சில நொடிகளுக்கு ஒருமுறை விரல்களால் வருடி, வெவ்வேறு கதைகளைக் கண்டு, சில சமயங்களில் சிரித்து, சில சமயங்களில் அழுது, உணர்வுகள் மேலும் கீழும் ஊசலாட, பல மணி நேரம் தங்களை மறந்து காலத்தைக் கழிப்பவர்கள் பலர்.
இதுதான் சமூக ஊடகமெனும் புது உலகம்.
காலத்தை விரயம் செய்துவிட்டு வருத்தப்படுபவர்கள் இருந்தாலும் இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல் தவிப்பவர்களும் உள்ளனர்.
திறன்பேசி, சமூக ஊடகங்களின் எழுச்சிக்கும் உலகளவில் பதின்ம வயதினரின் மனநலப் பிரச்சினைகளுக்கும் இடையே மறுக்க முடியாத தொடர்பு இருப்பதாக ஆய்வுகள்வழி தெரியவந்துள்ளது.
மே மாதம், அமெரிக்காவின் சுகாதார உயரதிகாரி டாக்டர் விவேக் மூர்த்தி, பெற்றோர்களுக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் கட்டுப்பாட்டாளர்களுக்கும் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். அளவிற்கு அதிகமான சமூக ஊடகப் பயன்பாடு சிறுவர்களுக்குத் தீங்கு விளைவிப்பதோடு வாழ்க்கையில் பேராபத்தை ஏற்படுத்தும் என்பதற்கான சான்றுகள் வளர்ந்து வருவதை அவர் சுட்டினார். சமூக ஊடகங்களின் நன்மைகளையும் அங்கீகரிக்கும் டாக்டர் மூர்த்தி, அவை சுயதீங்கு, தற்கொலையைச் சாதாரணமாக்கும் உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளதைக் குறிப்பிட்டார்.
சமூக ஊடகப் பயன்பாடானது உடல்நலம், உணவு உண்ணுவதில் கோளாறுகளுடன் மனச்சோர்வையும் ஏற்படுத்தலாம். மேலும், சிறார்கள் மூளை வளர்ச்சியடையும் முக்கியமான பருவத்தில் இணையவழி துன்புறுத்துதலுக்கு ஆளானால் வாழ்க்கையில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று டாக்டர் மூர்த்தி தமது அறிக்கையில் எச்சரித்துள்ளார்.
இந்த எதிர்மறைத் தாக்கங்களை ஓரளவிற்கு தவிர்ப்பதற்குத் தீங்கு விளவிக்கக்கூடிய சமூக ஊடகச் செயலிகளில் எச்சரிக்கைக் குறிப்பைச் சேர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். எச்சரிக்கைக் குறிப்பு மட்டுமே சமூக ஊடகங்களைப் பாதுகாப்பானதாக ஆக்கிவிடாது என்றாலும் விழிப்புணர்வையும் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தவும் உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிறரைக் குறைகூற, மிரட்ட, அல்லது அவமானப்படுத்த சிலர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்கள். இச்செய்கை பலருக்கும் மன அழுத்தத்தை உருவாக்கும்.
தொடர்புடைய செய்திகள்
தவறான தகவல்கள், போலிச் செய்திகள் வேகமாகப் பரவுவதன் மூலம் மக்களிடையே பதற்றம் உருவாகக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கிறது. சமூக ஊடகங்களில் பகிரப்படும் தனிப்பட்டவர்களின் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படலாம். இது ஓர் அடையாளத் திருட்டு என்று குறிப்பிடலாம். அத்துடன், சமூக ஊடகங்கள் பல்வேறு வகையான மோசடிகளுக்கும் போலி விற்பனைத் திட்டங்களுக்கும் வழிவகுக்கின்றன. இவ்வகை தவறான பயன்பாடுகள் சமூக ஊடகங்களைப் பொறுப்புடன் பயன்படுத்தும் அவசியத்தை மேலும் அதிகரிக்கின்றன.
சமூக ஊடகங்கள் பல நன்மைகளை வழங்குகின்றன என்பதை மறுக்க முடியாது. சமூக ஊடகங்கள் மூலம் உலக அளவிலான செய்திகளையும் தகவல்களையும் உடனடியாகப் பெற முடிகிறது. இது மக்கள் இடையேயான அறிவுப் பரிமாற்றத்தை எளிதாக்குகிறது. மாணவர்களுக்குச் சுவாரசியமான முறையில் கல்வி கற்பிக்க உதவுகிறது.
குடும்ப உறுப்பினர்கள், வெகுநாளயத் தோழர்கள், சக ஊழியர்கள், புதிய நண்பர்களுடன் தொடர்பில் இருக்க சமூக ஊடகங்கள் உதவுகின்றன. இது மனிதர்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைத்து, உறவுகளை மேம்படுத்துகிறது. நெருக்கடியான நேரங்களில் உதவியைப் பெறவும், உதவிகளை வழங்கவும் முடியும். இயற்கைப் பேரிடர்களின்போது துயர்துடைப்பு முயற்சிகளுக்குச் சமூக ஊடகங்கள் மிகவும் கைகொடுக்கின்றன.
சமூக ஊடகங்கள் தொழில்முறை, வணிகம், உற்பத்தி, சந்தை ஆய்வு போன்ற பல துறைகளில் பயன்படுகின்றன. இது வணிகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது; பல நல்ல வணிகத் தொடர்புகளை ஏற்படுத்த உதவுகிறது.
இருப்பினும், சமூக ஊடகங்களின் சரியான பயன்பாட்டிற்கு ஒரு சிலரின் கூடுதலான ஈடுபாடும் நேரமும் தேவைப்படுகிறது. இதில் முக்கியமான பங்கினை வகிப்பவர்கள் பெற்றோர்களும் ஆசிரியர்களும். இவர்கள் சமூக ஊடகங்கள்வழி வரும் பல தகவல்கள் சரியானவையா, தரமானவையா என்பதை உறுதிசெய்ய வேண்டும். சமூக ஊடகங்களில் நல்ல பழக்க வழக்கங்களை வளர்க்க உதவ வேண்டும். எடுத்துக்காட்டாக, மரியாதையாகவும் பொறுப்போடும் செயல்பட வைக்கவேண்டும். அதிரடியான தகவல்களைப் பகிரக்கூடாது என்பதற்கான பாடங்களைச் சொல்லித் தரவேண்டும். சமூக ஊடகங்களுக்காகப் பயன்படுத்தப்படும் சாதனங்கள், கடவுச்சொற்கள் போன்றவற்றைச் சரியான முறையில் கண்காணிக்க வேண்டும்.
சமூக ஊடகங்கள் நல்ல முறையில் மக்களுக்கும் நாட்டிற்கும் கைகொடுக்க அரசாங்கத்தின் பங்கு அதிகம் உள்ளது. சமூக ஊடகங்களைக் கண்காணிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கக் கொள்கைகள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
சமூக ஊடகம் கத்தியைப் போன்றது. ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்தலாம், அழிவிற்கும் பயன்படுத்தலாம். எவ்வகையில் அதைக் கையாள்கிறோம் என்பது அவரவர் சுயகட்டுப்பாட்டைப் பொறுத்தது. அதேநேரத்தில் முடிந்த அளவிற்கு பெற்றோர், ஆசிரியப் பெருமக்கள், பள்ளிகள், உறவினர், நண்பர்கள், சமூகத்தினர் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால், கல்வி, தொழில், வாழ்க்கை மேம்பட சமூக ஊடகங்கள் கைகொடுக்கும் என நம்பலாம்.

