புதுடெல்லி: புகைப்பிடிப்பவர்கள் வெளிவிடும் புகையைப் பிறர் சுவாசிப்பதால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்டு, இந்தியாவில் கடந்த 2023ஆம் ஆண்டில் 3.25 லட்சம் பேர் உயிரிழந்ததாக அனைத்துலக மருத்துவ இதழான ‘லான்செட்’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது 1990ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 50 விழுக்காடு அதிகம் ஆகும்.
‘குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ்-2023’ அமைப்பைச் சேர்ந்த அனைத்துலக ஆய்வாளர்கள் 204 நாடுகளில் விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் முடிவில், உலக அளவில் ஏறக்குறைய 270 கோடி பேர் பிறர் புகைக்கும் சிகரெட் புகையை சுவாசிக்கும் ஆபத்தான சூழலில் வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது.
இதில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்தியா, சீனா, இந்தோனீசியா ஆகிய மூன்று நாடுகளிலேயே உள்ளனர்.
சீனாவில் 66.4 கோடி பேரும் இந்தியாவில் 44.4 கோடி பேரும் பிறர் புகையால் பாதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக, உலக அளவில் 14 வயதுக்கு உட்பட்ட 76.7 கோடி குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுவது மிகவும் கவலைக்குரியத் தகவலாகும்.
இந்தியாவில் 1990ல் 37.5 கோடியாக இருந்த பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 2023ல் 44.4 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல், இதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் 2.17 லட்சத்தில் இருந்து 3.25 லட்சமாக அதிகரித்துள்ளது.

