நவம்பர் 1 ஆம் தேதி, சிங்கப்பூர் பொதுத்துறை (Singapore Public Service) செயல்பாட்டின் விளைவுகளை மதிப்பிடும் எட்டாவது அறிக்கையை நிதி அமைச்சு வெளியிட்டது. ஈராண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படும் இந்த ஆய்வறிக்கை சிங்கப்பூரின் முன்னேற்றத்தை அளவிடும் முக்கிய அங்கங்களைக் கருத்தில்கொண்டு செய்யப்படும் ஆய்வு.
அமைச்சுகள், அவற்றின்கீழ் இயங்கும் அமைப்புகள், அனைத்தும் தங்கள் பொறுப்புகளைச் சரிவரவும், சரியான நேரத்திலும் செய்கின்றனவா எனபதை அளவிடும் இதுபோன்ற ஆய்வறிக்கைகள் மக்களின் வாழ்க்கைமுறை சுமுகமாக அமைய வழிவகுக்கிறது.
ஏனைய நாடுகளில், செய்ய வேண்டிய வேலையை விடுத்து சற்று பேதலித்து நிற்கும் பொதுச் சேவைகளைப் ஒப்பிட்டுப் பார்க்கையில், சிங்கப்பூரின் பொதுச் சேவை கவனத்துடன் செயல்பட்டு வருவதால், அன்றாடம் எதிர்கால சிங்கப்பூரை உருவாக்கி வருகிறோம் என்றே தோன்றுகிறது. போக்குவரத்து, மருத்துவம், கல்வி, வங்கிக் கட்டமைப்பு, மின்னிலக்கச் செயல்பாடு, வேலையிடப் பராமரிப்பு, சிறார், பெண்கள், முதியோர், வசதி குறைந்தோர் பாதுகாப்பு என அனைத்து விஷயங்களிலும் அரசாங்கமும் அதனைச் சார்ந்த அமைப்புகளும் விடாமுயற்சியோடு தங்கள் பணிகளை ஆற்றி வருகின்றன.
அவ்வப்போது சிறு சிறு தோல்விகளைத் தழுவினாலும், இயற்றப்பட்ட திட்டங்கள் தடம் மாறிச் சென்றாலும், விழித்தெழுந்திடும் தன்மை நம் அமைச்சுகளுக்கும் அரசாங்க அமைப்புகளுக்கும் உண்டு. உடனடியாகத் திருத்தங்கள் செய்யப்படுகின்றன. இதனால், இங்கே பிறந்தவர்களும் குடியேறிகளும் தாங்கள் சிங்கப்பூரில் வாழ்வதற்காக நன்றிகூறிக்கொண்டுதான் இருக்கின்றனர்.
தற்போது வெளியிடப்பட்ட அறிக்கை, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்படுத்தப்படும் வாய்ப்புகளைக் கோடிட்டுக் காட்டுவதோடு, நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சியை வடிவமைக்க உதவும் Forward SG இயக்கத்தினால் ஏற்பட்ட முன்னேற்றங்களையும் எடுத்துரைக்கிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கையும் நன்முறையில் மேம்பட்டிருப்பதை வெவ்வேறு கோணங்களில் சித்திரிக்கிறது.
பொருளியல் கணக்கீட்டுக் குறியீடான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கடந்த 5 ஆண்டுகளில் 2 முதல் 3 விழுக்காடுவரை இருந்திருக்கிறது. அதே சமயத்தில், பணவீக்கம் 2024ல் கணிசமாகக் குறைந்திருக்கிறது. சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு உயர்ந்துள்ளது.
