மாற்றங்கள் படிப்படியாகத்தான் நிகழும் என்று சொல்வதற்கில்லை.
தலைவர்கள் எடுக்கும் சில முடிவுகள் ஒட்டுமொத்தச் சமநிலையையும் புரட்டிப் போட்டு, நாடுகளின் நிலைப்பாடுகளையும் செயல்பாடுகளையும் முற்றிலுமாக மாற்றியமைத்துவிடும்படி செய்துவிடலாம்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக நாடுகளிடம் ஏற்கெனவே தன்னைப்பேணித்தனம் தலைகாட்டிய நிலையில், இரண்டாம் முறையாக அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற டோனல்ட் டிரம்ப்பின் அதிரடி அறிவிப்புகள் அதனை மேலும் மோசமாக்கி இருக்கிறது.
அதிபர் டிரம்ப்பின் இறக்குமதி வரிவிதிப்பு சிங்கப்பூரைக் குறிவைத்ததன்று என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ருபியோ கூறிவிட்டதால் நமக்கு நேரடிப் பாதிப்பு இராது என்று நிம்மதியாக இருந்துவிட முடியாது.
அதனால் பாதிப்புறும் மற்ற நாடுகளுடன் நாம் கொண்டுள்ள பொருளியல் உறவுகளால் மறைமுகப் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகளைப் புறந்தள்ள முடியாது.
இத்தனை நாள்களாக உலகமயத்தையும் தாராளமயத்தையும் முன்னிறுத்திவந்த பல நாடுகளும் தன்னைப்பேணித்தனத்தை நாடத் தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொருளியலோடு நின்றுவிடாது, கல்வியிலும் அத்தகைய போக்கு தலைகாட்டியிருப்பது கவலை தருவதாக உள்ளது.
உலகப் புகழ்பெற்ற அமெரிக்கக் கல்வி நிறுவனமான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது அதற்கொரு சான்று.
தொடர்புடைய செய்திகள்
இதனால், ஏறக்குறைய 6,800 வெளிநாட்டு மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களில் கிட்டத்தட்ட 150 சிங்கப்பூர் மாணவர்களும் அடங்குவர்.
ஹார்வர்டில் பயிலும் சிங்கப்பூர் மாணவர்கள் அங்குக் கல்வியைத் தொடர முடியாது போனால், அவர்களைச் சேர்த்துக்கொள்ள சிங்கப்பூரின் ஆறு தன்னாட்சிப் பல்கலைக்கழகங்கள் தயார்நிலையில் இருப்பதாக வெளியான அறிவிப்பு தக்க நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள வரவேற்கத்தக்க நடவடிக்கை.
பருவநிலை மாற்றம், வணிகப் பதற்றங்கள், நாடுகளுக்கு இடையிலான போர்கள் என நிலையில்லாத வெளிப்புறச் சூழல்களுக்கு இடையிலும், செயற்கை நுண்ணறிவு, தானியக்கம் எனத் தொழிற்சாலைகளையும் ஊழியரணிகளையும் மறுவடிவமைத்துவரும் தொழில்நுட்ப உலகிலும் நாம் இருக்கிறோம்.
வேலைகள் மறுவரையறை செய்யப்பட்டு வருகின்றன. நாளும் புதுப் புது சவால்கள் உருவெடுக்கின்றன.
இத்தகைய சூழலில், சிறிய நாடான சிங்கப்பூர் வெற்றிகரமான நாடாகத் தொடர்ந்து முன்னேறுவது சிங்கப்பூரர்களான நம் கைகளில்தான் உள்ளது.
எல்லா வகையிலும் சிறந்த சிங்கப்பூர் எனும் நிலை தொடர, நம்மிடம் இருக்க வேண்டிய முக்கியப் பண்பு ஒற்றுமை.
எதன் அடிப்படையிலும் நமக்குள் வேற்றுமையைத் துளிர்க்கவிடாது, ஒன்றுபட்டு, ஒரே சிங்கப்பூரராகச் சளைக்காது பாடுபட்டால் வெற்றி என்றும் நம் கையைவிட்டுச் செல்லாது.
தேர்தல் நேரத்தில் தலைகாட்ட முயன்ற பிரிவினைவாதத்தைச் சிங்கப்பூரர்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டின.
சனிக்கிழமை ஹஜ்ஜுப் பெருநாள், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ சிவன் கோவில் குடமுழுக்கு என அடுத்தடுத்து கொண்டாடப்படும் ஆன்மிக நிகழ்வுகள் நமது நல்லிணக்கத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள்.
அந்தச் சமூகப் பிணைப்பை இழையறுந்துவிடாமல் பேணிப் போற்ற வேண்டியது எந்நாளும் நமக்கிருக்கும் பெருங்கடமை.
உள்நாட்டில் ஒற்றுமையைப் பேணும் அதே வேளையில், மற்ற நாடுகளுடனான உறவுகளைக் கட்டிக்காத்து, உலகத்தோடு ஒட்ட ஒழுகுவது நம்மைப் போன்ற சிறுநாடுகளுக்கு மிக மிக முக்கியம்.
வளங்களுக்கு மட்டுமன்றி, தொழில், வணிகம் போன்ற மற்ற வாய்ப்புகளுக்கும் வெளியுலகத் தொடர்புகளும் உறவுகளும் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கும் நிலைத்தன்மைக்கும் இன்றியமையாதவை.
வாய்ப்புகளுக்காகக் காத்திராமல், வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்வது சிங்கப்பூரர்களின் குருதியில் ஊறியுள்ள பண்பு என்பதற்கு நமது கடந்தகால வரலாறே பெருஞ்சான்று.
அது தொடர, சமூகம், பொருளியல், கல்வி, பண்பாடு என எல்லாத் துறைகளிலும் வட்டார அளவிலும் உலக அளவிலும் மேம்பட்ட உறவு தொடர வேண்டும்.
நமது சிந்தனை உலக அளவில் இருக்க வேண்டும். அதே நேரத்தில் நோக்கம் சிங்கப்பூரின் நீடித்த வளர்ச்சியைப் பற்றியதாக இருக்க வேண்டும்.
முழு அர்ப்பணிப்பும் கடின உழைப்புமின்றி வளர்ச்சியும் வெற்றியும் சாத்தியமில்லை.
வெற்றியை நோக்கிய நமது பயணத்தின்போது, இடையில் பின்னடைவுகளையும் தோல்விகளையும் எதிர்கொள்ள நேர்ந்தாலும் அவற்றைக் கண்டு துவளாமல், முயற்சியைத் தளரவிடாது, தொடர்ந்து போராடி மீள்திறனோடு செயல்படுவது முக்கியம்.
தன்னளவில் முயல்வதோடு நின்றுவிடாது, தேவைப்படும்போது பிறரது ஆலோசனைகளையும் உதவிகளையும் பெற்று, தாமும் பிறருக்குக் கைகொடுத்து, கைகோத்து, ஒன்றுபட்ட மக்களாய், நாட்டினராய்த் தொடர்ந்து பீடுநடைபோட்டு, விடாமுயற்சியை விடாப்பிடியாகப் பற்றி, வெற்றியை ஈட்டி, என்றென்றும் உலகிற்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்வோம்!