தொடக்கக் கல்வியில் புதிய சிந்தனை

தொடக்கக் கல்வியில் புதிய சிந்தனை

கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

27 Sep 2026 - 5:30 am

2 mins read

சிங்கப்பூரின் கல்வி முறைமீது பெற்றோர் தொடர்ந்து வலுவான நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதை கொள்கை ஆய்வுக் கழகத்தின் அண்மை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

90 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட பெற்றோர் நமது கல்வி முறையை வெகுவாகப் பாராட்டுகின்றனர்.

அதிக மன அழுத்தத்தைத் தரும் தேர்வுகளிலிருந்து விலகி, நற்பண்பு விதைப்பு, சமூகத்தில் மற்றவர்களுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்ளல், முழுமையான ஆளுமை மேம்பாடு ஆகியவற்றை நோக்கிய மாற்றத்தை பெற்றோர் வரவேற்கின்றனர்.

தொடக்கப்பள்ளிப் பருவம் என்பது அழுத்தம் மிக்கதாக இருக்கக்கூடாது. மாறாக, சிறார் தங்கள் ஆர்வங்களைக் கண்டறிய, மனவுறுதியை வளர்த்துக்கொள்ள, ஆரோக்கியமான மனித உறவுகளைப் பேண உதவும் தளமாக இருக்கவேண்டும் என்ற விழிப்புணர்வு பெற்றோர்களிடையே அதிகரித்து வருகிறது.

இருப்பினும், இந்த நேர்மறையான மாற்றத்திற்குப் பின்னால் ஒரு முரண்பாடும் நீடிக்கிறது. பரந்த அளவிலான கற்றலை விரும்பினாலும் பெற்றோர் தொடர்ந்து பழைய கல்வி சார்ந்த பாதுகாப்பு வலைகளையே உறுதியாகப் பிடித்துக்கொண்டுள்ளனர்.

பள்ளிகளில் சேர்வதற்கான புள்ளிவிவரத்தின்மீது கவனம் செலுத்துவது, புகழ்பெற்ற பள்ளிகளை நாடுவது, துணைப்பாட வகுப்புகளுக்கு அதிகமாகச் செலவிடுவது போன்ற போக்குகள்மூலம் அது தெளிவாகத் தெரிகிறது.

சிறந்த மதிப்பெண்களைப் பெறாவிட்டால் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தால் பெற்றோரின் மன அழுத்தம் அதிகரிக்கிறது.

இந்த மன அழுத்தம், தேர்வுகளுக்கான உடனடித் தயாரிப்பில் தொடங்கி, தம் பிள்ளைகளின் எதிர்காலப் போட்டி குறித்த நீண்டகாலக் கவலையாக உருவெடுத்துள்ளது.

இதுவே நமது அடுத்தகட்ட கல்விமுறை மேம்பாட்டின் முக்கிய சவாலாகும். மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கும் போட்டித்தன்மை குறித்த அச்சத்தால் பெற்றோர் பின்பற்றத் துடிக்கும் கடுமையான உத்திகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை நாம் எவ்வாறு குறைப்பது?

செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் செலுத்தும் இந்த நவீன காலத்தில் இந்தச் சமநிலையைக் கண்டறிவது அவசியம்.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், கணக்கீடுகள், பகுப்பாய்வுப் பணிகள், இதர தொழில்நுட்ப வேலைகள் போன்றவற்றை இயந்திரங்களே எளிதாகச் செய்துவிடலாம்.

செயற்கை நுண்ணறிவால் ஈடுசெய்ய முடியாத மனிதநேயப் பண்புகளே எதிர்காலத்தில் நமது தலையாய சொத்துகளாக விளங்கும்.

சிறுவயதில் பிள்ளைகள் விளையாடவும், சமூகத்துடன் பழகவும், கலை, விளையாட்டு போன்ற துறைகளில் ஈடுபடவும் வாய்ப்பளிப்பது வெறும் நேரத்தைக் கடத்துவதற்கு மட்டுமன்று. அதுவே, கல்வியின் முதன்மையான அடித்தளம் என்பதை உணர வேண்டும்.

நற்பண்பையும் தன்னொழுக்கத்தையும் வளர்ப்பதுதான் வாழ்நாள் முழுமைக்குமான தகவமைப்புத் திறனை உருவாக்குகிறது.

கல்விசார் கல்விமுறையும் மதிப்பெண்களும் எப்போதும் முக்கியம்தான்.

ஆனால், நம் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது என்பது துணைப்பாட வகுப்புகளிலோ புகழ்பெற்ற பள்ளிகளின் பெயர்களிலோ மட்டும் இல்லை.

வேகமாக மாறிவரும் உலகில், எதையும் எதிர்கொள்ளக்கூடிய மனவுறுதியும் நற்பண்புகளும் மிக்க ஆளுமைகளாக நம் பிள்ளைகளை உருவாக்குவதே தொடக்கக் கல்வியின் முதன்மையான, இறுதி இலக்காக இருக்க வேண்டும்.

குறிப்புச் சொற்கள்