சிங்கப்பூர் போன்ற ஒரு நவீன நகரத்தில் ‘அறுவடைத் திருவிழா’ என்று சொல்லப்படும் பொங்கல் பண்டிகை இன்றும் ஏன் கொண்டாடப்பட வேண்டும்? வயல்வெளிகளும் மாடுகளும் இல்லாத ஒரு நாட்டில், மென்பொருள் துறையிலும் வணிகத் துறையிலும் இயங்கும் இளைய தலைமுறைக்குப் பொங்கல் உணர்த்தும் செய்தி என்ன?
பொங்கல் என்பது வெறும் சடங்கு அல்ல. அது நமது தமிழ் பாரம்பரியத்தின் வேர் என்பதை அடுத்த தலைமுறையினருக்கு எப்படிக் கொண்டு செல்வது?
பொங்கலின் அடிப்படைத் தத்துவம் ‘நன்றி கூறுதல்’. சூரியன், கால்நடைகள் மற்றும் இயற்கையென நமக்கு வாழ்வளிக்கும் சக்திகளுக்கு நாம் நன்றி செலுத்துகிறோம். இன்றைய மன அழுத்தம் நிறைந்த சூழலில் வாழும் இளைஞர்களுக்கு, நின்று நிதானித்து நன்றி சொல்லும் பண்பை வளர்ப்பது மிக முக்கியமானது.
சிங்கப்பூர் ஒரு பல்லினச் சமூகம். இங்கே நம்முடைய தனித்துவத்தை நிலைநாட்ட நமது கலாசாரப் புரிதல் அவசியம். பொங்கல் திருநாளில் வேட்டி, சேலை அல்லது பாரம்பரிய உடைகள் அணிந்து, பொங்கலிட்டு, தமிழ் முறைப்படி கொண்டாடுவது இளையர்களிடையே ஒரு சமூகப் பிணைப்பை உருவாக்கும். அவர்களின் முன்னோர்களின் வரலாற்றோடும் வாழ்க்கைமுறையோடும் தங்களை இணைத்துக்கொள்ள ஒரு பாலமாக அமைகிறது.
இன்றைய இளைஞர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மிகுந்த அக்கறை கொண்டவர்கள். பொங்கல் பண்டிகை இயற்கையைப் போற்றும் ஒரு திருவிழா என்பதை அவர்கள் உணர வேண்டும். மண்ணையும், தண்ணீரையும், சூரியனையும் தெய்வ சக்தியாய் மதிக்கும் இந்தப் பண்டிகை, சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு உந்துகோலாகவும் இருக்கிறது. மண்பானையில் உணவு தயாரித்து வாழை இலையில் உண்பது போன்ற பொங்கல் மரபுகளின் காரணங்கள் அறிந்தால், இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இப்பண்டிகையில் அதிகம் நாட்டம் காட்டுவார்கள்.
மின் திரைகளில் மூழ்கியிருக்கும் இன்றைய சூழலில், பொங்கல் பண்டிகை குடும்ப உறுப்பினர்களை ஒன்றிணைக்கிறது.
பொங்கல் பானையில் பால் பொங்கும்போது அனைவரும் இணைந்து ‘பொங்கலோ பொங்கல்’ என்று முழங்குவது ஒரு கூட்டு மகிழ்ச்சியைத் தருகிறது. இது தலைமுறைகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைத்து, உறவுகளை வலுப்படுத்துகிறது.
‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்றார் பாரதியார். நகரமாக இருந்தாலும் நம் உணவு எங்கிருந்து வருகிறது என்பதை நகர வாசிகளும் இளையர்களும் மறந்துவிடலாகாது. உழவன் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் எனும் கூற்றினைக் கேட்டிருப்போம்.
தொடர்புடைய செய்திகள்
நவீன சிங்கப்பூரில் நாம் உழவர்களாக இல்லாவிட்டாலும், நாம் உண்ணும் உணவைத் தரும் விவசாயத்தையும், அதைச் சாத்தியமாக்கும் இயற்கையையும் மதித்துப் போற்றும் வகையில் பொங்கல் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.
சிங்கப்பூரில் பொங்கல் பண்டிகையின் முக்கியத்துவத்தை அனைத்து இனத்தவருக்கும் எடுத்துரைக்கும் வகையில், இந்திய மரபுடைமை நிலையம் (IHC) ஜனவரி 10, 11, 17, 18 ஆகிய வார இறுதி நாட்களில் நிகழ்ச்சிகளை நடத்துகிறது. இதில் ‘கிராமியத் திருவிழா’ என்ற கருப்பொருளில், பாரம்பரிய மண் பாண்டம் செய்தல், தஞ்சாவூர் ஓவியம், புள்ளி கோலமிடுதல் போன்ற நேரடிப் பயிலரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, மற்ற இனத்தவர்கள் இந்தியக் கலாசாரத்தைப் புரிந்துகொள்ளும் வகையில், லிட்டில் இந்தியா பகுதியில் வழிகாட்டியுடன் கூடிய நடைப்பயணங்கள், பாரம்பரிய வாழை இலை விருந்து ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளுக்காக ஆங்கிலத்திலும் தமிழிலும் கதை சொல்லும் நிகழ்ச்சிகள்மூலம் பொங்கலின் பின்னணியில் உள்ள சூரியன் மற்றும் இயற்கையின் முக்கியத்துவம் விளக்கப்படுகிறது.
மேலும், லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் (லிஷா), கலாசாரத்தை வீதியெங்கும் கொண்டு சேர்க்கும் பணிகளை மேற்கொள்கிறது. பொங்கல் ஒளியூட்டு மூலம், ஜனவரி 10ஆம் தேதியிலிருந்து சிராங்கூன் சாலை வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்படுகின்றன.
ஜனவரி 18 அன்று ‘கூட்டுப் பொங்கல்’ நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பல இனத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து மண் பானைகளில் பொங்கலிட்டு மகிழ்வர். கிளைவ் ஸ்திரீட் பகுதியில் மாடுகளும் கன்றுகளும் காட்சிப்படுத்தப்பட்டு, மாட்டுப் பொங்கலின் சிறப்பம்சங்கள் பொதுமக்களுக்கு விளக்கப்படுகின்றன.
பொங்கல் என்பது வெறும் கிராமத்துத் திருவிழா அல்ல. அது ஒரு வாழ்வியல் முறை. சிங்கப்பூரின் இளைய தலைமுறை இந்தப் பாரம்பரியத்தைத் தொடர்வது, அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல், ஒரு சிறந்த, நன்றி செலுத்தும் பண்பு நிறைந்த சமுதாயத்தை உருவாக்கவும் அடித்தளமாய் அமையும்.
பொங்கலோ பொங்கல்!

