ஏமனின் சிக்கித் தவித்த 19 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக மீட்பு

ஏமனின் சிக்கித் தவித்த 19 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக மீட்பு

கோப்புப் படம்: ஏஎஃப்பி

09 Nov 2026 - 1:58 pm

2 mins read

சானா: ஏமனில் உள்ள ஹொடைடா, சானாவில் சிக்கித் தவித்த 19 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என்று அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இரண்டு வாரங்களாக சிக்கித் தவித்த அவர்கள் தாயகம் திரும்பும் வழியில் இருப்பதாகவும் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தகவலில் அது கூறியது.

“அனைத்து மாலுமிகளும் நல்ல உடல்நலத்துடன் பாதுகாப்பாக உள்ளனர். அவர்கள் இந்தியா திரும்பும் வழியில் உள்ளனர்,” என்று தூதரகம் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இந்த மீட்புப் பணியை சாத்தியமாக்க உதவிய அனைவருக்கும் அது நன்றி தெரிவித்துக் கொண்டது.

ஏமன் கடலோரப் பகுதியில் விபத்துக்குள்ளான ஒரு சொகுசுப் படகில் இருந்த 14 இந்தியக் குடிமக்கள் பாதுகாப்பாக இருப்பதாக இந்தியா உறுதிப்படுத்திய சில நாள்களிலேயே இந்த மீட்பு நடவடிக்கை நடைபெற்றுள்ளது.

இருந்தாலும் மீட்கப்பட்ட 19 மாலுமிகளில் இந்த 14 இந்தியர்களும் அடங்குவார்களா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

அக்டோபர் 23ஆம் தேதி அன்று, ஹொடைடா அருகே படகில் இருந்த 14 இந்தியர்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும் அந்தச் சம்பவம் நிகழ்ந்த சூழலைக் கண்டறிய தொடர்புடைய தரப்பினருடன் தொடர்பில் இருப்பதாகவும் இந்தியத் தூதரகம் தெரிவித்திருந்தது.

முன்னதாக, ஏமன் கடற்பகுதியில் உள்ள யுகார் தீவு அருகே செங்கடலில் இருந்த இந்தியப் படகை சவூதிப் படைகள் குறிவைத்ததாக ஏமனின் ஹூதி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சரீ கூறியதை அரபு ஊடகங்கள் சில மேற்கோள் காட்டியிருந்தன.

அந்தப் படகில் 14 இந்தியர்கள் இருந்ததாகவும் அவர்களை மீட்பதில் ஹூதி படைகள் ஈடுபட்டதாகவும் சரீ கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்