தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எல்லைகளை விரிவாக்கி, எதிர்கால வெற்றியை உறுதிசெய்வோம்

3 mins read
9ff438a7-d401-4710-b734-a7d1954f85f5
பட்டொளி வீசிப் பறக்கும் சிங்கப்பூர்க் கொடி. - படம்: பிஸினஸ் டைம்ஸ்

கண்ணீரோடு பிறந்து, கடகடவென்று வளர்ந்து, 60 ஆண்டுகளில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது சிங்கப்பூர்.

நம் நாட்டின் இந்தப் பெருமைமிகு தருணத்தை ஒன்றுபட்ட மக்களாகக் கொண்டாடிக் களிக்கும் அதேநேரத்தில், இதையெல்லாம் சிதறிடிக்கக்கூடிய உலகச்சூழல் உருவாகி வருவதையும் நாம் காண்கிறோம். 

அறுபது ஆண்டுகளுக்கு முன்னர், எதிர்காலம்குறித்த கேள்விகளை உதறித்தள்ளிவிட்டு, ஒரு நாடாகச் சிங்கப்பூரை ஒன்றுகூடிக் கட்டி எழுப்புவோம் என்று அன்றைய பிரதமர் லீ குவான் யூ முழக்கமிட்டார்.

அந்த முழக்கத்தில் மக்கள் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும், தரமான அரசாங்கமும் மக்களின் உழைப்பும் முதல் உலகத் தர நாடாகச் சிங்கப்பூரை வளர்த்தெடுத்தது.

அதே நம்பிக்கையும், ஒற்றுமையும் இப்போது இன்னும் அதிகமாக வேண்டும் என்று கோரியுள்ளார் பிரதமர் லாரன்ஸ் வோங்.

கடந்த 60 ஆண்டுகளில் முன்னேற்றத்திற்கான பாதையினை உன்னிப்பாகக் கவனித்து, தேர்ந்தெடுத்திருக்கும் சிங்கப்பூருக்கு, இப்பாதைகள் குறுகி வருகின்றன. நிச்சயமற்றதன்மை அதிகரித்து வரும் உலகச் சூழலில் புதிய சவால்களைச் சமாளிக்க சிங்கப்பூரர்கள் ஒன்றுபட வேண்டும்.

எல்லா மக்களுக்கும் வாய்ப்பும் வசதிகளும் சேவைத்தரமும் கொண்ட நாடாகச் சிங்கப்பூர் நிலைத்திருக்க வேண்டுமானால், முடிவெடுப்பதிலும் செயல்பாட்டிலும் ஒருங்கிணைவதிலும் இதுவரை இல்லாத அளவுக்குத் திறனுடன் திகழ வேண்டும் என்று பிரதமர் கூறியிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

பிற நாடுகளிலிருந்து வந்தவர்களும் இங்கே பல தலைமுறைகளாக இருப்பவர்களும் கைகோத்தால் சவால்களை எதிர்கொள்ளலாம். அந்த ஒன்றிணைந்த உழைப்பே சிங்கப்பூரின் வெற்றிக்கு அடித்தளம். 

புவியியல், அரசியல் போட்டிகளால் மாறிவிட்ட உலகத்தில் போட்டித்தன்மையை வலுப்படுத்தவும் ஆற்றல்களை வளர்க்கவும், எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் சிங்கப்பூர் தனது பொருளியல் உத்திகளுக்குப் புத்துணர்ச்சியை அளித்து வருகிறது. 

இதில் சிங்கப்பூர்களாகிய நாம் என்ன செய்யவேண்டுமென்பதைச் சிந்திக்க வேண்டும்.

மூப்படையும் சமூகம் நாட்டின் உற்பத்தித் திறனை மிகவும் பாதிக்கும். அதனைச் சமாளிப்பதற்கு வரும் சந்ததியினர் தொழில்நுட்பத்தின் துணைகொண்டு, உற்பத்தித்திறனை பன்மடங்கு உயர்த்துவது இன்றியமையாதது. அதற்குப் பாடத்திட்டமும் அறிவுத்திறனும் துணைநிற்க வேண்டும்.

கசடறக் கற்க வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும், புதிய அறிவுத் திறன்களை அறிந்து கொள்வதில் நாட்டம் காட்ட வேண்டும். செயற்கை நுண்ணறிவு நம்மை வீழ்த்துவதற்கு முன் அதனை நம் முன்னேறத்திற்கான கருவியாய் ஆக்கிக்கொள்ள வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டு திறனாளர்களையும் வளங்களையும் வரவேற்று உடன்சேர்ந்து செயல்படச் செய்ய வேண்டும்.

பொருளியல் வளர்ச்சிக்கு நாட்டின் எல்லைகளைத் தாண்டிச் செயல்படுவது அத்தியாவசியமாகிறது.

மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சி குறைந்துவரும் இத்தருணத்தில் சுற்றியுள்ள நாடுகளையும், வேகமாக வளர்ந்துவரும் ஆசியக் கண்டத்தையும் பயிற்சிக்கூடமாகவும் தொழில் மையமாகவும் நாம் கொள்ள வேண்டும்.

சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்குத் தடங்கலாய் அமையும் சவால்களை எதிர்கொள்வோம். உலகில் பெருகிவரும் மோதல்களைச் சமூக ஊடகங்கள் நம் இல்லத்திற்குள் கொண்டுவருவதால் நல்லிணக்கத்தை கட்டிக்காப்பது மிகவும் கடினமென்றாலும் ஒற்றுமையாகச் செயல்படுவது நம் கடமை.

இது சிங்கப்பூருக்கு வைர விழா ஆண்டு. தொன்மையான தமிழ், சீன மரபுகளில் 60 ஆண்டுகள் என்பது ஒரு முழுமையின் நிறைவு.

ஒரு முழு சுழற்சியை வெற்றிகரமாகக் கடந்து அடுத்த சுற்றில் காலடி எடுத்து வைத்திருக்கும் பொழுதில், கடந்து வந்த பாதையை நினைவுகூர்கிறோம். வெற்றியைக் கொண்டாடுகிறோம். அதேவேளையில் எதிர்காலத்தைக் கட்டமைப்பது பற்றியும் திட்டமிடுகிறோம்.

ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையுடன், உலகில் அதிகமான தனிமனிதர் வருமானத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக உயர்ந்து உள்ளோம். இந்தப் பெருமையைக் கட்டிக்காப்போம். சிந்தனையிலும் செயலிலும் மேலும் சிறப்போம். நம்பிக்கையும் வளமும் நிறைந்த எதிர்காலத்தை அமைப்போம்.

குறிப்புச் சொற்கள்