தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெற்றிக்கு வித்திடும் இன நல்லிணக்கம்

3 mins read
dba90b4e-5bdd-4ec2-92be-e43a818859f5
படம்: - தமிழ் முரசு

சிங்கப்பூரில் 1997ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 21ஆம் தேதியை இன நல்லிணக்க நாளாகக் கொண்டாடி வருகிறோம். இன நல்லிணக்கம், சிங்கப்பூர்ச் சமூகக் கட்டமைப்பின் ஒரு முக்கிய அம்சம் என்பதை நாம் அறிந்துள்ளபோதிலும் அவ்வப்பொழுது அதனை நமக்கு நாமே நினைவூட்டிக்கொள்வது நல்லது.

சிங்கப்பூரின் வெற்றியில் இன நல்லிணக்கத்திற்குப் பெரும்பங்குண்டு என்பதை நாம் மறந்துவிடலாகாது. ஆயினும், இப்போது நிலவும் அமைதியான சூழலை வைத்து, இன நல்லிணக்கம் எப்போதும் நம்மிடையே இருந்து வந்திருக்கிறது என்று மதிப்பிட்டுவிடக்கூடாது.

1964 ஜூலை 21 - இனக்கலவரம் நிகழ்ந்த நாள். இன உறவுகளின் மெல்லிய தன்மையை அந்நாள் நமக்கு நினைவூட்டுகிறது. சிங்கப்பூர் வரலாற்றில் இடம்பெற்ற அந்த இருண்ட நாளை மறக்காமல் இருக்கவும், எதிர்காலத்தில் அதுபோன்று நடக்காமல் தவிர்க்கவும், கல்வி அமைச்சு வழிகாட்டுதலின்படி இந்த நாள் அனைத்துப் பள்ளிகளிலும் இன நல்லிணக்க நாளாக முதலில் கடைப்பிடிக்கப்பட்டது. காலப்போக்கில், ஜூலை மாதம் முழுவதையும் இன நல்லிணக்க மாதமாகக் கடைப்பிடித்து, இன நல்லிணக்கத்திற்கான நமது கடப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறோம்.

சிங்கப்பூரில் இன சகிப்புத்தன்மையைத் தாண்டி, நல்லிணக்கமும் கூட்டுறவும் அதிமுக்கியத் தேவைகளாய் இருந்து வருகின்றன. சிங்கப்பூரைத் தாய்நாடாகக்கொண்ட வம்சாவளியினரோடு மட்டுமல்லாமல், வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து வேலைசெய்யும் பல இன மக்களோடும் ஒன்றிணைந்து செயல்படுவது நம் அன்றாட வாழ்க்கைமுறையாய் மாறியிருக்கிறது.

நம் நாட்டின் தற்போதைய முன்னேற்றத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாக்க அரசாங்கக் கொள்கைகள் அடித்தளமாய் இருந்து வருகின்றன. சிங்கப்பூரின் அரசியலமைப்பு பல இன சமுதாயத்திற்கு வித்திட்டது. சுதந்திர சிங்கப்பூரின் முதல் தலைவர்கள் இன, சமய சமத்துவத்தை ஆணித்தரமாக வலியுறுத்தினர். அச்சிந்தனையில் தங்களின் நம்பிக்கையையும் ஈடுபாட்டையும் அனைத்து அரசாங்கக் கொள்கைகளிலும் அவர்கள் அறிமுகப்படுத்தினர். அதன்வழி ஏற்படுத்தப்பட்ட கொள்கைகள் பல.

இன ஒருங்கிணைப்புக் கொள்கை (Ethnic Integration Policy) அவற்றில் ஒன்று. 1989இல் நடைமுறைப்படுத்தப்பட்ட அக்கொள்கை, பொது வீடமைப்புப் பேட்டைகளில் வெவ்வேறு இனக்குழுக்களின் குடியிருப்பை உறுதிசெய்கிறது. இது தனி இனப் பகுதிகள் உருவாவதைத் தடுப்பதோடு, பல இன மக்களிடையே அன்றாடத் தொடர்புகளை ஊக்குவிக்கிறது.

