இன்று தீமிதித் திருவிழா. கிட்டத்தட்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் பக்தர்கள் நான்கு கிலோ மீட்டர் தூரம் நடந்துவந்து, தீக்குழி இறங்குவார்கள். மேலும், ஏறக்குறைய ஆயிரம் பெண் பக்தர்கள் விழா இறுதியில் தீக்குழியை வலம் வருவார்கள். இவ்விழாவின் முன்னோட்டச் சடங்குகளில் மேலும் கிட்டத்தட்ட நாலாயிரம் பக்தர்கள் பங்கேற்றிருப்பார்கள். ஏறக்குறைய 100,000 பக்தர்கள் பரவசத்தோடு சமூக ஊடங்கள்வழி இன்று தீமிதி விழாவினைக் கண்டுகளிப்பார்கள். எப்படிப் பார்த்தாலும் இது ஒரு பெரிய திருவிழாதான். இதற்காக உழைப்போர் பட்டியல் மிக நீளமானது.
சிங்கப்பூர்த் தமிழ் இந்துக்கள் 150 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதுகாத்து வரும் பாரம்பரியங்களில் ஒன்று, ஆண்டுதோறும் ஶ்ரீ மாரியம்மன் கோயிலில், திரௌபதி அம்மனுக்காக நடைபெற்று வரும் தீமிதித் திருவிழா. பக்தி, கொண்டாட்டம் என்பதைத் தாண்டி, நூறு ஆண்டுகளைக் கடந்தும் இந்த விழாவை இந்நாட்டு மக்கள் எப்படிப் பாதுகாத்து வருகின்றனர் என்பதே மேலோங்கி நிற்கும் கேள்வி.
நெடுநாளையப் பழக்கவழக்கங்களும் பாரம்பரியங்களும் ஓர் இனத்தையோ, நாட்டினரையோ குறிக்கும் அடையாளங்களாகின்றன. இப்பாரம்பரியங்கள் காலம் காலமாகத் தொடரப்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.
சமயத்தோடு தொடர்புகொண்டதனால் பல பழக்கவழக்கங்கள் நீண்டகாலம் மறக்கப்படாமல் நீடிக்கும். குடும்பத்தில் வழிவழியாகத் தொடரும் தொண்டூழியம், நேர்த்திக்கடனைச் செலுத்த எதிர்பார்த்துக் காத்திருப்போர் என்று பல காரணங்கள் உண்டு. பெரும்பாலும், தாய்மண்ணைவிட புலம்பெயர்ந்து செல்லும் இடங்களில் சடங்கு, சம்பிரதாயங்கள் பொக்கிஷங்களாகப் போற்றிப் பாதுகாக்கப்படுவது இயல்பானது. அது அவர்களுக்கான அடையாளமாகவும் தொன்மத்துடனான தொடர்பாகவும் உள்ளது. தைப்பூசமும் தீமிதியும் சிங்கப்பூரின் திருவிழாக்களாக உருப்பெற்று ஆண்டுதோறும் பலநூறு சுற்றுப்பயணிகளையும் ஈர்க்கின்றன.
எக்காரணமாக இருந்தாலும், இத்தனை ஆண்டுகாலம் நீடித்திருக்கும் ஒரு விழா, அங்கீகரிக்கப்பட வேண்டிய ஒன்றே. இணையத்தில் தீமிதித் திருவிழா எனத் தேடினாலே முதலில் வருவது சிங்கப்பூர் ஶ்ரீ மாரியம்மன் கோவில் தீமிதித் திருவிழாவே.
இத்திருவிழா ஒருநாள் விழாவன்று. மூன்று மாதத் திருவிழா. கொடியேற்றத்தில் தொடங்கி, பல பூசைகளுக்கிடையில் மகாபாரதப் போர் சம்பந்தப்பட்ட முக்கியக் காட்சிகளைச் சடங்குகளாகச் சித்திரித்துக்காட்டி, திரௌபதி அம்மனின் சபதம் நிறைவேறும் உச்சக்கட்ட நிகழ்வே பக்தர்கள் தீக்குழியில் இறங்குவதைக் குறிக்கிறது. தங்கள் கோரிக்கைகள் நிறைவேற வேண்டியோ அல்லது தங்கள் பக்தியைப் பிரதிபலிக்கவோ பலரும் இவ்விழாவில் பங்கேற்கிறார்கள். இத்தகைய சடங்குகள் தமிழ்நாட்டிலேயே அருகி வரும் காலத்தில் சிங்கப்பூர்த் தமிழ் இந்துக்கள் இதனைக் கட்டிக்காப்பது பறைசாற்ற வேண்டிய செய்தி. அதற்கு சிங்கப்பூர் அரசாங்கமே வழிவகுத்தும் கொடுக்கிறது.
தேசிய மரபுடைமை வாரியம் (NHB) தொட்டுணர முடியாத பண்பாட்டுப் பாரம்பரிய விருதை (Intangible Cultural Heritage Award) ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. பாரம்பரியப் பண்பாட்டுப் பழக்கவழக்கங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, அவற்றை உயிர்ப்புடன் வைத்திருப்பவர்களை அங்கீகரிப்பது இந்த விருதின் நோக்கம். ஒரு பாரம்பரியத்தின் நடைமுறைகளை மேம்படுத்தி, அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் தனிமனிதர்களையோ குழுவினரையோ பாராட்டி அவர்களின் பணி தொடர இவ்விருது சன்மானம் வழங்கும்.
இவ்விருதில், ‘சடங்குகள், திருவிழா நிகழ்வுகள்’ என்பது ஒரு பிரிவு. தீமிதித் திருவிழாவை முழுமையாகவோ அல்லது அதன் சில கூறுகளையோ விருதிற்குப் பரிந்துரை செய்வது உத்தமம். முக்கியமாக, மகாபாரதக் கதைகளைச் சடங்கோடுகூடிய நாடகமாக நடித்துக்காட்டும் கலைஞர்களைப் பரிந்துரைக்கலாம். கிருஷ்ணன், அர்ஜுனன், திரௌபதி வேடங்கள் பல தலைமுறைகளைத் தாண்டி வந்திருக்கின்றன. மேலும் 100 ஆண்டுகள் அவை கட்டிக்காக்கப்படுவதில் அனைவருக்கும் பங்குண்டு.
தொடர்புடைய செய்திகள்
இதேபோல், நம்மிடையே மேலும் பல பாரம்பரியங்கள் தொடர்ந்து கொண்டிருக்கலாம். அவை சமயம் சம்பந்தப்பட்டவையாக இருக்க வேண்டுமென்பதில்லை. கைவினைத் திறன்கள், இசை வெளிப்பாடுகள், ஓவிய முறைகள், உணவுத் தயாரிப்புகள், சமூக நடைமுறைகள், விழுமியங்கள் என எத்தனையோ பழக்கவழக்கங்கள் பல தலைமுறைகளாய் வழிவழி பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியங்கள் ஆகின்றன.
இத்தகைய பாரம்பரியங்களே ஒர் இனத்தை வண்ணமயமாக்கும் அடையாளங்கள். தமிழர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டு பழைமையான பண்பாட்டினைக் கொண்டிருப்பவர்கள் என்பதை மற்ற இனத்தவருக்கு எடுத்துரைப்பவை.
நம் பண்பாட்டுப் பாரம்பரியங்களைப் போற்றிக் காத்து, அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்துவது நம் கடமை.

