புதுடெல்லி: தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2,291 கோடி கல்வி நிதியை உடனடியாக விடுவிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்துள்ளது.
ஒருங்கிணைந்த கல்வித் திட்டமான ‘சமக்ர சிக்ஷா அபியான்’ திட்டத்தின்கீழ் தனக்கு வழங்க வேண்டிய தொகையை மத்திய அரசு நிறுத்திவைத்திருப்பது சட்ட விரோதம் என்று தமிழக அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை ஒதுக்காமல் மத்திய அரசு காலந்தாழ்த்தி வருகிறது. அந்நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதன் தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழக அரசு பலமுறை கடிதம் எழுதியுள்ளது.
ஆனால், புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தாவிடில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க முடியாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார். அதற்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்தார். மத்திய அமைச்சரின் அறிவிப்பிற்கு எதிராகத் தமிழகத்தின் பல இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில், தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை உடனடியாக விடுவிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டுள்ளது.
“தமிழக அரசுக்குக் கிடைக்க வேண்டிய கல்வி நிதி இன்னும் வழங்கப்படாததால் தமிழக மாணவர்களின் நலன் பாதிக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்திற்கான நிதியை 6% வட்டியுடன் ரூ.2,291 கோடியாக வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்,” என தமிழக அரசு தனது மனுவில் கூறியுள்ளது.

