மாரடைப்பை முன்கூட்டியே கண்டறியும் புது செயலியை உருவாக்கிய சிறுவனுக்கு குவியும் பாராட்டு

2 mins read
d72b11a6-9cbd-4069-832d-6e0f0373a80a
முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் சித்தார்த். - படம்: ஊடகம்

அமராவதி: மாரடைப்பை முன்கூட்டியே 96 சதவீதம் துல்லியத்துடன் கண்டுபிடிக்கும் புதிய செயலியை 14 வயது சிறுவன் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். இந்தச் செயலி உலகின் முன்னணி ஏ.ஐ. சான்றிதழை பெற்றுள்ளது.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவரின் மகன் சித்தார்த்.

கடந்த 2010ஆம் ஆண்டு மகேஷ் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்துவிட்டார்.

இந்நிலையில், 14 வயதான சிறுவன் சித்தார்த், மாரடைப்பை சில நொடிகளில் கண்டுபிடிக்கும் செயலியை உருவாக்கி உள்ளார்.

இதற்கு அனைத்துலக அளவில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கும் ஆகச்சிறந்த செயலிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள சில மருத்துவமனைகள் இந்தச் செயலியைப் பரிசோதித்துப் பார்த்ததில், பலருக்கு மாரடைப்பு ஏற்பட இருப்பது முன்கூட்டியே கண்டறியப்பட்டது.

இதையடுத்து, இந்தியாவில் உள்ள சொந்த ஊருக்குச் சென்று இச்செயலியை பரிசோதிக்க விரும்பிய மகேஷ், மகனுடன் அண்மையில் குண்டூர் வந்தார்.

அங்குள்ள அரசு மருத்துவமனையில், ‘சிர்கடியன் ஏஐ’ (circadian AI) எனப்படும் அச்செயலியை திறன்பேசி மூலம் பரிசோதித்தபோது, அது இதயத் துடிப்பு ஒலிகளை துல்லியமாகப் பதிவு செய்வதன் மூலம், தொடக்க நிலையில் உள்ள இதய பாதிப்பைச் சரியாக கண்டறிந்தது.

ஒரே நாளில் ஏறக்குறைய 700 நோயாளிகளுக்கு இப்பரிசோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சிறுவன் சித்தார்த் சந்தித்தார்.

அப்போது இப்புதிய செயலி மூலம் மாரடைப்பு பாதிப்பு குறித்து கிடைக்கும் முடிவுகள் 95 விழுக்காடு துல்லியமாக இருப்பதாகவும் ஓரக்கல், ஏஆர்எம் நிறுவனங்களில் ‘ஏஐ’ சான்றிதழ் பெற்றது மிகப் பெரிய சாதனை என்றும் முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டினார்.

மேலும், சிறுவனின் அனைத்து முயற்சிக்கும் ஆந்திர அரசு முழு ஆதரவு அளிக்கும் என்றும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் உறுதி அளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்