தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தை ஒருங்கிணைக்கும் முக்கியப் பொறுப்பில் தப்லா!

3 mins read
6156b863-8559-4246-af9e-a6b51c7b4592
தப்லா! வார இதழ். - படம்: தப்லா!

சிங்கப்பூர்த் தமிழர்களுக்காக நாட்டின் அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றான தமிழில் தமிழ் முரசு இயங்கி வந்தாலும் ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்தைக் கவரும் முக்கியப் பங்கு ‘தப்லா!’ வார இதழுக்கும் அதனையொட்டிய சமூக ஊடகங்களுக்கும் உண்டு.

தமிழ் முரசின்கீழ் தப்லா! இயங்குவது பலருக்கும் இந்நாள்வரை தெரியாது என்பது வியக்கத்தக்கது. அதனைப் பலருக்கும் தெரியப்படுத்துவது நம் அனைவரது கடமையாகும்.

கடந்த 16 ஆண்டுகளாக வாரந்தோறும் வெளிவரும் தப்லா! இலவச அச்சிதழ். அண்மையில் அதன் இணையப் பக்கமும் புதுப்பொலிவு பெற்று அன்றாடம் புதிய செய்திகளை வெளியிட்டு வருகிறது.

சிங்கப்பூர் இந்தியச் சமூகத்திற்கான ஆங்கில மொழி ஊடகம் இருப்பதன் அவசியம் வரலாற்றில் தெளிவாகப் பதியப்பட்டது.

1940ஆம் ஆண்டு ஜூன் முதல் நவம்பர் வரை தமிழ் முரசு நாளிதழின் கடைசிப் பக்கத்தில் ஆங்கிலச் செய்திகள் வெளியிடப்பட்டன. அதே ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதியில் தமிழ் முரசு நிறுவனர் கோ.சாரங்கபாணி ‘தி இந்தியன் டெய்லி மெயில்’ (The Indian Daily Mail) என்ற ஆங்கில நாளிதழைத் தொடங்கியது நினைவுகூரத்தக்கது. அந்தப் பத்திரிகை 1956 டிசம்பர் 31ஆம் தேதிவரை இயங்கியது.

பின்னர் 1999ஆம் ஆண்டுமுதல் தமிழ் முரசு ஒவ்வொரு வாரமும் ஆங்கிலமும் தமிழும் கலந்த இருமொழி பக்கத்தைக் குறிப்பிட்ட காலத்திற்கு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, 2008ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி தப்லா! அறிமுகம் கண்டது.

சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் சாதனைகள், சவால்கள், கதைகளுக்குத் தமிழ் முரசு குரல்கொடுப்பது போலவே தப்லா!வும் இந்தியச் சமூகத்திற்காக ஒலிக்கும் என்பது உண்மை.

வருங்காலத்தில் சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தையும் உள்ளூர்ச் செய்திகளையும் மேலும் பிரதிநிதிக்கும் வண்ணம் தப்லா! மாற்றங்கள் காணும் என எதிர்பார்க்கலாம்.

பல இன மக்கள் வாழும் சிங்கப்பூரில் இந்தியச் சமூகமே பன்முகத்தன்மை மிக்கது. இங்குள்ள இந்தியச் சமூகத்தினரில் கிட்டத்தட்ட 60 விழுக்காட்டினர் தமிழர்களாக இருந்தாலும் எஞ்சிய 40 விழுக்காட்டினர் பல்வேறு இந்திய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்.

அதுபோக, மற்ற இனத்தவர்களைக் காட்டிலும் ஆங்கில மொழிப் புழக்கம் இந்தியர்களிடம் மிகவும் அதிகரித்துள்ளது என்பதை அரசாங்கத் தரவுகள் குறிப்பிடுகின்றன.

சிங்கப்பூர் இந்தியர்களில் 59.2 விழுக்காட்டினர் தங்கள் வீடுகளில் ஆங்கில மொழியை அதிகமாகப் பயன்படுத்துவது 2020ஆம் ஆண்டு சிங்கப்பூர் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மூலம் தெரியவந்தது. இவ்விகிதம் 2010ஆம் ஆண்டில் 41.6 விழுக்காடாக இருந்தது.

சமூக மாற்றங்களுக்கு ஏற்ப மொழிப் பயன்பாட்டில் மாற்றம் ஏற்பட்டாலும் இந்தியப் பண்பாட்டின்மீதும் தாய்மொழிமீதும் உள்ள பற்றுக் குறையவில்லை என்பதற்குத் தமிழ் முரசிலும் தப்லா!விலும் வாரந்தோறும் இடம்பெறும் சமூகச் செய்திகளே சான்றாக விளங்குகின்றன.

இன்னும் இரு மாதங்களில் தனது 17ஆம் பிறந்தநாளைக் கொண்டாடவிருக்கும் தப்லா! இணைய வாசகர்களைச் சென்றடைவதிலும் இளையர்களின் கவனத்தை ஈர்ப்பதிலும் மிகுந்த கவனம் செலுத்தும்.

இந்த முயற்சியில் புதுப்பிக்கப்பட்ட தப்லா! இணையத்தளமும் சமூக ஊடகப் பக்கங்களும் முக்கியக் கருவிகளாக விளங்கும். சிங்கப்பூரிலும் வெளிநாடுகளிலும் வாழும் இந்தியர்கள் சமூகத்தோடு தொடர்புகொள்ள தப்லா! ஒரு முக்கியப் பாலமாக அமையும்.

எழுத்து வடிவில் வரும் செய்திக் கட்டுரைகள் மட்டுமின்றி, காணொளி, வலையொளி, வரைபடம் என பல்லூடக வழியிலும் தப்லா! செய்திகள் இடம்பெறும். புதிய வாசகர்களையும் இளையர்களையும் கவர இதுவே சிறந்த வழி.

அச்சிதழைப் படிக்க விரும்புவோர் விநியோகச் செலவுகளுக்காக மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும். ஆண்டிற்கு $24, அதாவது மாதத்திற்கு $2, என்ற கட்டணத்தில் சந்தா சேர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தப்லா! அச்சிதழைத் தங்கள் வீட்டிற்கே வரவழைக்கலாம்.

எதிர்காலம் சவால்மிக்கதாக இருப்பினும் பல புதிய வாய்ப்புகளையும் வழங்குகிறது. எஸ்பிஎச் மீடியா, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு, இந்தியச் சமுகம், அத்துடன் மிக முக்கியமாக வாசகர்களின் ஆதரவும் உறுதுணையாக இருக்கும்வரை தமிழ் முரசு போலவே தப்லா!வும் பல வெற்றிகளைக் காணும் என்பதில் ஐயமில்லை.

குறிப்புச் சொற்கள்