தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய உலகச் சூழலில் சிங்கப்பூரர்களின் தேர்தல் சிந்தனை

4 mins read
07168c92-98ba-4037-b60e-26a07de2a384
சிங்கப்பூர் பொதுத் தேர்தல் மே மாதம் 3ஆம் தேதி - படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் பொதுத் தேர்தல் பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. வாக்களிப்பு நாளான மே மாதம் 3ஆம் தேதியை கட்சிகளும் பொதுமக்களும் மிகுந்த அக்கறையுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

இந்தத் தேர்தல் இதுவரை எதிர்கொண்டிராத உலகச் சூழலின் பின்னணியில் நடக்கவிருக்கிறது. உள்நாட்டிலும் பல புதிய சூழல்களும் சவால்களும் முன்நிற்கின்றன.

இந்தப் புதிய உலகச் சூழலில், நாட்டுக்கும் ஆளும் மக்கள் செயல் கட்சிக்கும் (மசெக) கடந்த ஆண்டு தலைமைப் பொறுப்பை ஏற்ற லாரன்ஸ் வோங் தமது முதல் தேர்தலை எதிர்கொள்கிறார்.

சிங்கப்பூரை வழிநடத்திச் செல்ல மக்களின் வலுவான அங்கீகாரத்தை நாடி நான்காம் தலைமுறைத் தலைவர்கள் முனைப்புடன் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.

வருகிற 14வது பொதுத் தேர்தலில் 18 குழுத் தொகுதிகள், 15 தனித் தொகுதிகள் என 33 தொகுதிகளிலும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை 2020ஆம் ஆண்டைவிட நான்கு இடங்கள் அதிகமாக 97 நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தேர்ந்தெடுப்பர்.

அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடும் மசெக 32 புதிய முகங்களைக் களமிறக்குகிறது.

முக்கிய எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சி மூன்றில் ஒரு பங்கு இடங்களில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டாலும் இத்தேர்தலில் அது இயலாது எனப் பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங் கூறியிருந்தார். கடந்த தேர்தலில் பாட்டாளிக் கட்சி இரு குழுத்தொகுதிகளைக் கைப்பற்றி, 10 இடங்களைப் பெற்றது. 1965ஆம் ஆண்டு சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற பிறகு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி அது.

பிற எதிர்க்கட்சிகளும் படிப்பிலும் பணியிலும் சிறந்த, திறமையான வேட்பாளர்களை ஈர்க்கத் தொடங்கியுள்ளன. 2000களிலிருந்து எதிர்க்கட்சிகளில் சேருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சிங்கப்பூர் முதலாம் உலகத்தரம் வாய்ந்த நாடாளுமன்றத்தைக் கொண்டிருக்க வேண்டுமானால், அதற்கு முதலாம் உலகத்தரம் கொண்ட அரசாங்கமும் எதிர்க்கட்சியும் தேவை என்று சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூ கூறியிருப்பது இன்றைய சூழலுக்கு மிக ஏற்புடைதாய் தோன்றுகின்றது.

ஏப்ரல் 23ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் நாளன்று வேட்பாளர்கள் குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும்.

ஒன்பது நாட்கள் நீடிக்கும் தேர்தல் பிரசாரத்தில் வாழ்க்கைச் செலவினம், வீட்டுடைமை, வேலைகள், மூப்படையும் சமூகம், கூடி வரும் சுகாதாரச் செலவுகள், மாறிவரும் உலக வர்த்தகச் சூழல், புவிசார் அரசியல் முதலானவை ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1959ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் மசெக, உலகில் நீண்ட காலமாக ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிகளில் ஒன்று. மசெகதான் அரசாங்கம் அமைக்கும் என்பதை எதிர்கட்சி உட்பட ஒப்புக்கொள்கின்றனர். ஆனால், வலுவான எதிர்கட்சி இருப்பின், கொள்கை உருவாக்கத்திலும் செயல்பாட்டிலும் மக்களின் விருப்பு வெறுப்புகளை முழுமையாய் தெரிவிக்க வாய்ப்புண்டு என மக்களும் எதிர்கட்சியினரும் நம்புகின்றனர்.

மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான சவால்களுக்குத் தகுந்த தீர்வுகளைக் கண்டறியும் அரசாங்கம் அமைவது முக்கியம். கொள்கை மாற்றங்கள் அல்லது நிதிக் கையிருப்பு மூலம் மட்டுமே சமாளிக்க முடியாத புதிய, சிக்கலான சவால்களைச் சிங்கப்பூர் தற்போது எதிர்கொள்கிறது.

ஒரு காலத்தில் சிங்கப்பூரின் சிறப்புகளின் முக்கியமானதாக இருந்த அனைவருக்கும் கட்டுப்படியாகும் வீட்டுரிமை என்பது தற்போது மனப் பதற்றம் ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது. அதுவும் இளம் தம்பதிகள் பிள்ளைப் பெற்றுக்கொள்வதற்கும் வீட்டுவிலைக்கும் எதிர்மறைத் தொடர்புகள் உருவாகியிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு, பொருளியல், புவிசார் அரசியல் போக்குகள், பெருநிறுவன மறுசீரமைப்பு போன்றவை பாரம்பரிய வேலைகளை மாற்றி வருகின்றன.

குறுகிய கால அல்லது தன்னுரிமைத் தொழில்கள் அதிகரித்து, நிலையான, நீண்டகால வேலைவாய்ப்பு முறை மாறிவரும் சூழலில், சிங்கப்பூரரின் வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்கும் வீட்டு உரிமையும், மத்திய சேமநிதி ஓய்வூதிய சேமிப்பும் தொடருமா எனும் கேள்விகள் மக்களிடையே எழுந்திருக்கின்றன.

சிங்கப்பூர் உருவான காலத்தில் இருந்த அடிப்படைக் கொள்கைகள் இன்றும் மாறவில்லை, எனினும் அவற்றை நிலைநிறுத்துவதற்கான பாதைகள் காலத்துக்கு ஏற்ப உருமாறும் தேவையுள்ளது.

கடந்த காலத்தில் சிங்கப்பூரின் வெற்றிக்கு உதவிய உலகளாவிய நிலைமைகள் இனி இருக்க மாட்டா என்றும் உலகம் நிச்சயமற்றதாகவும், அமைதியற்றதாகவும், நிலையற்றதாகவும் மாறிவருகிறது என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் அண்மையில் கூறினார்.

இந்த முக்கியமான கட்டத்தில், நாட்டை வழிநடத்துவதற்கும், ஒன்றாக முன்னோக்கிச் செல்லும் பாதையை வகுப்பதற்கும் தகுந்த குழுவை சிங்கப்பூரர்கள் தீர்மானிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆளும் மசெக முதல் சிறிய கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் வரை சமூக ஊடகங்களை முழுமையாகப் பயன்படுத்துகின்றனர். மின்னிலக்க உத்திகள், தேர்தல் பிரசாரத்தின் மையக் கூறுகளாக உள்ள இக்காலத்தில், தேர்தல் தொடர்பான பலதரப்பட்ட செய்திகளும் கருத்துகளும் சமூக ஊடகங்களில் கொட்டிக் குவிகின்றன.

அவற்றைப் பகுத்தாய்ந்து, மெய், பொய்களைப் பிரித்துணர்ந்து, சீர்தூக்கிப் பார்த்துத் தேர்தல் காலத்தில் முடிவுகளை மேற்கொள்வது வாக்காளர்களின் பெருங் கடமை. முதல் முறை வாக்களிப்போர், மூத்த வாக்காளர்கள் எவராயினும் நாட்டின் முழுமையான வருங்காலத்தை கருத்தில்கொண்டு வாக்களிப்பது அவசியம்.

குறிப்புச் சொற்கள்