கல்விக் கொள்கையானது, பல இன மாணவர்களுக்கும் பாகுபாடின்றி அரசாங்கப் பள்ளிகளில் இடமளித்து, அவரவர் திறமைக்கேற்ப முன்னேற வழிவகுக்கிறது. அவரவர் தாய்மொழியினை இரண்டாம் மொழியாகக் கற்றாலும் ஆங்கிலத்தை முதன்மொழியாகக் கொண்டதனால் அனைவரும் இயல்பாகப் பேசி, பலதரப்பட்ட பண்பாடுகளையும் பழக்கவழக்கங்களையும் அனைவரோடும் பகிர்ந்துகொள்வதற்கு வாய்ப்பு உருவாகிறது.

இன, சமய நல்லிணக்க வட்டங்கள் (Harmony Circle) உரையாடல்கள், செயல்பாடுகள்மூலம் இன, சமய நல்லிணக்கத்தை ஊக்குவிக்கின்றன; பல்வேறு சமூகங்களுக்கு இடையிலான நம்பிக்கையையும் புரிதலையும் மேம்படுத்துகின்றன.

சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டம், இன நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் செயல்கள் உடனடியாகக் கவனிக்கப்படுவதை உறுதிசெய்கிறது.

சமூக ஈடுபாட்டுத் திட்டங்கள் பல இன மக்களிடையே தொடர்பையும் ஒத்துழைப்பையும் ஊக்குவிக்கின்றன. வெவ்வேறு இன மரபுகளைப் போற்றும் பண்டிகைகள், நிகழ்வுகள், பொது விடுமுறைகள் மூலம் சிங்கப்பூர் அதன் கலாசாரப் பன்முகத்தன்மையைக் கொண்டாடுகிறது. சீனப் புத்தாண்டின்போது சிங்க நடனம், ரமலான் மாதத்தில் பல இனத்தோர் பங்குபெறும் நோன்புத் துறப்பு, தீபாவளி ஒளியூட்டு அலங்காரம், கலாசார நிகழ்ச்சிகள், கிறிஸ்துமஸ் விளக்குகள், விழாக்காலச் சந்தைகள் எனப் பல வகைகளில் பல இனச் சமூகமாகச் சிங்கப்பூர் திகழ்கிறது. இன நல்லிணக்கத்திற்கான சிங்கப்பூரின் ஒருங்கிணைப்பு அணுகுமுறை, தேசிய அடையாளமாகவும் உலகிற்கே முன்மாதிரியாகவும் வளர்ந்திருக்கிறது.

இப்படிக் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்தபோதிலும், இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதில் சவால்கள் உள்ளன. அவ்வப்போது, வெவ்வேறு இனங்களைச் சார்ந்த தனிமனிதர்களிடையே ஏற்படும் வாக்குவாதங்கள், குற்றச்செயல்கள், கருத்து வேறுபாடுகள் ஆகியவை பிரிவினைவாதச் சிந்தனைகளுக்கு இட்டுச் செல்லக்கூடும். கல்வியின் மூலமும், உரையாடல்களின் மூலமும் இச்சவால்களை நாம் எதிர்கொள்ளலாம்.

இன நல்லிணக்கம் இல்லையேல் சிங்கப்பூர் இல்லை. இயற்கை வளங்கள் இல்லாத ஒரு சிறிய நாடாக இருக்கும் நிலையில், உலக மேடையில் வெற்றியாளராகத் தொடர்ந்து மிளிர நம் மக்களின் ஒற்றுமையே அச்சாணி. நாட்டின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த, இன நல்லிணக்கத்திற்கான அரசாங்கக் கொள்கைகள், சமூக ஈடுபாடுகள், தனிப்பட்ட செயல்கள் எனத் தொடர்ச்சியான முயற்சிகள் தேவை. ஒற்றுமையே வலிமை என்பதை நாம் அனைவரும் மனத்திற்கொண்டு செயல்படுவது சிங்கப்பூரர்களாகிய நமது முக்கியக் கடமை.

குறிப்புச் சொற்கள்