தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரின் சமூக ஒப்பந்தம்: ‘நாம் முதல்’

3 mins read
b8981eea-dbd6-4186-b772-127776839313
பிரதமர் லாரன்ஸ் வோங் தமது தேசிய தினம் பேரணி உரையில்  ‘நாம் முதல்’ என்ற கருத்தை ஆழமாகப் பதிவு செய்தார். - படம்: சாவ் பாவ்

சிங்கப்பூரின் பிரதமர் லாரன்ஸ் வோங், தமது தேசிய தினப் பேரணி உரையில், ‘நாம் முதல்’ என்ற கருத்தை ஆழமாகப் பதிவு செய்தார். இது தனிமனிதர் நலனை மட்டுமே மையமாகக்கொண்ட சிந்தனைக்கு எதிரான, ஒரு புதிய சமூக ஒப்பந்தத்திற்கான அழைப்பாகும். 

கடந்த 60 ஆண்டுகாலமாகப் போட்டித்தன்மைமிக்க உலகில் வளர்ந்த நம்மில் பலரிடம், தன்னைப்பேணித்தனம் சற்று மிகுதியாகக் காணப்படுகிறது என்பதே உண்மை. அது மனித இயல்பாகக்கூட இருக்கலாம். ஆனால், இந்நோக்கு நாம் ஒரு சமூகமாய், நாடாய் வளர உதவாதது என்பதோடு, நம்மைப் பின்னிழுத்துவிடும் என்பதில் ஐயமில்லை.

பிரதமரின் ‘நாம் முதல்’ கருத்தைப் பல ஆண்டுகள், பல்வேறு கோணங்களில் பலரும் கூறியிருந்தாலும், தேசிய சிந்தாந்தமாக முன்னிறுத்தப்படவில்லை. அதனைத் தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் குறிப்பிடுவதற்கு மூல காரணம், அதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதோடு, பிளவுபட்டு வரும் உலகில் பிழைக்க வேண்டுமெனில் இணைந்து இயங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை மனதில் கொண்டும்தான்.

அரசாங்கத்தின் கொள்கைகளால் மட்டும் இந்த இலக்கை எட்டிவிட முடியாது. சிங்கப்பூரில் குடியிருக்கும் ஒவ்வொருவரும் பங்களிக்கும்போதே சாத்தியமாகும் மாற்றம் இது. அரசு ஒரு வழிகாட்டி. அரசாங்கம் சமூக நலத் திட்டங்களை வகுக்கலாம், கொள்கைகளை உருவாக்கலாம். ஆனால் ஓர் உண்மையான ‘நாம் முதல்’ சமுதாயம் உருவாக ஒவ்வொரு சிங்கப்பூரரின் முயற்சியும் ஒத்துழைப்பும் தேவை. நம் வரலாறு, நம் சமூகம், நம் நாடு, நம் சவால்கள், நம் வெற்றிகள் எனும் உணர்வு நம் அனைவரின் மனத்திலும் ஆழப்பதிந்து, அன்றாட வாழ்க்கையை ஊடுருவ வேண்டும். நம்மை அறியாமலேயே வெளிப்பட வேண்டும். பள்ளி தீச்சம்பவத்திலும், திடீர் குழியில் விழுந்தவரைக் காப்பாற்றியதிலும் வெளிநாட்டு ஊழியர்களை நாம் பாராட்டியதற்குக் காரணம், அவர்களின் தன்னலமற்ற செயலே. அதில் ‘நாம்’ முன்னின்றது.

இதனை மனத்தில்கொண்டு செயல்படுபவர்கள் சிலரே. இவர்களில் சிலரைப் பிரதமர் தமது உரையில் எடுத்துக்காட்டினார். இவர்களின் செயல்கள் அக்கறையின் பிரதிபலிப்பு. இந்த அக்கறை ததும்பும் சமுதாயத்தை எப்படி உருவாக்குவது?

அதற்குப் பல தடைகளும் உள்ளன. ‘நான் எவ்வாறு பயன்பெற முடியும்?’ என்ற சிந்தனை வலுப்பட்டிருந்தால் ‘நாம்’ என்ற எண்ணம் மேலெழும்பாது. நம் இன, மொழி, அடையாளங்கள் ஒற்றுமைக்குத் தடையாக இருக்கலாம். இத்தடைகள் தலைதூக்கும்போது, தகர்க்க வேண்டும். கருத்து வேறுபாடுகளை மரியாதையுடன் அணுக வேண்டும். 

‘அப்போது நாமெல்லாம் ஒற்றுமையாக இருந்தோம். இப்போது அப்படியில்லை’ எனப் பழங்காலப் பெருமைகளைப் பற்றியே பேசி, மனத்தால் சோர்வடைவதை விட்டுவிட்டு, இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டுவதில் பெற்றோரும் மற்றோரும் முனைப்பாய் இருக்க வேண்டும்.

நாம் எனும் உணர்வை உருவாக்கப் பெரிய அளவில் போராடத் தேவையில்லை. சிறிய செயல்கள் சக்தி வாய்ந்தவை. ‘நாம் முதல்’ சமூகத்தை உருவாக்க அன்றாடம், சிறிய, தன்னலமற்ற செயல்களின் தொடர்ச்சியான ஓட்டம் தேவை.

அண்டை வீட்டாருக்கு இடையூறு இல்லாமல் பொறுப்புடன் நடந்துகொள்வது, குப்பைகளைச் சரியான முறையில் பைகளில் போட்டுத் தூய்மைப் பணியாளர்களுக்கு உதவுவது, முதியவர்களுக்கு தேவைப்படும்போது உதவி செய்வது, அலுவலகத்தில் அனைவரிடமும் பேதம் பாராமல் நட்பாய் பழகுவது, ஒருவரின் தொழிலையோ, இனத்தையோ வைத்து அவரை எடைபோடாமல் இருப்பது, அனைவருக்கும் சமமான வாய்ப்பினை அளிப்பது எனப் பல வழிகளில் நாம் ஒன்றாகச் சேரலாம்.  

‘நாம்’ என்பது ‘நான்’ என்பதைவிடப் பன்மடங்கு சக்திவாய்ந்தது. இந்த மாற்றத்தை நிரந்தரமாக்க, ஒவ்வொரு சிங்கப்பூரரும் தங்களது அன்றாட வாழ்க்கையில், சிறிய, ஆனால் சக்திவாய்ந்த செயல்களைப் பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.

இது ஓர் இலட்சியம் மட்டுமல்ல, ஒளிமயமான எதிர்காலத்திற்கான வழிகாட்டி, உத்தரவாதம். பிரதமரின் வேண்டுகோள் இப்போது நம் கையில். செயல்முறைப்படுத்த நாம் தயாராக வேண்டும்.

குறிப்புச் சொற்கள்