பொறுப்புணர்வும் நல்லொழுக்கமும் தலைவர்களின் தலையாய கடமை

பொறுப்புணர்வும் நல்லொழுக்கமும் தலைவர்களின் தலையாய கடமை

2 mins read
886adbec-3a7b-4411-ac17-4daec06905e7
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரனுக்கு வியாழக்கிழமை (அக்டோபர் 3) ஓராண்டுச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரனுக்கு வியாழக்கிழமை (அக்டோபர் 3) விதிக்கப்பட்ட ஓராண்டுச் சிறைத்தண்டனை தீர்ப்பு சிங்கப்பூர் அரசியல் வரலாற்றில் பதிவான ஆக முக்கியமான சம்பவங்களில் ஒன்று.

பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தத் தீர்ப்பு, அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கோரியதைப்போல் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

நன்னடத்தையிலும் நேர்மையிலும் சிங்கப்பூர் கொண்டிருக்கும் உறுதியான நிலைப்பாட்டை உலகிற்கே வலியுறுத்தும் வகையில் இந்த வழக்கின் தீர்ப்பு அமைந்தது.

உயர்ந்த தலைமைத்துவ பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு உயர்ந்த தரநிலைகளும் உள்ளன. அரசாங்க அதிகாரிகளுக்கு மட்டுமில்லாமல் பொதுவாகவே தலைமைத்துவப் பொறுப்புகள் வகிப்போருக்கும் இது பொருந்தும்.

சமூகத்திற்கும் நாட்டிற்கும் தலைவர்களாக இருப்பவர்களுக்கு எப்போதுமே கூடுதலான பார்வையாளர்களும் இருப்பார்கள். எதையும் கவனத்துடன் கையாள வேண்டும்.

தங்களுக்கான தனிப்பட்ட நேரங்களில் அவர்கள் சாதாரணமாக ஓர் உணவங்காடிக்குச் சென்று உணவருந்தினால்கூட அதனை அலசி ஆராய சிலர் இருப்பர். என்ன சாப்பிட்டார்கள், யாரிடம் பேசினார்கள், என்ன உடை அணிந்திருந்தார்கள் போன்ற தகவல்கள் எல்லாம் சமூக ஊடகங்களில் மின்னல் வேகத்தில் பரவக்கூடும். அனைவரது கையிலும் திறன்பேசி புழங்கும் இக்காலத்தில் இதுபோன்ற போக்கைத் தவிர்ப்பது கடினம்.

ஆனால், எந்தக் காலகட்டத்திலும் சரி, தலைவர்களின் நடத்தை மக்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. தலைவர்கள் தவறாக நடந்துகொண்டால், அவர்களைப் பின்பற்றுபவர்களும் அத்தகைய போக்கு ஏற்புடைய ஒன்று எனத் தவறுதலாகப் புரிந்துகொள்வது இயல்பு என்பது வல்லுநர்களின் கருத்து.

சில சமயங்களில் சரி எது, தவறு எது என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஒரு தரப்புக்குச் சரி எனத் தோன்றுவது மற்றொருவருக்குத் தவறாகப்படலாம். ஆனால், தலைவர்கள் அதற்கும் ஒரு படிமேல் சென்று, இருதரப்புக் கண்ணோட்டங்களையும் ஆராய்ந்து, பகுத்தறிவைப் பயன்படுத்தி நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும். தவறாகப் போய்விடக்கூடிய எதையும் தவிர்ப்பது நல்லது.

இளம் தலைமுறையினரை முறையாக வழிநடத்த சமூகத்தில் நல்ல பண்புநெறிகளை கடைப்பிடிக்கும் தலைவர்கள் தேவை. நம் சமூகத்தின் எதிர்கால வளர்ச்சியைத் தீர்மானிக்கும் அம்சங்களில் தலைவர்களின் பொறுப்புணர்வும் நல்லொழுக்கமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை எல்லோருமே ஒப்புக்கொள்வர்.

அதனை உறுதிப்படுத்தும் வகையில், சிங்கப்பூரின் அரசாங்க அமைப்பும் அரசியலும் எப்போதும் ஊழலற்றதாக விளங்க வேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் அக்டோபர் 3ஆம் தேதி திரு ஈஸ்வரனின் வழக்குத் தொடர்பாக வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

பொதுச் சேவையில் இருப்போர் நேர்மைக்கான ஆக உயர்வான தரநிலைகளைக் கட்டிக்காப்பது அவசியம் என்றும் அந்த அம்சங்களில் பேரத்திற்கு இடமில்லை என்றும் திரு வோங் சுட்டினார்.

ஏறத்தாழ 27 ஆண்டுகாலம் அரசியல் பணியாற்றிய திரு ஈஸ்வரன் நாட்டிற்கு ஆற்றிய பங்கு ஏராளம். ஓர் அமைச்சராக, நாடாளுமன்ற உறுப்பினராக, மக்கள் செயல் கட்சி உறுப்பினராக அவர் சிறந்து விளங்கினார்.

குறிப்பாக, இந்தியச் சமூகத்திற்கும் தமிழ் மொழிக்கும் திரு ஈஸ்வரன் ஆற்றிய பணிகள் பாராட்டுக்குரியவை. அவரின் தற்போதைய நிலை மக்களை அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தினாலும் இந்தச் சம்பவம் நமக்குப் பல பாடங்களையும் புகட்டுவதாக அமைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்