தமிழ் முரசின் மிக முக்கியமான நாள்களில் ஒன்று நல்லாசிரியர் விருது விழா.
சிங்கப்பூரில் தமிழ்மொழி சொல்லித்தரும் நல்லாசிரியர்களைப் போற்றிக்கொண்டாடும் இந்த விருது விழாவை, 2002 முதல் 23 ஆண்டுகளாக சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழு ஆகிய அமைப்புகளுடன் இணைந்து புரவலர்கள், கல்வி அமைச்சு ஆதரவுடன் தமிழ் முரசு முன்னெடுத்து வருகிறது.
அரும்பணி ஆற்றும் தமிழாசிரியர்களை சிறப்பிப்பதுடன், அப்பணியின் சிறப்பை எடுத்துக்கூறி, அடுத்த தலைமுறையினரை அப்பணிக்கு ஈர்ப்பதும் இவ்விருதின் நோக்கம்.
வாழையடி வாழையாக தமிழும் தமிழ்க் கல்வியும் இந்நாட்டில் நிலைத்திருக்க தரமான, அர்ப்பணிப்புமிக்க ஆசிரியர்களுக்கான தேவை எப்போதும் உள்ளது.
தமிழாசிரியராய் பணிசெய்வது சற்று குறைவானதாகவும் அதிக எதிர்கால வாய்ப்புகள் இல்லையென்றும் கருதும் போக்கு சிலரிடம் உண்டு. அதனால் இளையர்களுக்கு ஆர்வம் இருந்தாலும் அவர்களை ஊக்குவிக்கத் தயங்கும் சில பெற்றோரும் மற்றோரும் உள்ளனர்.
சிங்கப்பூரில் தற்போது ஏறக்குறைய 800 தமிழாசிரியர்கள் உள்ளனர். மற்ற பாட ஆசிரியர்களுக்கு ஈடாக, அரசாங்க ஊழியர்களாக உள்ளனர். தற்போது தமிழில் பட்டக் கல்வியும் அதற்கு மேலும் பயிலும் வாய்ப்புகளும் உதவிகளும் வழங்கப்படுகின்றன. துறைசார்ந்த திறன்களைப் பெறுவதற்கும் வாய்ப்பளிக்கப்படுகிறது.
தமிழ்மொழியில் ஆர்வம் உள்ள இளையர்கள் தமிழாசிரியர் பணிக்குத் தயங்காமல் முன்வர வேண்டும்.
சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளாக ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய நான்கு மொழிகளும் நீடிக்கும், நிலைத்திருக்கும் என்று அரசியல் தலைவர்கள் மீண்டும் மீண்டும் உறுதியளித்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இளம் வயதிலிருந்து தாய்மொழி பிள்ளைகள் கற்பதற்கு எல்லா வசதிகளையும் வாய்ப்புகளையும் அரசாங்கம் செய்கிறது. வளங்களையும் கொண்டு சேர்க்கிறது. மாறி வரும் காலத்துக்கும் பிள்ளைகளின் போக்குக்கும் ஏற்ப, தாய்மொழி கல்வியையும் கற்றுக்கொடுக்கும் முறைகளையும் மேம்படுத்திக்கொண்டே இருக்கிறது.
மொழி காக்க தலைகீழாக நின்று தவம் இருந்தாலும் பிள்ளைகள், அடுத்த தலைமுறையினர் பேச வேண்டும், புழங்க வேண்டும். அதை உறுதிசெய்ய நமக்கு நல்லாசிரியர்கள் தேவை. அதுவும் தற்காலத் தொழில்நுட்பங்களையும் செயற்கை நுண்ணறிவையும் கற்றல் கற்பித்தலில் இயற்கையாகப் பயன்படுத்தக்கூடிய இளம் ஆசிரியர்கள் தேவை.
மொழியை வாழ வைப்பதிலும் வளர்ப்பதிலும் வீடும் பள்ளியுமே மிக முக்கிய பங்கை வகிக்கின்றன. இந்த ஆண்டின் நல்லாசிரியர் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம் இதை அழகாக எடுத்துச் சொன்னார்.
ஒரு குழந்தை முதலில் இந்த உலகத்தைப் பார்க்கப் பழகுகிறது. பின்னர் சிந்திக்கக் கற்றுக்கொள்கிறது. அடுத்து வாழப் பழகுகிறது. இதற்கு அடித்தளமாக அமைபவர்கள் பெற்றோரும் ஆசிரியர்களும். மொழி கற்றுத்தரும், அதிலும் தாய்மொழி சொல்லித்தரும் ஆசிரியர்களின் பங்கு முதன்மையானது. தலைசிறந்த பணி என்று தலைவணங்கினார்.
தமிழ்மொழியின் பண்பாடு, விழுமியங்கள், வரலாற்றுடன், தமிழ் அறம், பகுத்தாயும் திறன், சமூகத்துடன் இணக்கம், எதிர்காலத்திற்கான பார்வை என பலவற்றையும் சொல்லித்தரும் மேன்மையான பணியைத் தமிழாசிரியர்கள் செய்கின்றனர்.
இன்று அதிகமான சிங்கப்பூரர்கள் வீட்டில் ஆங்கில மொழி பேசுகின்றனர். சில பெற்றோர்களும் மாணவர்களும் தங்கள் தாய்மொழியை ஒரு கல்வித் தேவையாகவே பார்க்கின்றனர். இச்சூழலில் தமிழாசிரியர்கள் தேவையும் பங்கும் அதிகரித்துள்ளது.
சிங்கப்பூரின் அடையாளம், வாழ்க்கை, சாதகமான நிலை, சிங்கப்பூரின் உத்திபூர்வ சொத்து தாய்மொழி என்று அண்மையில் குறிப்பிட்டார் கல்வி அமைச்சர் சான் சுன் சிங்.
மற்ற எந்த ஆசிரியரை மறந்தாலும் ஒருவர் தன் தமிழாசிரியரை வாழ்நாளில் மறப்பதே இல்லை. நம்மைப் பற்றி அறிந்தவராக, நலனில் அக்கறைகொண்டவாரகத்தான் பெரும்பாலான தமிழாசிரியர்கள் உள்ளனர். ஒருவருக்குத் தமிழ் மீது பற்றை ஏற்படுவதிலும், அதை அவர் புறந்தள்வதிலும் ஆசிரியர் திருப்புமுனையாக இருக்கிறார். தமிழ் மொழி கற்பிக்கப்படும் வகுப்பு ஒருவகையில் இரண்டாம் இல்லமாக மாறும். கற்பிப்பதைத் தாண்டி நல்லொழுக்கம், நற்சிந்தனை, எதிர்காலநோக்கு என மொழியோடு வாழ்க்கைக் கல்வியும் சேர்ந்தே வரும். மாணவர்களைச் சமமாகவும் பொறுப்பாகவும் நடத்தும் தமிழாசிரியர்கள் நம் மாணவர்களுக்கு மிகத் தேவையான வழிகாட்டிகள்.
நம் நல்லாசிரியர்களைக் கொண்டாடும் அதேவேளையில், தமிழ் மீதான அன்பை பிள்ளைகளுக்கு அயராது ஊட்டும் பணியில் கால்பதிக்க அதிகமான இளையர்கள் முன்வரவேண்டும்.