புதுடெல்லி: சூப்பர் எல் நினோ தாக்கத்தால் இந்தியாவில் வரும் 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை வெப்பநிலை கடுமையாக அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் வழக்கமாக நிகழும் மரணங்களைவிடவும் 15,800 பேர் கூடுதலாக உயிரிழக்கக் கூடும் எனச் சிகாகோ ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டு உள்ளது.
உலக நாடுகளைப் பெரும் பாதிப்பில் ஆழ்த்தி இருக்கும் சூப்பர் எல்நினோவின் தாக்கம் காரணமாக இந்தியாவில் கடுமையான காலநிலை மாறுபாடுகள் உருவாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து உலக வானிலை ஆய்வமைப்பும் அமெரிக்க சிகாகோ பல்கலைக்கழகத்தின் எரிசக்தி கொள்கை நிறுவனமும் கூட்டாக அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
அடுத்த ஆறு மாதங்களில் தெற்கு ஆசியாவில் எல்நினோவால் உருவாகும் கூடுதல் வெப்பம் உலகளவில் பல்வேறு தீவிரமான பாதிப்புகளைப் புதிதாக ஏற்படுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதன் விளைவாகப் பிலிப்பீன்ஸ், வியட்னாம், தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகள் இணைந்து மொத்தம் 19,400 வரை கூடுதல் இறப்புகளைச் சந்திக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
தனியாகப் பிலிப்பீன்ஸ் நாட்டில் மட்டும் 19,300 பேரும் தென் அமெரிக்கா, பிரேசில் பகுதிகளில் 13,300 பேரும் உயிரிழக்க அதிக வாய்ப்புள்ளது.
அத்துடன் இந்தியாவில் மட்டும் 15,800 பேர் வரை எல்நினோவின் கடும் வெப்ப அலை பாதிப்பால் கூடுதலாக உயிரிழப்பார்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்த மாதம் முதல் அடுத்த பிப்ரவரி வரை உலகம் முழுவதும் 2.3 லட்சம் கூடுதல் மரணங்கள் நிகழும் எனக் கூறப்பட்டுள்ளது.
நாடுகள் வாரியான விவரங்களை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு, வரும் நாள்களில் நாட்டின் வெப்பநிலை இன்னும் அதிகரித்து மிகவும் மோசமான நிலையை எட்டும் என்றும் எச்சரித்துள்ளது.
பாதிப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாடுகள் உடனடியாக எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
