தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதுப்பித்துக்கொள்ள மனப்போக்கு மாற வேண்டும்

4 mins read
119eb8f4-d931-48a6-ad4c-6cabc7aa113d
படம்: - தமிழ் முரசு

புதிய பிரதமராகப் பதவியேற்று நூறு நாள்களை நிறைவுசெய்துள்ளார் திரு லாரன்ஸ் வோங்.

நான்காம் தலைமுறைத் தலைமைத்துவ மாற்றம் என்பது சாதாரண, இயல்பான மாற்றம் என்றில்லாமல் ஒரு தலைமுறையின் மாற்றம் என்பதை பிரதமர் லாரன்ஸ் வோங்கின் முதலாவது தேசிய தினப் பேரணி உரை உணர்த்தியுள்ளது.

பிரதமராகப் பொறுப்பேற்ற மூன்றே மாதத்தில் லாரன்ஸ் வோங் நிகழ்த்திய உரை, வலுவான அடிப்படையில் அமைந்த சீரிய சிந்தனையின் வெளிப்பாடாக உறுதியான, துணிச்சலான மாற்றத்தின் தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது.

புத்துயிரூட்டப்பட்ட சிங்கப்பூர்க் கனவை நோக்கிச் சிங்கப்பூரர்கள் இணைந்து நடைபோடுவதற்கான பாதையை அமைத்த பேச்சு.

தேசிய தினப் பேரணி உரை என்பது நாட்டின் தற்போதைய நிலைமை குறித்தும் முன்னேற்றம் பற்றியும் சிங்கப்பூர் பிரதமர் அளிக்கும் அறிக்கை. நிகழ்காலத்தைக் கையிலெடுத்து, ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி நாட்டை அணிதிரட்டும் முக்கியமான வேளை.

சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்து முதல் பேரணி உரையை 1966ஆம் ஆண்டு சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ நிகழ்த்தியபோது நாட்டின் முன்னேற்றத்திற்கு இணைந்து செயல்பட நாட்டு மக்களுக்கு அறைகூவல் விடுத்தார். “மீண்டும் எழ நம்மை அர்ப்பணிப்போம், உயிர்வாழ ஒன்றுபடுவோம், முக்கியமாக நாம் கட்டியெழுப்புவதற்கும், நம் முன்னோர்கள் கட்டியெழுப்பியதற்கும் நீடித்த எதிர்காலத்தைக் கண்டறிவோம்,” என்று அறைகூவல் விடுத்தார் அவர்.

நாடு அடித்தளத்திலிருந்து உருவாகி, முதல்தர உலக நாடாக வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், ஒன்றிணைந்து நம்மைப் புதுப்பித்துக்கொள்வோம் என்று மக்களைத் தம்முடன் கைகோத்துச் செயல்பட அழைக்கிறார் திரு லாரன்ஸ் வோங்.

வளமான எதிர்காலத்தை உறுதிப்படுத்த செயல்முறைகளையும் திட்டங்களையும் மறுசீரமைத்து, நம்மைப் புதுப்பித்துக்கொள்ள, இன்றைய தலைமுறைக்கும் காலத்துக்கும் உகந்த வகையில் அமைதியும் புன்னகையுமாக அழைப்பு விடுத்துள்ளார்.

40 ஆண்டுகளாக நடப்பிலிருந்த மீத்திறன் கல்வித் திட்டத்தை மாற்றியமைப்பது போன்றவற்றையும் முன்னெடுக்கிறார். மாணவர்கள் பலருக்கும் வாய்ப்பளிக்கும் பொருட்டு ஏற்படுத்தப்படும் இந்த மாற்றம் ஆற்றல்மிகு இளையரை உருவாக்குவதற்கு கைகொடுக்கும்.

வேலையிழந்தவர்களுக்கான தற்காலிக ஆதரவை அறிமுகப்படுத்துகிறார். நாட்டின் சமூகக் கட்டமைப்புக்கு மறுவடிவம் கொடுக்க, மேலும் இறங்கிச் செயல்படுவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதை இது காட்டுகிறது.

தற்போது நாட்டின் முக்கிய பிரச்சினைகளாக அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினமும் குறைந்து வரும் பிறப்பு விகிதமும் உள்ளன.

மக்கள்தொகை வளர்ச்சியை நீண்டகால நோக்கில் சீர்செய்யும் வகையில் 30 வாரச் சம்பளத்துடன் கூடிய பிள்ளைப்பேறு விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கொள்கை மாற்றம் புதிய பெற்றோரின் கூட்டுப் பொறுப்புகளை அதிகரிப்பதோடு, குடும்பப் பிணைப்பையும் வலுப்படுத்துகிறது.

இன்னும் அதிகமாக அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் பல திட்டங்களை அறிவித்துள்ளார் பிரதமர்.

தேவைக்கேற்பக் கட்டப்படும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளை வாங்க ஒற்றையருக்கு மேலும் சலுகை, சிங்கப்பூரில் விளையாட்டுக் கலாசாரத்தை வளர்ப்பதற்காகக் காலாங் வளாகத்திற்கான திட்டம் அவற்றில் சிலவாகும்.

