பெற்றோரைப் புறக்கணிக்கும் பிள்ளைகளின் ஊதியத்தில் 15% பிடித்தம்: தெலுங்கானா அரசு

பெற்றோரைப் புறக்கணிக்கும் பிள்ளைகளின் ஊதியத்தில் 15% பிடித்தம்: தெலுங்கானா அரசு

2 mins read
ebe4f89b-ea77-43b6-bfda-38f6103d9608
தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பின், வாழ்க்கையை நடத்த போதிய வருமானம் இல்லை என்பதை எழுத்துபூர்வமாகத் தெரிவித்து நிதியுதவி கோரலாம். - சித்திரிப்புப்படம்: தி சௌத் இந்தியன் டைம்ஸ்

ஹைதராபாத்: பெற்றோரைப் பொறுப்புடன் கவனித்துக்கொள்ளாமல் புறக்கணிக்கும் அரசு, தனியார் துறை ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து, இனி 15 விழுக்காடு பிடித்தம் செய்ய தெலுங்கானா மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகை பெற்றோருக்கு வழங்கப்படும். இதற்கான மசோதா தெலுங்கானா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

வயதான காலத்தில் பெற்றோரைப் பிள்ளைகள் புறக்கணிக்கும் போக்கு தெலுங்கானாவில் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, பெற்றோரின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் அரசு, தனியார் ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் பெற்றோர் புறக்கணிப்பு தொடர்பான புகார்களை விசாரிக்க ஓர் அமைப்பு உருவாக்கப்படும் என்று புதிய மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த அமைப்புக்கு நியமன அதிகாரி பொறுப்பில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி, புறக்கணிப்புக்கு ஆளாகும் பெற்றோர் இந்த அமைப்பிடம் புகார் அளிக்கலாம். மேலும், இந்த புகார்கள் தொடர்பாக விசாரிக்க மேல்முறையீட்டு அதிகார அமைப்பாகச் செயல்பட முதியோர் நல ஆணையம் ஒன்றையும் அமைக்க தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது.

இது தவிர, மாநில அளவிலான கண்காணிப்பு அமைப்பும் உருவாக்கப்படுகிறது. பிள்ளைகளால் புறக்கணிக்கப்படும் பட்சத்தில், அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் உள்ள நியமன அதிகாரியிடம் பெற்றோர் புகார் அளிக்க முடியும்.

தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பின், வாழ்க்கையை நடத்த போதிய வருமானம் இல்லை என்பதை எழுத்துபூர்வமாகத் தெரிவித்து நிதியுதவி கோரலாம். அதேசமயம் நிதியுதவி தேவைப்படும் நிலையில் இருப்பதையும் பெற்றோர் உறுதிசெய்ய வேண்டும்.

புகார் நிரூபிக்கப்படும் பட்சத்தில் பிள்ளைகளின் ஊதியத்தில் இருந்து ரூ.10,000 அல்லது 15% தொகை பிடித்தம் செய்யப்பட்டு பெற்றோருக்கு மாதந்தோறும் வழங்கப்படும்.

குறிப்புச் சொற்கள்