, மரங்களையும் செடிகொடிகளையும் வளர்ப்பது மட்டுமே பசுமை இயக்கமன்று. வளங்களைக் குறைவாகப் பயன்படுத்தி, சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறைத்து, இயற்கையைப் பேணும் நடவடிக்கைகள் அனைத்தும் பசுமை சார்ந்தவையே.

அவ்வகையில், அண்மையில் தெம்பனிசில் முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட பகிர்வுக் குளிரூட்டி முறையைப் பல பகுதிகளுக்கு அரசாங்கம் விரிவுபடுத்தலாம். கட்டுமான முறையில், கட்டுமானப் பொருள்களில் மாற்றம் செய்வதன்மூலம் கட்டட உட்புறங்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்க முடியுமா என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

என்னதான் இலக்கு வகுத்து அரசாங்கம் முயற்சி எடுத்தாலும் மக்களின் ஒத்துழைப்பு இல்லையேல் அவ்விலக்கை எட்டுவது சாத்தியமில்லாது போய்விடும்.

நம் ஒரு வீட்டில் குளிரூட்டி குறைந்த வெப்பநிலையில், அதிக நேரம் இயங்குவதால் என்ன மாற்றம் நேர்ந்துவிடப் போகிறது என்றெண்ண வேண்டாம். ஊர் கூடித் தேரிழுப்பதுபோல, ஒவ்வொருவரின் பங்கும் முக்கியம்.

இயற்கை வளங்கள் நமக்கு மட்டுமானவை அல்ல, எதிர்காலத் தலைமுறையினருக்குமானவை. இருக்கிறது, கிடைக்கிறது என்பதற்காக அளவிற்கு மீறிப் பயன்படுத்தலாகாது. தேவை குறையும்போது வாழ்க்கை நிறைவாக இருக்கும். வளம் காத்து நலமாக வாழ்வோம்!

குறிப்புச் சொற்கள்