வேலை இழக்கும் குறைந்த, நடுத்தர வருமான ஊழியர்களுக்கு உதவுவதற்கான புதிய ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வேலை தேடுபவர் ஆதரவுத் திட்டம் ஆகியவை பிற நடவடிக்கைகளில் அடங்கும்.

அரசாங்கத்தின் ஆதரவுக்கரம் எப்போதுமே இருக்கும். ஆனால், அதனைப் பெற முதல் அடி எடுத்து வைக்கவேண்டியது தனிநபரின் பொறுப்பு என்ற வரையறை சிங்கப்பூருக்கு உரிய தனித்துவம். அந்தக் கொள்கையில் மாற்றம் இல்லை. ஆனால், உதவித் திட்டங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றின் பலனை அனுபவிக்க ஒட்டுமொத்த சிங்கப்பூர் மக்களும் அவரவர் பங்கை ஆற்றவேண்டும். அவரவருக்குப் பிடித்த வகையில், அவரவர் திறனுக்கேற்ப வாழ்க்கைப் பாதையை அமைத்துக்கொள்ள உதவிகளும் வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன.

புதிய சிங்கப்பூர் கனவை நனவாக்குவதில் கொள்கைகளும் அரசாங்கமும் ஒரு பகுதி. பிரதமர் வோங், தமது மென்மையான, பரபரப்பில்லாத பாணியில், சிங்கப்பூரர்களுக்கு அவர்கள் பார்க்க விரும்பும் மாற்றங்களைக் கொண்டுவர தாங்களும் முன்னேற வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தினார்.

பல வழிகளில், சிங்கப்பூரின் நான்காவது பிரதமர் லாரன்ஸ் வோங், ‘சிங்கப்பூர்க் கனவு’ என்பதற்கான உருவகத்தைத் சித்திரித்துள்ளார்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய சிங்கப்பூரில், சராசரி நடுத்தரக் குடும்பத்தில் வளர்ந்த அவர், தம் வீட்டிற்கு அருகிலுள்ள பள்ளிகளில் பயின்றவர். பாலர் பள்ளியில் தன்னைப் பொருத்திக்கொள்ள அவருக்குச் சிக்கல் ஏற்பட்டது. வீட்டில் மாண்டரின் மொழி பேசாததால் சீன மொழியைக் கற்க அவர் அதிக முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. அவரது திறமைகளை வளர்த்து, சிறந்து விளங்க சிங்கப்பூர் போதுமான வாய்ப்புகளை வழங்கியது. இறுதியில் அவருக்கு அரசாங்க உபகாரச் சம்பளம் கிடைத்தது. கடின உழைப்பால் நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இன்று அமர்ந்துள்ளார்.

எந்தச் சிங்கப்பூரராலும் இந்தச் சிகரத்தைத் தொட முடியும் எனும் ஊக்குவிப்பு அவரின் பேச்சில் இருந்தது.

பிரதமரின் வார்த்தைகளில் சொல்வதானால், “புதிய இலக்குகளை எட்ட பெரிய மாற்றம் தேவை, அதற்கு நிச்சயம் கொள்கைளில் மாற்றம் தேவை, ஆனால் அதே அளவு முக்கியமானது, நமது மனப்போக்கிலும் தேவைப்படும் பெரிய மாற்றம்”.

திரு வோங், தமது கடந்த காலத்திலிருந்து ஒரு செய்தியைப் பகிர்ந்துகொண்டார். அவர் அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, மாநிலத்தின் மிகவும் பிரபலமான உயிரற்ற நகரங்களில் ஒன்றைப் பற்றி அறிந்ததாகக் கூறினார். அதற்கு ‘சிங்கப்பூர்’ என்று பெயரிடப்பட்டது.

இது 1830களில் நிறுவப்பட்டது. ஒரு பரபரப்பான கப்பல் கட்டும் நகரமாக இது உருமாறியது. 50 ஆண்டுகள் வரையே உயிர்த்திருந்த அந்நகரை மணல் புயல் முற்றாக மூடிவிட்டது. தற்போது நகரின் பெயர்ப் பலகை மட்டுமே உள்ளது.

“அதன் பெயரின் தோற்றம் யாருக்கும் உண்மையில் தெரியாது. ஆனால், அது 1819ஆம் ஆண்டில் தூரக்கிழக்கில் பிரிட்டிஷாரால் நிறுவப்பட்ட நகரத்தின் தாக்கத்தில் அப்பெயர் இடப்பட்டிருக்கலாம்.

“மிச்சிகனில் இருந்த சிங்கப்பூர் மிக நீண்ட காலம் நீடிக்கவில்லை. இந்த சிங்கப்பூர் மிக நீண்ட காலத்திற்கு - அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கும் அதற்கு அப்பாலும் நிலைத்திருக்க வேண்டும்,” என்பது மக்கள் அனைவரின் எண்ணமாக இருக்க வேண்டும் என்பதே சிங்கப்பூர் நான்காம் தலைமுறைத் தலைவர்களின் விருப்பம், இலக்கு.

குறிப்புச் சொற்கள்