தைப்பூசத் திருவிழாவில் பக்தர்களின் பங்கு

தைப்பூசத் திருவிழாவில் பக்தர்களின் பங்கு

3 mins read
898d617b-44f0-45a6-a055-2986b661e8db
இவ்வாண்டு தைப்பூசம் ஞாயிற்றுக்கிழமையில் வருவதால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இன்று தைப்பூசத் திருவிழா. சிங்கப்பூரின் வீதிகளில் எதிரொலிக்கும் பக்தி முழக்கம் ஒரு நூற்றாண்டைக் கடந்து நம் மண்ணின் அடையாளமாகத் திகழ்கிறது. இவ்விழா சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் பெரும்பாலானோரை இணைக்கும் ஒரு பக்திப் பாலமாகத் திகழ்கிறது. இது, சிங்கப்பூர் வாழ் தமிழ் மக்களின் பண்பாட்டு அடையாளம், ஒரு வரலாற்றுச் சின்னம்.

இன்று உலகம் முழுவதுமே ஆன்மீகத்தின்பால் மக்களின் ஈர்ப்பு அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. சிங்கப்பூரும் இதற்கு விதிவிலக்கல்ல. தைப்பூசம் போன்ற சமயச் சடங்குகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்வதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன.

இன்றைய நிச்சயமற்ற உலகச் சூழல், உடல்நலக் குறைவு, வேலையின்மை குறித்த அச்சம் மற்றும் வாழ்வின் அன்றாடப் போராட்டங்களை வெற்றிகரமாகக் கடக்க ஒரு தெய்வீகத் துணை வேண்டும் என்ற தேடல் மக்களிடையே பெருகியுள்ளது. தனிநபரின் பொருளாதார முன்னேற்றமும் இவ்வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு வழிவகுத்துள்ளது என்பது உண்மையே.

குடும்பத்தினரும் நண்பர்களும் வேறுபாடின்றி ஒன்றுகூடி வழிபடும் நிகழ்வாகவும் தைப்பூசம் வளர்ந்திருக்கிறது. தைப்பூசம் நம் நாட்டை உலக வரைபடத்தில் முன்னிறுத்தியிருப்பது நாம் அறிந்ததே. தமிழகத்தில் மறைந்துபோன பல கூறுகள் இங்கே மதிப்புடன் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாண்டு தைப்பூசம் ஞாயிற்றுக்கிழமையில் வருவதால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். விழாவின் ஒருங்கிணைப்பாளர்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த பதிவுகளை நிறுத்தியதற்கும் உகந்த காரணங்கள் இருக்கும். அதே சமயம், பக்தர்கள் வெகுண்டெழுந்ததிலும் நியாயங்கள் உண்டு. மீண்டும் பதிவுகள் திறக்கப்பட்டு ஓரளவிற்குப் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்ற வகை செய்ததை அனைவரும் வரவேற்க வேண்டும். கூடிய இடங்களைக் கேட்டுப் பெற்றதால், பக்தர்களின் பொறுப்பும் கூடியிருக்கிறது என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். 

தைப்பூசத் திருவிழாவிற்கு ஏற்பாட்டுக் குழு, கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்பே திட்டமிடத் தொடங்கிவிடும். இந்தக் குழுவினர் பல அரசாங்க அமைப்புகள், சிங்கப்பூர் காவல்துறை, போக்குவரத்துத்துறை, போக்குவரத்து அமைப்புகள், ஊர்வலப் பாதையில் இயங்கிவரும் தொழில்கள், குடியிருப்பாளர்கள் எனப் பல்வேறு தரப்பினருடன் கலந்தாலோசித்துச் செயல்பட வேண்டும். இறுதியில், பக்தர்களின் பாதுகாப்பு கருதி, காவல்துறையின் அனுமதிக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு இவ்விழா நடத்தப்பட வேண்டும். 

பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளும் ஒரு நிகழ்வில் ஒழுங்குமுறை இல்லையெனில், விபத்துகளும் தேவையற்ற பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று நடைமுறையில் உள்ள நேர அடிப்படையிலான முன்பதிவு, நேரக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை ‘தடைகளாக’ பக்தர்கள் கருதக்கூடாது. இந்த விதிமுறைகள் அனைத்தும் பக்தர்களின் பாதுகாப்பிற்காகவே உருவாக்கப்பட்டவை.

இதில் பங்கேற்கும் பெரும்பான்மையினர் விழா சுமுகமாக நடைபெறுவதற்குப் பங்களிக்கின்றனர். ஆனால், விழாவின் இறுதி சில மணி நேரங்கள் அப்படி இருப்பதில்லை. இரவு ஏழு மணிக்கு அப்பால், தைப்பூசத்தில் கலந்துகொள்வோர் வேண்டாத இதர பண்புகளை வெளிப்படுத்தத் தொடங்குகின்றனர்.

ஒரு புனிதமான சமயச் சடங்கில் மது அருந்தி, புகை பிடித்து, அதிகக் கூச்சலிட்டு ஒரு கொண்டாட்டத் தினமாக மாற்றுகின்றனர். இத்தகைய முறையற்ற செயல்கள் இவ்விழாவின் ‘பாரம்பரியம்’ என்று கருதுவோரும் உள்ளனர். இதில் இளையர்கள் பலர் இணைந்து செயல்படுவது வருத்தத்தை அளிக்கிறது.

சமூகமாக நாம் அனைவரும் இப்போக்கை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். இவர்கள் திருவிழா ஊர்வலத்திலிருந்து ஒதுக்கப்பட வேண்டுமெனில், இப்போக்கை ரசிப்பதோ, ஊக்குவிப்பதோ கூடாது. தைப்பூசம் ஒரு சமயத் திருவிழா. ஆண்டவனுக்கு நன்றி நவிலும் தினம். வேண்டுகோள்களை நிறைவேற்றும் தருணம். இத்திருவிழாவின் புனிதத்தையும் ஒழுங்கினையும் பாதுகாக்க முயற்சிப்போம். முடியாதது என்பது ஒன்றுமில்லை.

அனைத்துத் தரப்பினரும் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டால், இவ்வாண்டு தைப்பூசம் அமைதியாகவும் மனநிறைவு தரும் நிகழ்வாகவும் அமையுமென்பது திண்ணம்.

குறிப்புச் சொற்கள்