தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உறுதியான வெற்றி, காத்திருக்கும் சவால்கள்

4 mins read
ba23a2a1-bc00-4e37-ac9a-718e9d702233
சிங்கப்பூர். பிரதமர் லாரன்ஸ் வோங், தேர்தலில் முதன்முறையாக மக்கள் செயல் கட்சிக்குத் தலைமையேற்று, 65.57 விழுக்காடு வாக்குகளுடன் மகத்தான வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மாறிவரும் உலகம் என்பது இந்தத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சியின் முழக்கவரிகளில் ஒன்றாக இருந்தது.

இது, மாறிவிட்ட உலகம், மாறிவிட்ட சிங்கப்பூர். பிரதமர் லாரன்ஸ் வோங், தேர்தலில் முதன்முறையாக மக்கள் செயல் கட்சிக்குத் தலைமையேற்று, 65.57 விழுக்காடு வாக்குகளுடன் மகத்தான வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளார். சிங்கப்பூரின் தலைமைப் பொறுப்பை ஏற்ற ஓர் ஆண்டிற்குள்ளாகவே மக்களின் பேராதரவை அவர் பெற்றுள்ளார்.

பல தொகுதிகளில் எதிர்பார்த்ததைவிட மசெகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. பல தொகுதிகளில் 70 விழுக்காட்டையும் தாண்டி மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். மசெக மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது வாக்கு எண்ணிக்கை. புதிய அத்தியாயத்தைத் தொடங்க ஆயத்தம் ஆகியிருக்கும் பிரதமருக்கு அடுத்து வரும் ஆண்டுகள்தான் உண்மையான சோதனைக் காலம்.

கட்சியையும் நாட்டையும் அவர் பலப்படுத்த வேண்டும். உள்ளூர் மக்களிடமும் வெளிநாடுகளிலும் கட்சிமீதான, நாட்டின்மீதான நம்பிக்கையை அவர் இன்னும் வலுப்படுத்த வேண்டும்.

ஒருபக்கம் மரபார்ந்த சிந்தனைகளுடன் மூப்படைந்து வரும் சமூகம், மறுபக்கம் உடனடி பலன்களை எதிர்பார்க்கும் இளைய தலைமுறை, இடையே வலுவாகக் காலூன்ற முழுவிசையுடன் செயல்படும் புதிய குடியேறிகள் - வெளிநாட்டினர்.

சிங்கப்பூர் மக்களின் சிந்தனை மாறி வருகிறது என்பது தேர்தல் பிரசாரங்களின்போது தெரியத் தொடங்கியது. வாக்காளர்கள் வேட்பாளர்களை உன்னிப்பாகக் கவனித்தனர். சமூக ஊடகங்கள் பலரையும் தேர்தல்பால் ஈர்த்தது. இருப்பினும், எதிர்கால வாழ்க்கைச் சூழல் கருதி, வாக்காளர்கள் மிகவும் சிந்தித்துச் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை முடிவுகள் காட்டின.

கொவிட்-19 கிருமிப் பரவல், போர்கள், பொருளியல் சண்டைகள் என்று தொடர் நெருக்கடிகளால் ஏற்பட்டு வரும் உற்பத்தி, விநியோக இடையூறுகள், அமெரிக்க அதிபரின் அதிரடி அரசியல் என்று உலகப் பொருளியல் அல்லாடுகிறது. விலைவாசி புது உச்சத்தை எட்டும் அதே தருணத்தில், தொழில்நுட்ப முன்னேற்றமும், செயற்கை நுண்ணறிவும் வேலைகளைத் துரிதமாக மாற்றி வருகின்றன. தம் வேலையையும் வருமானத்தையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமே எனும் பயம் பலரிடமும் எழுந்திருக்கிறது.

இச்சவால்களைத் தேர்தல் பிரசாரங்களில் கட்சிகள் மீண்டும் மீண்டும் பறைசாற்றின. இதையெல்லாம் சமாளிப்பதுடன், சிங்கப்பூரின் தனித்தன்மையையும் தனிச்சிறப்பையும் எதிர்காலத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பும் புதிய அரசாங்கத்திற்கு உள்ளது.