உலகளாவிய மேலாண்மை மேம்பாட்டு நிறுவனம் (International Institute for Management Development) சிங்கப்பூர் போட்டித்தன்மை வாய்ந்த பொருளியலாகத் திகழ்வதாகத் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரின் எதிர்கால உயிரோட்டத்திற்கான அத்தியாவசிய உத்திகளாகக் கருதப்படுவது ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சித் திட்டங்கள்மூலம் இடைவிடா மறுபயிற்சி. இவை வேலைவாய்ப்புகளை உறுதிசெய்வதோடு ஊதிய உயர்வுக்கும், ஓய்வுபெறும் வயதினைத் தாண்டி வேலையில் தொடர்வதற்கும் உறுதுணையாய் இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஊழியர்களும் பொதுவாக ஊதிய உயர்வைக் கண்டுள்ளனர் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வியிலும் திறன்களிலும் மேம்பட்ட மக்கள் வளத்தையே மூலதனமாகக் கொண்ட சிங்கப்பூரில் அனைவரும் நோயற்று வாழ்வது மிக முக்கியமானது. வேலை செய்யும் ஒவ்வொரு மணிநேரத்திற்கான உற்பத்தியும் வருமானமும் அளவிடப்படுகின்றன. உற்பத்தித்திறனும் தொடர்ச்சியான புத்தாக்க முனைப்பும் நம் நாட்டின் எதிர்காலத்தை முடிவுசெய்கின்றன. ஆயுட்காலம் அதிகமாகியிருந்தாலும் சில நாட்பட்ட நோய்கள் அதிகரித்து வருகின்றன. வாழ்க்கைமுறை மாற்றங்கள் தேவைப்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
பொதுத்துறை ஆய்வறிக்கையானது, முக்கியமாக திருமணத்தை ஊக்குவிப்பது, குழந்தை பெற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கங்களை எதிர்கொள்வது, பெற்றோர்களுக்கு உறுதுணையாய் இருப்பது என்ற பல வழிமுறைகளுக்கான திட்டங்களை விவரித்துள்ளது. முழுநேர குழந்தைப் பராமரிப்புக்கு ஏதுவாக மேலும் பாலர் பள்ளி இடங்களும் குழந்தைப் பராமரிப்பு மானியங்களும் கொடுக்கப்படுகின்றன. பெற்றோரை ஊக்குவிக்கும் வகையில் ‘குழந்தை போனஸ்’ திட்டமும், கூடுதலாக 10 வாரங்கள் அரசு ஊதியத்துடன் பெற்றோர் பகிர்ந்துகொள்ளக்கூடிய விடுப்பும் வழங்கப்படுவதாக அறிக்கை கூறுகிறது.
அத்தியாவசியங்களை மேம்படுத்தும் நோக்கில், முதல் வீடு வாங்குபவர்களுக்கு அதிகரிக்கப்பட்ட மானியங்கள், சிறந்த அக்கம்பக்க போக்குவரத்து இணைப்புகள்வழி உச்சநேரங்களில் 45 நிமிடங்களுக்குள் வேலைக்குச் செல்லக்கூடிய வசதி, நீண்ட சைக்கிளோட்டப் பாதைகள் போன்றவற்றை மேம்படுத்தியுள்ளது பொதுத்துறை.
அனைவரும் அமைதியோடும் பயமின்றியும் வாழ்வதற்கு சிங்கப்பூரின் பாதுகாப்பு முக்கியம். குற்றங்கள் குறைந்திருக்கின்றன. இணையம்வழி நடக்கும் முறைகேடுகளையும் மின்னிலக்க வங்கிப் பரிமாற்றங்களில் நடக்கும் மோசடிகளையும் தடுக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நீடித்த நிலைத்தன்மையைப் பேண சிறந்த நீர், எரிசக்தி, உணவு மீள்திறன் ஆகியவை அவசியம் என்பதை அறிந்த அரசாங்கம், அதனால் உணவு இறக்குமதி நாடுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. அத்துடன், புதிய நீர்ச் சுத்திகரிப்புத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
சிங்கப்பூர் பொதுத்துறை தன்னைத்தானே கண்காணித்துக் கொள்வதோடு, சீரான செயல்பாட்டிற்கு இதுபோன்ற ஆய்வறிக்கையின் வழியும், நாடாளுமன்றப் பகிர்தலின் மூலமும் மக்களுக்குத் தங்களின் திட்டங்களைத் தெளிவுபடுத்தி, கலந்துரையாடலில் வெளிப்பட்ட கருத்துகளைக் கவனத்தில்கொண்டு, எட்ட வேண்டிய இலக்குகளை நோக்கிப் பயணிக்கிறது. நம் அனைவருக்கும் பொதுத்துறைத் திட்டங்களின் வெற்றியில் பங்குண்டு என்பதை மனத்தில் கொள்வோம். நம்மால் இயன்றதைச் செய்வோம்.