சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக மே 15ஆம் தேதி லாரன்ஸ் வோங் பதவியேற்றது, உலக அரங்கில் பெரிய பொருளியல்களுக்கு ஈடான சிறப்பைப் பெற்றுள்ள சின்னஞ்சிறு சிங்கப்பூரின் அரசியல் பயணத்தின் மற்றொரு மைல்கல்.
பிரதமர் பதவியை ஏற்பதற்கு முன்னதாக மே 13ஆம் தேதி தமது அமைச்சரவையை அறிவித்தார் திரு வோங். பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லையென்ற போதிலும் திரு கான் கிம் யோங்கை துணைப் பிரதமராக்கியது பெரிய மாற்றமாகவும் ஆச்சரியமூட்டும் விதமாகவும் அமைந்திருந்தது.
அடுத்த பிரதமர் லாரன்ஸ் வோங் என்பது உறுதியானதிலிருந்து, வோங்கிற்கு அடுத்த இடத்தில் யார் வருவார் என்பதில் அரசியல் கவனிப்பாளர்கள், பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் மிகுதியாகவே இருந்தது. அந்தக் கேள்விக்கு புதிய அமைச்சரவை பதில் அளிக்கவில்லை. துணைப் பிரதமர்களான கான் கிம் யோங், ஹெங் சுவீ கியட் இருவருமே பிரதமர் வோங்கைவிட அரசியலில் மூத்தவர்கள். பிரதமர் வோங் கூறியதுபோல தொடர்ச்சியையும் நிலைத்தன்மையையும் கருத்தில்கொண்டு இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவே எண்ணத் தோன்றுகிறது.
இந்த அரசின் பதவிக்காலம் பெரும்பகுதி கடந்துவிட்ட நிலையில் அடுத்த பொதுத் தேர்தலைக் குறிவைத்து, களப்பணிகளிலும் அடித்தள அமைப்புகளிலும் கட்சித் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பதைக் குறிப்பிடுவதுபோலவே அமைச்சரவை வரையப்பட்டுள்ளது. உள்நாட்டில் குடிமக்களும் வெளிநாடுகளில் முதலீட்டாளர்களும் சிங்கப்பூரின் தலைமைத்துவ மாற்றம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூர்ந்து கவனிக்கும்போது தொடர்ச்சியும் தெரியும்; நிலைத்தன்மையும் உணரப்படும்.
திரு வோங் பிரதமராக ஆற்றிய முதல் உரையில், சிங்கப்பூரின் சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த முதல் பிரதமர் என்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்டார்.
சிங்கப்பூரின் எளிமையான தொடக்கமும் பரிணாம வளர்ச்சியுமே வரலாற்றுப் பாடங்களிலும் தலைவர்களின் முழக்கமாகவும் இருந்துவந்த நிலையில், இன்றைய இளையர்களைப் புரிந்து அவர்களின் தேவையறிந்து அவர்களோடு இணைந்து செயல்படும் துடிப்பை திரு வோங் கொண்டிருக்கிறார் என்பதை அவரது உரையிலிருந்து உணரமுடிகிறது.
சிரமப்பட்டால்தான் முன்னேறமுடியும்; முன்னோர்களின் கடின உழைப்பே இன்றைய செழிப்புக்குக் காரணம்; சிறந்த தேர்ச்சியே பல வாய்ப்புகளைப் பெற்றுத்தரும் போன்ற கூற்றுகள் இக்கால இளையர்களில் பெரும்பாலானோருக்கு ஊக்கமூட்டுகின்றனவா என்பது கேள்விக்குறியே.
பருவநிலை மாற்றம், நீடித்த நிலைத்தன்மை போன்றவற்றில் அதிக நாட்டம் கொண்டுள்ள அவர்கள், வேலை, வாழ்க்கைத் தொழில்களிலும் வேறு பாணியைக் கடைப்பிடிக்கின்றனர். அதிகமானோர் சுயதொழில் அல்லது தங்கள் விருப்பத்தின்படி அமையும் வேலைகளுக்கே முன்னுரிமை கொடுக்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
வருங்காலத் தலைமுறையினரின் சிந்தனைகளையும் தேவைகளையும் கருத்தில்கொண்டு சிங்கப்பூரின் எதிர்காலம் திட்டமிடப்படும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் 30, 40 வயதுகளில் உள்ள இளையர்களுக்கு தமது குழுவில் சேர அழைப்பு விடுத்துள்ளார் திரு வோங்.
‘முன்னேறும் சிங்கப்பூர்’ இயக்கத்திற்கு தலைமையேற்று, கடந்த ஈராண்டுகளாக சமூகத்தின் எல்லாத் தரப்பு மக்களிடமும் உரையாடி வந்துள்ள திரு வோங், வெவ்வேறு நிலைகளில் உள்ள சிங்கப்பூரர்களின் தேவைகள், கவலைகள், எதிர்பார்ப்புகள், விருப்புகள் என பலதரப்பட்ட அம்சங்களை அறிந்துள்ளார்; ஆராய்ந்துள்ளார் எனலாம்.
திட்டங்களும் செயலாக்கங்களும் திறமிக்கதாகவும் நேர்த்தியாகவும் இருந்தபோதும், சிங்கப்பூரிலும் அனைத்துலக அளவிலும் எதிர்கொள்ளும் பெரும் சவால்களை திரு வோங் சமாளிக்க வேண்டும்.
சீரான பொருளியல் வளர்ச்சியால் பலனடைந்த காலம் மாறி, பணவீக்கத்தால் வாழ்க்கைச் செலவினம் கூடும் காலமாக உள்ளது. வங்கிகளின் கடன் வட்டி விகிதம் அதிகரித்து வருகிறது. இத்தகைய நிலையில் மக்களுக்கு அந்தத் தாக்கங்களைக் குறைக்கும் வழிகளை நிதியமைச்சராகவும் தொடர்ந்து பொறுப்புவகிக்கும் பிரதமர் கவனிக்கவேண்டி இருக்கும்.
அரசியல், பொருளியல் சிக்கல் மிகுந்த, நிலைத்தன்மையில்லாத உலகச் சூழல், சிங்கப்பூர் எதிர்கொள்ளும் மற்றொரு சவால். தனித்துவமிக்க வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றும் சிங்கப்பூர் அனைத்துத் தரப்பினருக்கும் நட்புநாடாக விளங்குகிறது. அத்தகைய நட்புறவைத் தொடர்ந்து பேணுவதோடு வலுப்படுத்தும் பொறுப்பும் பிரதமர் வோங்கிற்கு உள்ளது.
எத்தனை இடர்களை எதிர்கொண்டாலும், இனி வரும் காலம் இன்னும் சிறப்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கை ஒளியை அனைவருக்குள்ளும் விதைத்துள்ள பிரதமர், நாட்டின் வரலாற்றில் அடுத்த அத்தியாயத்தை இணைந்து எழுத அனைவரையும் அழைத்துள்ளார். அனைவரும் அவரவருக்கு ஏதுவான வழிகளில் தோள்கொடுத்து சிங்கப்பூரை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வோம்.