கடந்த 66 ஆண்டுகாலமாக நாட்டைக் கட்டிக்காத்து, மூன்றாம் உலக நாட்டிலிருந்து முதல் தர உலக நாடாகச் சிங்கப்பூரை உருவாக்கிய பழம்பெரும் கட்சியான மக்கள் செயல் கட்சியின் தலைவராக, கட்சியின் கட்டுக்கோப்பையும் சிறப்பையும் பேண வேண்டிய கட்டாயம் பிரதமருக்கு உள்ளது.

கட்சியைத் தொடங்கி 31 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்திய அமரர் லீ குவான் யூவும் அவரிடம் பயின்று, அவரது வழிகாட்டுதலில் செயல்பட்ட திரு கோ சோக் டோங்கும், அடுத்து வந்த திரு லீ சியன் லூங்கும் கட்சியையையும் ஆட்சியையும் பெரும்பான்மை பலத்துடன் நிர்வகித்து வந்திருப்பது அத்தனை பெரிய சவால் இல்லை. புதிய தலைமுறையில், மாறிய உலகின் மாறுபட்ட சிந்தனைகளுடன் அதைத்தொடர்வதுதான் மிகப் பெரிய சவால்.

மசெக ஆட்சி அமைக்கும் என்பதில் எவரிடமும் எந்தக் கேள்வியும் இல்லை. மக்களின் தற்போதைய சவால்களை எப்படி எதிர்கொண்டு சமாளிக்கும் என்பதுதான் பேசுபொருளாக இருக்கிறது. மாறுபட்ட கருத்துகளும் அரசாங்கத்தில் வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. படித்த, பதவிகளில் இருக்கும் உறுப்பினர்களால் எதிர்க்கட்சிகளும் பலம் பெற்று வருகின்றன. அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு ஆளும் கட்சி பதிலளிப்பது முக்கியமாகிவருகிறது. எதிர்க்கட்சிகள் பலம் பெற்று வரும் அதேநேரத்தில், ஆளும் கட்சியில் பழுத்த அனுபவசாலிகள் பலரும் ஓய்வுபெற்றுள்ளதால் புதியவர்கள் அரசியலையும் நிர்வாகத்தையும் பழக வேண்டும்.

கடந்த முறை வென்ற தொகுதிகளைத் தக்கவைத்துள்ள பாட்டாளிக் கட்சி, தொடர்ந்து அதன் பணியினை ஆற்றவேண்டுமென்பதே மக்களின் அவா. பாட்டாளிக் கட்சி, தன்னை மேலும் பலப்படுத்தி, வளர்த்துக்கொள்வதில் இன்னும் சிரத்தையுடன் செயல்பட வேண்டும். நாட்டின் தூண்களில் ஒன்றான இருமொழிக் கொள்கையின் முக்கியத்துவம் குறித்து இம்முறை உறுதியான நிலைப்பாடு கொண்டிருப்பது அக்கட்சியின் சிந்தனை வளர்ச்சியைக் காட்டுகிறது. கொள்கை அறிக்கையைச் சிறப்பாகத் தமிழாக்கம் செய்தது, தமிழ் பேசத் தெரிந்த வேட்பாளரை நிறுத்தியது, தமிழில் பிரசாரம் என்று இந்நாட்டின் அதிகாரத்துவ மொழிகளுக்கு இத்தேர்தலில் அக்கட்சி முக்கியத்துவம் கொடுத்திருந்தது.

புதிய அமைச்சரவை, புதிய குழுவினருடன் 15வது நாடாளுமன்றத்தை அமைக்கும் திரு வோங், அடுத்த ஐந்தாண்டுகளும் கடுமையாக உழைக்க வேண்டும். ஏறிய விலைகள் இறங்குமா, பொருளியல் வளருமா, வேலைகள் நிலைக்குமா, ஓய்வுக்காலத்திற்குச் சிங்கப்பூர் ஏற்ற இடமாக இருக்குமா என்ற எல்லாக் கேள்விகளுக்கும் விரைந்து தீர்வுகளைத் தேட வேண்டும்.

மாற்றத்தை நாடி, உறுதியான இலக்கோடு புதிய பாதையில் நாட்டையும் கட்சியையும் திரு வோங் சிறப்புடன் வழிநடத்தும்போது, மொழி, சமய வேறுபாடின்றி மக்கள் அனைவரும் அவருடன் உறுதியாகக் கைகோக்க வேண்டும்.

மாறிவரும் உலகத்தில் இப்புதிய அணி மாறாத உறுதியோடு செயல்படட்டும்.

குறிப்புச் சொற்கள்