புதுடெல்லி: ஆண்டு அடிப்படையில் இவ்வாண்டு நவம்பர் மாதம் யுபிஐ எனும் இணையவழி பணப் பரிவர்த்தனை எண்ணிக்கை 32 விழுக்காடு கூடியதாக இந்திய தேசியக் கட்டணக் கழகம் (என்பிசிஐ) வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
அதாவது, 20.47 பில்லியன் முறை யுபிஐ வழியாகப் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், கைமாறிய தொகையின் அளவும் 22 விழுக்காடு கூடி, 26.32 லட்சம் கோடியாகப் (S$3,801 பில்லியன்) பதிவானது.
கடந்த நவம்பரில் யுபிஐ மூலம் சராசரியாக நாள்தோறும் 682 மில்லியன் பணப் பரிவர்த்தனைகள் இடம்பெற்றன. அதற்கு முந்திய அக்டோபரில் அந்த எண்ணிக்கை 668 மில்லியனாக இருந்தது.
இதனிடையே, ‘இம்ப்ஸ்’ எனப்படும் உடனடிப் பணப் பரிவர்த்தனை மூலம் கடந்த நவம்பர் மாதம் ரூ..6.15 லட்சம் கோடி பணம் கைமாறியது. இது, 2024 நவம்பரை ஒப்புநோக்க கிட்டத்தட்ட 10 விழுக்காடு அதிகம். 2025 நவம்பரில் ஒவ்வொரு நாளும் சராசரியாக ரூ.20,506 கோடி ‘இம்ப்ஸ்’ முறை மூலம் கைமாறியது.
இந்தியாவின் மின்னிலக்கவழி பணப் பரிவர்த்தனை முறைகளில் யுபிஐ முறை முன்னணியில் இருக்கிறது. அம்முறையைப் பயன்படுத்தி இவ்வாண்டின் முற்பாதியில் மட்டும் 106.36 பில்லியன் முறை பணப் பரிவர்த்தனை இடம்பெற்றது என்பிசிஐ திங்கட்கிழமை (டிசம்பர் 1) வெளியிட்ட தரவுகள்மூலம் தெரியவந்துள்ளது. இது, 2024 முற்பாதியைவிட 35 விழுக்காடு அதிகம்.
அந்தப் பரிவர்த்தனைகளின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.143.34 லட்சம் கோடி. இணையவழி பணப் பரிவர்த்தனை இந்தியர்களின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டதை இது காட்டுகிறது என்று ‘வோர்டுலைன்’ அமைப்பின் 2025 முற்பாதிக்கான இந்திய மின்னிலக்கவழி பணப் பரிவர்த்தனை அறிக்கை குறிப்பிடுகிறது.

