மத்தியப் பிரதேசத்தில் ஏஐ தொழில்நுட்பத்தால் சிக்கிய 135 நகராட்சி அதிகாரிகள்

மத்தியப் பிரதேசத்தில் ஏஐ தொழில்நுட்பத்தால் சிக்கிய 135 நகராட்சி அதிகாரிகள்

கோப்புப் படம்: சிஎஸ் அகாடமி

26 Oct 2026 - 5:55 pm

2 mins read

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மின்னிலக்கக் கொள்முதல் வாயிலாக நடைபெற்ற பல கோடி ரூபாய் நிதி முறைகேடுகளை, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப உதவியுடன் அம்மாநில அரசு கண்டறிந்துள்ளது.

இதையடுத்து, நிதி முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை 135 முதன்மை நகராட்சி அதிகாரிகள் உட்பட மொத்தம் 392 அதிகாரிகள், ஊழியர்கள் மீது முறைகேடு தொடர்பிலான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சிலர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சஞ்சய் துபே தெரிவித்துள்ளார்.

சிலருக்கு ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டும் பதவி இறக்கம் செய்யப்பட்டும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், தவறிழைத்த அதிகாரிகளிடம் இருந்து இழப்பீட்டுத் தொகையை மீட்கும் நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மாநில அரசின் ‘எம்.பி. இ-நகர் பாலிகா’ (MP e-Nagar Palika), இந்திய அரசின் ‘இ-மார்க்கெட் பிளேஸ்’ (GeM) ஆகிய இரு முக்கிய இணையத்தளங்களில் இருந்து பெறப்பட்ட கொள்முதல் தரவுகளை, செயற்கை நுண்ணறிவு மூலம் ஆய்வு செய்தபோது அதிகாரிகளின் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. சந்தை விலையைவிடக் கூடுதல் விலைக்குப் பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டது இதன் மூலம் துல்லியமாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் 2026ல் போபாலில் நடைபெற்ற பயிற்சி முகாமில், கொள்முதல் முறைகேடுகள் குறித்து சஞ்சய் துபே எச்சரிக்கும் காணொளி அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து அம்மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆளும் பாஜக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது.

இந்நிலையில், ரூ.4 கோடிக்கும் அதிகமான தொகை தவறிழைத்த அதிகாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகவும் முறைகேட்டில் ஈடுபட்ட 80க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள், விநியோகிப்பாளர்கள்மீது தொடர்ந்து சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்