சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே பல நூறு ஆண்டுகள் தொடர்பு இருந்திருந்தாலும், சிங்கப்பூரின் தன்னாட்சி தொடங்கியதிலிருந்து அதிகாரத்துவ உறவுகள்வழி கடந்துவிட்ட அறுபது ஆண்டுகள் மிகவும் முக்கியமானவை.
சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு இந்தியாவின் திறனாளர்கள் முக்கியப் பங்காற்றியிருக்கின்றனர். பொறியியல், கட்டுமானம், நிதித்துறை, கணக்கியல், தகவல் தொழில்நுட்பம் எனப் பல்வேறு துறைகளில் அவர்களின் பங்கு இன்றியமையாததாய் இருந்திருக்கின்றது.
எதுவும் முழுமையாக நன்மை பயக்காது, தீமையாகவும் இராது. அது உலக நியதி. ஆகையினால், பல பயன்களின் மத்தியிலும், இந்த உறவின் சில சிக்கலான பரிமாணங்களைச் சமநிலையுடன் ஆராய வேண்டியது அவசியம்.
சிங்கப்பூர் - இந்தியா உறவின் முக்கிய அம்சம், வணிகத் துறையில் கண்ட வளர்ச்சி. சிங்கப்பூரின் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளன. அதேவேளையில் இந்திய நிறுவனங்கள் சிங்கப்பூரைத் தென்கிழக்காசிய நாடுகளின் நுழைவாயிலாகக் கருதுகின்றன.
குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம், நிதிச் சேவைகள், உயிரியல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்தக் கூட்டுறவு குறிப்பிடத்தக்க பலன்களை அளித்துள்ளது. சிங்கப்பூரின் சிறந்த உள்கட்டமைப்பும் இந்தியாவின் பெரிய சந்தையும் இணைந்து இருநாடுகளுக்கும் நன்மை தரும் வணிகச் சூழலை உருவாக்கியுள்ளன. அண்மையில் நடந்த மூன்றாவது அமைச்சர்நிலை வட்டமேசைச் சந்திப்புகள் இதனை மெய்ப்பித்திருக்கின்றன.
இந்தியக் கலைகள் புதியவர்களின் வருகையால் புத்துயிர் பெற்றுக் குலுங்குகின்றன. நூற்றுக்கும் மேலான இந்திய நடன, இசைப் பள்ளிகள் இப்போது இயங்கி வருகின்றன. இந்திய உணவு வகைகளின் பெருக்கம், அனைவரையும் இணைக்கும் பாலமாய் விளங்குகிறது.
பல இன சமூகங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில், இந்தியச் சமூகம் அதிகம் படித்த சமூகமாகவும், அதிக பட்டதாரிகளைக் கொண்ட சமூகமாகவும் கணக்கெடுப்பில் தெரிய வந்திருக்கிறது. அத்துடன், ஐந்தறை, தனியார் வீடுகளில் வசிக்கும் இந்தியர்களின் விழுக்காடும் அதிகமாய் உயர்ந்திருக்கிறது. இவை ஓரளவிற்கு புதியவர்களின் வருகையினாலும், அவர்கள் சிங்கப்பூர்வாசிகளாக ஆகியதாலும் ஏற்பட்ட மாற்றங்கள். இதனால், இந்தியர்களின் மதிப்பு ஓங்கியிருக்கிறது என்பதை உள்துறை அமைச்சர் கா. சண்முகம் அண்மையில் எடுத்துக்கூறியதோடு, மேலும் சவால்கள் இருப்பதையும் அவற்றை ஒன்றுபட்ட இந்திய சமூகமாக எதிர்கொள்ள வேண்டுமென்பதையும் வலியுறுத்தினார்.
இருப்பினும், புதிய இந்தியர்களின் வருகையினால் சில சமூகச் சவால்களும் எழுந்துள்ளன. முக்கியமாக, இந்தியாவின் வர்க்க, சாதிச் சிந்தனைகள் ஓரளவுக்குச் சிங்கப்பூரின் சமூகக் கட்டமைப்பில் ஊடுருவி ஒற்றுமையைக் குலைக்கும் சக்தி வாய்ந்தவை.
தொடர்புடைய செய்திகள்
சுதந்திர சிங்கப்பூரின் கல்வி, வீடு விற்பனைக் கொள்கைகளும், வருமான உயர்வும் நாளடைவில் சிங்கப்பூர்களிடையே சமத்துவம் ஓங்கவும், ஏற்றத்தாழ்வுகள் மறையவும் உதவின. ஆனாலும், மேல்மட்ட இந்தியர்களிடமும் புதிதாய் வந்தவர்களிடமும் சாதிப் பிரிவினைகளின் சிந்தனையும், செயல்பாடுகளும் தென்படுவதாய் அண்மைய நிகழ்ச்சியொன்றில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் சுட்டிக்காட்டினார்.
புதிதாக வந்தவர்கள் இந்நாட்டின் நல்லிணக்கக் கோட்பாடுகளைப் புரிந்துகொண்டு துரிதமாய் மாறுவதற்கு முடிந்தவரை நாம் உந்துகோலாய் இருக்க வேண்டும்.
சிங்கப்பூர் அரசின் பல இன, பல மத, பல கலாசாரக் கொள்கையைப் பின்பற்றிச் செயல்பட வேண்டிய அத்தியாவசியத்தை எடுத்துக்கூற வேண்டும். இந்திய வம்சாவளியினரே தங்களுடைய பாரம்பரியச் சிந்தனைகளை மறுபரிசீலனை செய்து, சிங்கப்பூரின் சமத்துவ கொள்கைகளுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
சமத்துவமும் அவரவர் திறன்மூலம் அளிக்கும் பங்களிப்புமே சிங்கப்பூரின் எதிர்காலத்திற்கான வெற்றிப் பாதை. உலகளாவிய நாடாக உருவெடுத்திருந்தாலும் அதன் தனித்தன்மையான கொள்கைகளின்வழி செயல்பட்டுவரும் நாட்டில் வாழும் வாய்ப்பினைப் பெற்றிருப்பது அரிது என்பதை மனதிற்கொண்டு எதிர்கால வெற்றிகளுக்குப் பாடுபடுவோம்.