தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் 13,000 உறுப்பினர்கள்: இந்திய அமலாக்கத்துறை

2 mins read
27f4d15f-0b6a-4fd4-a993-4ebca996ec32
கடந்த 2022 ஜூன் 6ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பிஎஃப்ஐ அமைப்பினரைக் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசி காவல்துறையினர் கலைக்க முயன்றனர். - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ‘பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா’ (பிஎஃப்ஐ) அமைப்பிற்குச் சிங்கப்பூரிலும் குவைத், ஓமான், சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் 13,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

அந்த உறுப்பினர்கள் தங்கள் அமைப்பிற்கு நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இதற்காக பிஎஃப்ஐ அமைப்பு மாவட்ட அளவில் செயற்குழுக்களை அமைத்தது என்றும் அக்குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் கோடிக்கணக்கான ரூபாயைத் திரட்டுவதற்கு இலக்கு வகுக்கப்பட்டது என்றும் வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 18) அமலாக்கத்துறை கூறியது.

வெளிநாடுகளில் திரட்டப்படும் பணம் சுற்றோட்டம் மூலமும் ஹவாலா வழியாகவும் இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டு, பிஎஃப்ஐ நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் அவர்கள் அப்பணத்தைப் பயங்கரவாத, சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தினர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2022 செப்டம்பர் 28ஆம் தேதி, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின்கீழ் இந்திய அரசு பிஎஃப்ஐ அமைப்பிற்குத் தடைவிதித்தது.

தேசிய அளவில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகள் மூலம் அதன் தலைவர்கள் பலரும் கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில், “பிஎஃப்ஐ அமைப்பு நிறுவப்பட்டபோது அது குறிப்பிட்ட நோக்கங்களும் அதன் உண்மையான நோக்கங்களும் வெவ்வேறு என்பது விசாரணைமூலம் தெரியவந்துள்ளது. ‘ஜிகாத்’ மூலம் இந்தியா முழுவதும் ஓர் இஸ்லாமிய இயக்கத்தைத் தொடங்குவதும் அவற்றில் ஒன்று,” என்று அமலாக்கத்துறையின் அறிக்கை தெரிவிக்கிறது.

அத்துடன், உடற்கல்வி வகுப்புகள் என்ற போர்வையில் பிஎஃப்ஐ ஆயுதப் பயிற்சி வழங்கி வந்தது என்றும் போலி உரிமையாளர்களின் பெயர்களில் பதிவுசெய்யப்பட்ட இடங்களில் அப்பயிற்சி வழங்கப்பட்டு வந்தது என்றும் அமலாக்கத்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கேரள மாநிலம், கண்ணூர் அருகே நரத் என்னுமிடத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு ஆயுதங்களையும் வெடிபொருள்களையும் பயன்படுத்தி ஆயுதப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.

குறிப்புச் சொற்கள்