அதிவிரைவாக அரங்கேறும் அரசியல் திருப்பங்கள், சற்றும் எதிர்பாராத போர் அபாயங்கள், அச்சுறுத்தல் மிகுந்த புவிசார் அரசியல் பதற்றங்கள் என்று நிச்சயமற்ற சூழல் நிறைந்த உலக அரங்கில் சிங்கப்பூரும் நடைபோட்டு வருகிறது.
இக்காலகட்டத்தில் சிங்கப்பூர் தனது வெளியுறவுக் கொள்கைகளில் மிகுந்த கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்படுவது மிக முக்கியம்.
இவ்வாண்டு மே மாதம் பிரதமர் பொறுப்பை ஏற்ற திரு லாரன்ஸ் வோங், தமது முதல் செய்தியாளர் கூட்டத்தில் சிங்கப்பூரின் வெளியுறவுக் கொள்கை குறித்து விளக்கினார்.
சிங்கப்பூர் எந்த நாட்டுடனும் சார்புநிலை எடுக்காது என்ற அவர், அதே நேரத்தில் நியாயமான, சிங்கப்பூருக்கு உகந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
அமெரிக்க அதிபராக டோனல்ட் டிரம்ப் தேர்வுபெற்ற பின்னர், சிங்கப்பூரின் வெளியுறவுக் கொள்கை குறித்து மீண்டும் பிரதமர் வோங் பேசியுள்ளார். அண்மையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், உலக நாடுகளுடனான நட்புறவைப் பேண சிங்கப்பூர் கடுமையாக உழைக்க வேண்டும் என்பதை அவர் சுட்டினார்.
மக்கள்நலனை மேம்படுத்துவதுடன், பொருளியல் நடவடிக்கைகளில் கைகொடுத்து ஒருவருக்கு ஒருவர் உதவி முன்னேற்றம் காண்பதில் நாட்டின் வெளியுறவுக் கொள்கைகள் முக்கிய இடம் வகிக்கின்றன என்பதை, சிங்கப்பூர்த் தலைவர்கள் அக்கொள்கைகளுக்கு அளிக்கும் முன்னுரிமை புலப்படுத்துகிறது.
மிகக் குறுகிய காலத்திற்குள், முதல் உலக நாடாக வளர்ச்சி பெற்று, உலகம் விரும்பும் நாடாக சிங்கப்பூர் வளர்ந்திருப்பதற்கு முக்கியக் காரணம் அதன் வெளியுறவுக் கொள்கைகளே. சிங்கப்பூரின் வளர்ச்சியும் வாழ்வும் மற்ற நாடுகளைச் சார்ந்தே உள்ளது.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவில், மூன்று மடங்காக வணிகம் உள்ளது. சிங்கப்பூரின் பொருளியல், வணிகம் சார்ந்த உலகளாவிய பொருளியல். இயற்கை வளங்கள் குறைவாக இருந்தபோதிலும், சிறிய தீவாக அறியப்பட்டாலும் உலக அரங்கில் செல்வாக்குமிக்க சக்தியாக சிங்கப்பூர் திகழ்வதற்கு பல நாடுகளுடன் சிங்கப்பூர் மேற்கொண்டுள்ள பங்காளித்துவமும் உறவும் காரணம்.
தொடர்புடைய செய்திகள்
நாடுகளிடையே சமத்துவம், பரஸ்பர மரியாதை, இறையாண்மை ஆகியவற்றின் அடிப்படையில் சிங்கப்பூரின் முதல் பிரதமர் அமரர் லீ குவான் யூவும் முன்னோடித் தலைவர்களும் கட்டியெழுப்பிய அரசதந்திர உறவுகள் இன்றும் சிங்கப்பூருக்கு சாதகமாகவே இருந்து வருகின்றன என்றால் அது மிகையாகாது.
சிங்கப்பூரின் வெளியுறவுக் கொள்கை என்பது பொருளியல், இருதரப்பு உடன்பாடுகளுக்கு அப்பாற்பட்ட, நாடுகளுக்கு இடையேயான உறவையும் மையமாகக் கொண்டது. சீனாவுடனும் நட்புடன் இருக்க முடியும். அதேவேளையில், அமெரிக்காவுடனும் அணுக்கமாகச் செயல்பட இயலும்.
மற்ற நாடுகளுக்கிடையே போர், உரசல்கள் ஏற்படும்போது, ஒருதலைப்பட்சமான நிலைப்பாட்டை எடுக்காமல், நலம்பயக்கும் அணுகுமுறையை சிங்கப்பூரால் கடைப்பிடிக்க முடியும்.
ஆசியான், ஏபெக், ஜி20 உள்ளிட்ட பல நாடுகள் இணைந்த அமைப்புகளின் உலகளாவிய செயல்பாடுகளில் சிங்கப்பூர் ஆக்ககரமான பங்களிப்பை வழங்குவதோடு தனது ஆணித்தரமான கருத்தையும் முன்வைக்க முடிகிறது.
ஆயினும், வளர்ச்சியடைந்த நாடாகிய சிங்கப்பூர் மேலும் செழிக்க அண்டை நாடுகள், வல்லரசுகளின் உறவும் பங்காளித்துவமும் எக்காலத்திலும் தேவை.
நாட்டின் தலைவர்கள் உலக அரங்கில் நட்புப் பாராட்டும் வேளையில், மக்களும் வெளியுறவுக் கொள்கைகளில் முக்கியக் கவனம் செலுத்த வேண்டும் என்ற பிரதமரின் கோரிக்கை கருத்தில்கொள்ளத்தக்கது.
பொருளியல் பின்னடைவு, பயங்கரவாத அச்சுறுத்தல், பருவநிலை மாற்றம், இயற்கைப் பேரிடர், சுகாதாரப் பின்னடைவு என சவால்கள் நிறைந்த இன்றைய உலகச் சூழலில், பல இன மக்கள், மூப்படைந்தோர் நிறைந்துள்ள சிங்கப்பூர் தொடர்ந்து சாதித்திட வேண்டுமெனில், தனித்து நிற்க முடியாது. சூழ்நிலைகளைக் கடந்து சாதிக்க அனைத்து நாடுகளின் நட்புறவும் அவசியம். குட்டித் தீவுதான் என்றாலும் உலக அமைதியிலும், வட்டாரப் பாதுகாப்பிலும் சிங்கப்பூருக்குப் பெரும்பங்கு உள்ளது.
நாட்டின் கொள்கைகளை அறிந்துகொள்ளும்போதே, நாடு முன்னெடுக்கும் திட்டங்களைப் புரிந்து செயல்பட முடியும்.
உலகப் பொருளியலைச் சார்ந்தே உள்ளூரின் பொருளியல் உள்ளது என்பதால், வாழ்க்கைச் செலவினம், நிலையான வேலைவாய்ப்பு, உதவி தேவைப்படுவோருக்கு போதிய ஆதரவு என அக்கறைக்குரிய உள்ளூர் சவால்களை சிங்கப்பூர் சமாளிப்பது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு, அரசாங்கம் அனைத்துலக நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவதும் அவசியம். இதில் உடன் பங்காற்ற பிரதமர் விடுத்துள்ள அழைப்பை மக்கள் ஏற்றுச் செயல்படுவது, அனைவருக்கும் நாட்டின் எதிர்காலத்துக்கும் நன்மை பயக்கும்.