சிங்கப்பூர் - மலேசிய உறவு என்பது தொப்புள்கொடி உறவு. அவ்வப்போது பிணக்குகள் ஏற்பட்டாலும் எந்தக்காலத்திலும் ஒன்றையொன்று விட்டுக்கொடுக்காத பங்காளி உறவு.
மலேசியாவிலிருந்து 1965ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் நாளன்று சிங்கப்பூர் பிரிந்த நாளிலிருந்து இரு நாடுகளிலும் எத்தனையோ பிரச்சினைகள், ஏற்றத்தாழ்வுகள், வளர்ச்சிகள், மேம்பாடுகள், மாற்றங்கள். அனைத்தையும் கடந்து அண்டை நாட்டு உறவுக்கு முதல் மரியாதை கொடுத்து போற்றி வருகின்றனர் நம் தலைவர்கள்.
அந்த வகையில் புருணை, மலேசியாவிற்கு லாரன்ஸ் வோங் பிரதமராக மேற்கொண்ட முதல் அறிமுகப் பயணமே வெற்றிப் பயணமாக அமைந்துள்ளது.
இரு நாட்டுக்கும் இடையில் இன்னும் தீர்க்கப்படாத தண்ணீர், வான்வெளி, கடற்துறை விவகாரங்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று பிரதமர் வோங்கும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் ஒன்றுபட உறுதியளித்துள்ளனர்.
இரு நாடுகளும் இன்னும் பல அம்சங்களில் உடன்பாடும் ஒத்துழைப்பும் கண்டு அதன்வழி, உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இருவரும் ஆர்வம் காட்டியுள்ளனர்.
சிங்கப்பூருக்கான தண்ணீர் முதல், உணவுப் பொருள்கள், வீட்டுத் தளவாடங்கள், ஊழியர்கள், திறனாளர்கள் வரை பலவற்றையும் மலேசியாவிலிருந்து பெறுகிறோம்.
அதேபோல் மலேசியாவின் முக்கிய முதலீட்டு நாடாக சிங்கப்பூர் உள்ளது.
ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான இரு நாட்டு மக்களும் உணவு, கலாசாரம், விழாக்கள் என்று எல்லாவற்றிலும் ஒத்திருப்பவர்கள்.
தொடர்புடைய செய்திகள்
உலகிலேயே மிகவும் பரபரப்பான வான்வெளி, தரைப் பாலத் தொடர்புகளுடன் இருநாட்டுத் தொடர்பை மேலும் அதிகரிக்கவும் விரைவாக்கவும் சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருவுக்கும் இடையே விரைவு போக்குவரத்து ரயில் சேவை தொடக்கம் காண உள்ளது.
பொருளியல் தொடர்புகளை வலுப்படுத்த சிங்கப்பூர் ஜோகூர் சிறப்புப் பொருளியல் வட்டாரமும் தயாராகி வருகிறது.
இவை, மக்களின் நடமாட்டத்துடன் பொருள்களையும் முதலீடுகளையும் இருநாடுகளுக்கும் இடையே பெருக்குவதோடு இரு நாடுகளையும் மேலும் நெருக்கமாக்கி இருதரப்புக்கும் பலன் விளைவிக்கும்.
சிங்கப்பூரும் மலேசியாவும் இணைந்து செயல்பட்டு கூட்டாக போட்டித்தன்மையை மேம்படுத்தி அதிகளவு முதலீடுகளை இந்த வட்டாரத்திற்குள் ஈர்ப்போம், இரு நாடுகளுக்கும் வெளியே உள்ள பெரிய அளவிலான போட்டியிலும் சேர்ந்து வெல்வோம் என்று நட்புக்கரம் நீட்டியுள்ளது சிங்கப்பூர். மலேசியாவும் அக்கரத்தை இறுகப்பற்றிக் கொண்டுள்ளது.
அதேபோல் சிங்கப்பூருக்கும் புருணைக்கும் இடையில் உள்ள தனித்துவமிக்க உறவை மேலும் உறுதிப்படுத்தும் பேச்சு வார்த்தைகளை பிரதமர் வோங் நடத்தியுள்ளார்.
உணவுப் பாதுகாப்பு, மருந்து விநியோகச் சங்கிலி, நீடித்த நிலைத்தன்மை, பசுமை எரிசக்தி, பொதுச் சேவை, கல்வி பரிமாற்றங்கள் போன்ற அம்சங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இன்னும் பல துறைகளில் புரிந்துணர்வை வலுப்படுத்தவும் திட்டம் உள்ளது.
உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர், சுதந்திரம் பெற்ற 59 ஆண்டுகளில் மனித வளத்தையும் ஆற்றல்மிகு பொருளியல் கட்டமைப்பையும் கொண்டு வளர்ச்சியடைந்த சிறந்த பொருளியலைக் கொண்ட நாடாக உருவாகி இருப்பதற்கு நாட்டின் மீது அக்கறை கொண்ட தலைவர்களும் நாட்டின் வளர்ச்சியில் பங்குகொண்ட குடிமக்களும் காரணம்.
சிங்கப்பூர்ச் சிற்பிகள் செதுக்கிய கொள்கை அடிப்படையிலான வெளியுறவுத் திட்டம் சிங்கப்பூர் இன்றுவரை மற்ற நாடுகளுடன் பேணிவரும் நல்லுறவுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துத் தந்துள்ளது.
அமைதிக் காலத்திலும் உலகின் பல இடங்களில் வெவ்வேறு தருணங்களில் ஏற்படும் அச்சுறுத்தல்கள் காரணமாக பதற்றநிலை ஏற்படும் காலத்திலும் சார்பின்மை இல்லாமல் நாட்டின் நலனுக்கும் கொள்கைக்கும் மட்டுமே முன்னுரிமை அளித்து வெவ்வேறு நாடுகளுடனும் வட்டார, உலகளாவிய அமைப்புகளுடனும் உறவுகளைப் பேணி, வளர்த்து, காத்து வருகிறது சிங்கப்பூர்.
இந்த நட்புறவின் முக்கியத்துவத்தை நான்காம் தலைமுறைத் தலைமைத்துவம் தொடர்ந்து பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை பிரதமர் வோங்கின் அண்மைப் பயணம் ஏற்படுத்தியுள்ளது.

