அனைவரின் ஆதரவோடும் அடுத்த இலக்கை எட்டுவோம்

3 mins read
851518bf-2f54-4513-8575-af594f93f46e
படம்: - தமிழ் முரசு

சிங்கப்பூர் வரலாற்றில் வலுவாகத் தடம்பதித்து மூன்று தலைமுறைத் தமிழர்களின் அடையாளமாய் நிலைத்து நிற்கும் இந்நாட்டின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு, பல சவால்களைக் கடந்து, தனது 89வது ஆண்டை நிறைவுசெய்துள்ளது.

1935ஆம் ஆண்டு பிறந்த முரசு, இரண்டாம் உலகப்போர், காலனித்துவ ஆட்சி, தன்னாட்சிக் காலம், மலேசிய மாநிலமாக இருந்த ஆண்டுகள், சுதந்திர சிங்கப்பூர் என்று இந்நாட்டின் வளர்ச்சியோடும் மாற்றங்களோடும் தன்னை ஒன்றிணைத்துக் கொண்டுள்ளது.

தொடக்கம் முதலே நாட்டின், சமூகத்தின் கொள்கைகளுக்கும் சிந்தனைகளுக்கும் ஏற்ப தொடர்ந்து தகவமைத்துக்கொள்ளும் பாணியைத் தமிழ் முரசு பின்பற்றி வருகிறது.

சிங்கப்பூரின் தன்னிகரற்ற தமிழர் தலைவரான தமிழ் முரசின் நிறுவனர் கோ.சாரங்கபாணி அதற்கான அடித்தளத்தை தொடக்கத்திலேயே வலுவாக இட்டுவிட்டார்.

தமிழ்நாட்டில் வேர்விட்ட பகுத்தறிவுச் சிந்தனையை எதிரொலிக்கும் சீர்திருத்தக் குரலாகத் தொடங்கிய தமிழ் முரசின் பயணம், குறுகிய காலத்திலேயே சிங்கப்பூர்த் தமிழர்களின் குரலானது.

அந்தக் குரல் பிசிரற்று ஒலிக்க, தலைசிறந்த செய்தியாளர்களை உருவாக்கியது.

இந்நாட்டு மக்களின் கல்வி அறிவையும், மொழி ஆற்றலையும், இலக்கிய ஆர்வத்தையும் வளர்ப்பதில் தமிழ் முரசு ஆற்றிய பணிக்கு வரலாறே சான்று. சிங்கப்பூர் மூத்த படைப்பாளர்கள் முதல் இன்று பெயர்பெற்று விளங்கும் படைப்பாளர்கள் வரை பலரும் மாணவப் பருவத்திலேயே மொழி ஆர்வத்தை வளர்க்க களம் அமைத்துள்ள தமிழ் முரசில் வளர்ந்தவர்கள்.

இணையத்தில் இயங்கத் தொடங்கியபின், எழுத்தோடு ஒலி ஒளியிலும் திறன் பெற்று வருகிறது முரசு.

வாசகர்கள் எளிதாகச் செய்திகளைப் படிப்பதுடன், காண்பதற்கும் கேட்பதற்கும் ஏற்ப இணையத்தளங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. சமூக ஊடகத் தளங்களுக்கென்றே தனிப்பட்ட வகையில் செய்திகள் உருவாக்கப்படுகின்றன. காணொளிகள், கருத்துக்கணிப்புகள், ஊடாடும் உள்ளடக்கங்கள் அனைத்தும் தமிழ் முரசு சமூக ஊடகப் பக்கங்களில் இடம்பெறத் தொடங்கிவிட்டன. தமிழ் முரசு செயலி அன்றாடச் செய்திகளைத் திறன்பேசிமூலம் அனைவரையும் உடனுக்குடன் அடையும் புதிய ஊடகமாக உருவெடுத்திருக்கின்றது.

செயற்கை நுண்ணறிவுக் காலத்தில் இப்போது அடியெடுத்து வைக்கும் தமிழ் முரசு, மேலும் புதிய வழிகளில் செயல்பட வேண்டும்; புதிய முறைகளைக் கைக்கொள்ள வேண்டும்.

சமூக ஊடக, செயற்கை நுண்ணறிவு மாற்றங்கள் நூறாண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறும் மிகப்பெரிய மாற்றம். 19ஆம் நூற்றாண்டின் தொழிற்புரட்சி, 20ஆம் நூற்றாண்டின் இணையப் புரட்சி போன்றது. இது வேறு உலகம். இதில் பலருக்கும் பலவாகவும் அவரவருக்கு அதுவாகவும் செய்தி ஊடகம் இருப்பது மிகக் கடினமான செயல்.

எதிர்காலத்தை உறுதிப்படுத்த இளைய தலைமுறையினரை ஈர்க்கவேண்டும். தமிழ் முரசோடு பல ஆண்டுகாலம் பயணித்தவர்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும்.

சமூக மேம்பாட்டுக்கு குரல் கொடுப்பதும் வழிகாட்டி உதவுவதுமே முரசின் இலக்கு. அந்த இலக்கை அடைய சமூகத்துடன் இணைந்து செயல்படுவதே அதன் வழி.

முதல் உலக நாடாக வளர்ச்சி கண்டுள்ள சிங்கப்பூரில் தமிழ்ச் சமூகம் எதிர்நோக்கும் பெரிய சவால், இந்நாட்டில் தமிழும் தமிழ்ப் புழக்கமும் தொடர்ந்திருக்கச் செய்வது.

இதில் தமிழ் முரசுக்குப் பெரும்பொறுப்புள்ளது.

மக்களைத் தமிழ் படிக்க, வாசிக்க, எழுத வைத்த முரசின் அடிப்படையான பணி தொடரும். வெவ்வேறு வழிகளில், பல்வேறு தளங்களில்.

சிங்கப்பூரின் தமிழ்ச் செய்தி ஊடகமாக சமூகத்துடன் கைகோத்து இப்பணியை தமிழ் முரசு தலைமேற்கொண்டு செயலாற்றும்.

முரசின் பணி சிறக்கவும் நீடித்து நிலைக்கவும் பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி, சமூகம், வர்த்தகம், அரசாங்கம் ஆகியோர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

தமிழ் முரசின் இப்பயணத்தில் அனைவரும் இணைந்து அடுத்த 50 ஆண்டுகளுக்கான பாலத்தை அமைப்போம்.

குறிப்புச் சொற்கள்