உலக நாடுகளைச் சிங்கப்பூர் பக்கமும் அண்டை நாடான மலேசியாவின்மீதும் கவனத்தைத் திருப்பவைத்த வாரம் இது.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 46வது ஆசியான் உச்சநிலை மாநாடு சென்ற வாரம் நடந்தேறியது.
இந்த வார இறுதியில் தற்காப்பு, பாதுகாப்பு உறவுகளைப் பறைசாற்றும் ஷங்ரிலா கலந்துரையாடல் சிங்கப்பூரில் நடந்துவருகிறது.
உறுப்பு நாடாக ஆசியான் மாநாட்டில் சிங்கப்பூரின் பங்கு பெரிது. பிரதமர் லாரன்ஸ் வோங், மக்கள் செயல் கட்சியின் தலைமைச் செயலாளராக முதன்முதலில் தேர்தலைச் சந்தித்து, வலுவான வெற்றிக்குப் பின் தன்னம்பிக்கை மிளிர பன்னாட்டுத் தலைவர்களைச் சந்தித்து சிங்கப்பூருடனான உறவுகளை மறுஉறுதிப்படுத்தினார்.
வெளியுறவு எல்லா நாடுகளுக்கும் முக்கியம் என்றாலும் சிங்கப்பூருக்கு மிக முக்கியமானது என்பதற்குப் பல காரணங்கள் உண்டு.
சிறிய நாடு, இயற்கை வளம் இல்லாத நாடு, வர்த்தகத்தையே நம்பியுள்ள நாடு, பெரிய நாடுகளின் நடுவே பல இன, சமய, கலாசாரங்களைத் தன்னுள்ளே அடக்கியது எனப் பல பரிமாணங்களைக் கொண்டது சிங்கப்பூர்.
உலக அரங்கில் பெரிய நாடுகளுடன் உரையாடுவதற்கும் தொழில் சார்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தங்கள் செய்வதற்கும் வட்டார அளவிலான இத்தகைய அமைப்பு சிங்கப்பூருக்கு இன்றியமையாதது.
பொதுமக்களும் தொழிற்சமூகமும் ஆசியான் உச்சநிலை மாநாட்டிலும் சிங்கப்பூர் பங்குபெறும் இதர வட்டார, உலக அளவிலான அமைப்புகளில் நடைபெறும் அம்சங்களைக் கவனத்தில் கொள்வது நல்லது.
தொடர்புடைய செய்திகள்
பிரதமர் லாரன்ஸ் வோங் உச்சநிலை மாநாட்டின் நிறைவில் சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அரசாங்க நிலையில் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தைகள் வர்த்தக அடிப்படையில் அதிக வாய்ப்புகளாக உருமாறும். எதைச் செய்தாலும் சிங்கப்பூரர்கள் பலன் பெறவே செய்கிறோம்,” என்று கூறினார்.
பெரிய மாநாடுகளின் கொள்கை ரீதியிலான பேச்சுவார்த்தைகள் நடைமுறையில் வாய்ப்புகளாக வணிகம், பொருளியல் மூலம் மக்களைச் சென்றடைகின்றன.
அதிக வர்த்தக வாய்ப்புகள், சுற்றுலாத் துறையில் வாய்ப்புகள், வேலை வாய்ப்பு, மாணவர்களுக்குக் கல்வி சார்ந்த வாய்ப்புகள் என ஏராளமான பயன்களையும் காணக்கூடும்.
அதற்கு மக்களிடையே விழிப்புணர்வும் தேவை. தன்னளவிலான முயற்சிகளை எல்லாம் அரசாங்கம் செய்துவருவதைக் காணமுடிகிறது.
ஆசியான் தலைவர்கள் மத்தியில் பிரதமர் வோங் வலுவான சில கருத்துகளையும் முன்வைத்தார்.
இதுவரை ஆசியான் உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 24 ஒப்பந்தங்கள் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை என்றும் அத்தகைய நிலையை மாற்ற வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தது, தலைவர்கள் மத்தியில் சிங்கப்பூரின் வலுவான குரலை ஒலிக்கச்செய்தது.
சட்ட அடிப்படையிலான உலகிற்கும், தடையற்ற உலகப் பொருளியலுக்கும், அணுக்கமான புரிதலுடனான உறவுக்கும், எல்லாக் கூட்டங்களிலும் உறுப்பு நாடுகளுக்கும் பங்காளித்துவ நாடுகளுக்கும் பிரதமர் அறிவுறுத்தினார்.
ஒத்துழைப்பை மேம்படுத்துவதும் கலந்துரையாடல்மூலம் கருத்துகளைப் பரிமாறுவதும் இத்தகைய கூட்டங்களால் கிடைக்கும் நன்மை.
உலகைப் பூசலும் பதற்றநிலையும் நிலைத்தன்மையின்மையும் சூழ்ந்திருக்கும் நிலையில் ஆசியான் நாடுகள் ஒருங்கிணைந்து நிற்கவேண்டும் என்று சிங்கப்பூர் கேட்டுக்கொண்டது சிங்கப்பூரின் நன்மைக்கு மட்டுமன்று, அனைத்து நாடுகளின் நலனுக்குந்தான்.
அந்த நோக்கமே சிங்கப்பூரில் தற்போது நடந்துவரும் ஷங்ரிலா கலந்துரையாடல்.
உலகின் பல நாடுகள் ஒருங்கே வந்து தற்காப்பு குறித்து கலந்தாலோசிக்கும் தளமாகச் சிங்கப்பூரின் சிறப்புமிக்க இந்தக் கலந்துரையாடல் உருவெடுத்துள்ளது.
அமெரிக்கா - சீனா, இந்தியா - பாகிஸ்தான் போன்ற உறவுப் பதற்றநிலையில் இருக்கும் நாடுகளும் இந்தக் கலந்துரையாடலில் அங்கம் வகிக்கின்றன.
பாப்புவா நியூ கினி முதல் கனடா, பிரேசில், லித்துவேனியா என உலகின் பல மூலைகளிலிருந்தும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உலக, இந்தோ பசிபிக் வட்டாரத்தின் அமைதிக்காகவும் பாதுகாப்பு குறித்தும் பேச வந்துள்ளனர்.
ஆசியான் மாநாட்டில் பிரதமர் வோங் கூறியதுபோல, உலகில் நாடுகளுக்கிடையில் பல சண்டைகள் இன்னும் தொடரும் நிலையில், அமைதியையும் நிலைத்தன்மையையும் நிலைநாட்ட நாடுகள் முனைப்போடு தங்களை ஈடுபடுத்திக்கொண்டு கலந்துரையாட வேண்டும்.
அத்தகைய தளத்தை சிங்கப்பூர் ஒருபக்கம் ஏற்படுத்தி வருகிறது; மறுபக்கம் அவற்றில் கலந்துகொண்டு மற்றவர்களையும் ஊக்குவித்து வருகிறது.
நாட்டின் தலைமைத்துவம் இந்த ஏற்பாடுகளைச் செய்துவரும் நிலையில் மக்கள், இத்தகைய சூழல் எவ்வாறு நன்மை தரும் என்பதையும் அதனைத் தாண்டி உலக நடப்புகளையும் உலகச் சூழலையும் அறிந்து அதற்கு ஏற்ற வகையில் செயல்படுவது சிறந்தது.

