சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் ஒருங்கிணைப்பையும் தலைமைத்துவப் பண்புகளையும் புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் இந்தியச் சமூக ஈடுபாட்டு, மேம்பாட்டுக் குழு (‘INEI’ - Indian Engagement and Development Initiative) எனும் புதிய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழில் இக்குழுவின் உட்கருத்தை மையமாகக்கொண்டு, ‘இணை’ என்றும் அழைக்கலாம்.
அரசாங்கத்தின் ஆதரவோடு செயல்படும் இக்குழு, துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் தலைமையில் கலாச்சார, சமூக, இளையர்துறை அமைச்சின் கீழ் ‘இணை’ இயங்கும்.
இக்குழுவின் செயல்பாடுகளை அனைத்து இந்திய அமைப்புகளுக்கும் எடுத்துரைக்கும் வண்ணம் இணையின் முதல் கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது.
ஒருங்கிணைந்த செயல்பாட்டின் அவசியம்
சமூக அமைப்புகளுக்கிடையே நிலவும் இடைவெளிகளைக் குறைப்பது ‘இணை’யின் நோக்கங்களில் ஒன்று.
நமது சமூகத்தில் பல அமைப்புகள் தத்தம் துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டாலும் அவை பெரும்பாலும் தனித்தே இயங்கி வருகின்றன.
இந்த நிலையை மாற்றி, வளங்களையும் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளும் ஒரு கூட்டமைப்பின் அடிப்படையிலான அணுகுமுறையை இணை முன்வைக்கிறது.
அமைப்புகளுக்கிடையில் கூட்டு முயற்சி இடம்பெறும்போது, அதன் பலன், சவால்களைச் சந்தித்துவரும் மக்களைச் சென்றடைவது உறுதி.
தொடர்புடைய செய்திகள்
சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும், மொழி, சமய பாகுபாடுகளின்றி ஒன்றிணைக்கும் ஒரு பாலமாக இணை செயல்படும். ‘சமூக உதவி’ என்ற நிலையிலிருந்து ‘சமூகத் தூண்டுதல்’ என்ற நிலைக்கு நாம் மாற வேண்டிய தருணம் இதுவென்று மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை தம் உரையில் கூறினார்.
‘இணை’யின் முக்கிய இலக்குகள்
இணை மூன்று முக்கியமான இலக்குகளைக் கொண்டுள்ளது. முதலாவது, வாழ்க்கைப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பிரிவினருக்கு மேம்பட்ட ஆதரவு வழங்குதல்.
இரண்டாவது, சிங்கப்பூர் இந்திய அடையாளத்தை வலுப்படுத்துதல்.
மூன்றாவது, இளம் தலைவர்களை உருவாக்கி, அவர்களுக்குப் பொறுப்புகளை வழங்குதல்.
குறிப்பாக, சமயம், சமூகம்-பொருளியல் நிலை, கலாசாரம்-இளையர்-விளையாட்டு, மொழி-பாரம்பரியம்-கலை ஆகிய நான்கு முக்கியத் தூண்களின் கீழ் செயல்திட்டக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை ஆலோசனைக் குழுக்களாக மட்டுமில்லாமல் களத்தில் இறங்கி, செயல் திறனால் பலன்களை எட்டும் குழுக்களாகத் திகழும்.
இச்செயல்திட்டக் குழுக்களில் இளம் தலைவர்கள் திட்டங்களை முன்னின்று நடத்துவதும், மூத்த தலைவர்கள் அவர்களுக்கு வழிகாட்டுவதும் ஆரோக்கியமான தலைமைத்துவ மாற்றத்தை உறுதி செய்கிறது.
இக்குறிக்கோள்களை நடைமுறைப்படுத்த, நற்பணிப் பேரவையும் சிங்கப்பூர் இந்தியர் வர்த்தகத் தொழிற்சபையும் (SICCI) சிண்டாவுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
சமூகத்தின் கடமையும் பொறுப்பும்
அரசாங்கமும் சமூக அமைப்புகளும் வழங்கும் உதவிகளைப் பெற்றுக்கொள்வதோடு நமது கடமை முடிந்துவிடுவதில்லை. உதவிபெறும் நிலையில் இருக்கும் குடும்பங்கள், அந்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தித் தங்களின் நிலையை உயர்த்திக்கொள்ள வேண்டும். அதேவேளையில், வசதி படைத்தவர்களும் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற இந்தியர்களும் தங்களின் பங்களிப்பைச் சமூகத்திற்குத் திரும்ப வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
ஒற்றுமையும் நல்லிணக்கமும்
‘இணை’ என்பது மொழி, சமய எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. பல இந்தியச் சமய அமைப்புகள் ஒன்றிணைந்து சிறைச்சாலையில் இருப்பவர்களின் மறுவாழ்வுக்காகப் பல ஆண்டுகாலம் பாடுபட்டு வருவது இதற்கு ஒரு சிறந்த சான்று. அனைவரும் ஒரு பொதுவான இலக்கிற்காகக் கைகோக்கும்போது, ஒட்டுமொத்தச் சமூகத்தின் நல்லிணக்கம் வலுப்படும்.
இணை என அழைக்கப்படும் இந்தியச் சமூக ஈடுபாட்டு, மேம்பாட்டுக் குழு மூலம், வலிமையான, தன்னிறைவு பெற்ற ஒற்றுமையான இந்தியச் சமூகத்தை வளர்த்தெடுக்க முழு ஆதரவையும் வழங்கி ஒத்துழைப்போம்.

