டெல்லி தீவிபத்தில் 18 வெளிநாட்டவர்கள் பலி: விதிமீறல்கள் அம்பலம்

டெல்லி தீவிபத்தில் 18 வெளிநாட்டவர்கள் பலி: விதிமீறல்கள் அம்பலம்

2 mins read
1c1e9c9f-0bdd-4015-a600-6a9f7b06a38b
தீவிபத்து ஏற்பட்டால் வெளியேறுவதற்கான வழியின்றியும் அனுமதிக்கப்பட்ட ஆறு அறைகளுக்குப் பதிலாக 26 அறைகளை அமைத்து தங்குவிடுதியை நடத்தி வந்துள்ளனர். - படம்: ரெடிஃப்

புதுடெல்லி: கடந்த புதன்கிழமை (ஜூன் 3) டெல்லியில் தங்குவிடுதியில் நிகழ்ந்த தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில், அவர்களில் 18 பேர் வெளிநாட்டினர் எனத் தெரியவந்துள்ளது.

டெல்லியில் நிகழ்ந்த மோசமான தீ விபத்துச் சம்பவங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

தனியார் மருத்துவமனைக்கு அருகே அமைந்திருந்த அத்தங்குவிடுதியில் நாள்தோறும் 2,000 முதல் 3,600 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தீவிபத்து ஏற்பட்டால் வெளியேறுவதற்கான வழியின்றியும் அனுமதிக்கப்பட்ட ஆறு அறைகளுக்குப் பதிலாக 26 அறைகளை அமைத்து தங்குவிடுதியை நடத்தி வந்துள்ளனர்.

விபத்தால் பாதிக்கப்பட்ட பலர், விடுதிக்கு அருகே உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற இந்தியா வந்த நோயாளிகள் அல்லது அவர்களின் பராமரிப்பாளர்கள் ஆவர்.

மருத்துவமனையைவிடத் தனியார் தங்குவிடுதி வசதியாக இருந்ததால் அங்கு தங்கியுள்ளனர்.

தங்குவிடுதி அமைந்துள்ள பகுதி மிகவும் நெரிசல் மிகுந்தது என்றும் தீயணைப்பு வாகனங்கள் செல்வது கடினமாக இருந்தது என்றும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

விதிமீறல்கள்தான் உயிரிழப்பு அதிகரிக்கக் காரணம் என்று தெரிவித்துள்ள டெல்லி காவல்துறை, தங்குவிடுதியின் உரிமையாளர் லவ்கேஷ் பஜான் என்பவரைக் கைது செய்துள்ளது.

தீ விபத்தில் 26 பேர் காயமடைந்தனர். ஐந்து மாடிகள் கொண்ட கட்டடத்தில் தங்கியிருந்த பலர் தீயிலிருந்து தப்பிக்க அறை சன்னல்களைத் திறந்து கீழே குதித்துள்ளனர்.

இறந்துவிட்ட 21 பேரில் 16 பேர் அடையாளம் காணப்பட்டதாக டெல்லி காவல்துறை தெரிவித்தபோதும், 14 பெயர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டன.

மரண எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில், இந்தக் கோர விபத்தில் 18 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துவிட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விபத்து நிகழ்ந்த தங்குவிடுதிக்கு அருகே உள்ள சைதுலாஜாப் பகுதியில் அண்மையில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில், ஆறு பேர் உயிரிழந்தனர். நான்கு நாள்களுக்குப் பிறகு தீவிபத்து நிகழ்ந்துள்ளது.

இந்தச் சம்பவங்கள் இந்தியத் தலைநகரில் சட்டவிதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை என்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளன என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்