புதுடெல்லி: இந்தியாவில் இணையத் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அங்குள்ள நிறுவனங்கள் சராசரியாக வாரத்திற்கு 3,195 இணையத் தாக்குதல்களை எதிர்கொள்கின்றன.
“கடந்த 2025ஆம் ஆண்டில், இந்தியா ஒரு வாரத்திற்குச் சராசரியாக 3,195 இணையத் தாக்குதல்களை எதிர்கொண்டது. இது 2024ஆம் ஆண்டைவிட 2 விழுக்காடு அதிகம்,” என்று செக் பாயின்ட் மென்பொருள் நிறுவனத்தின் ‘2026 இணையப் பாதுகாப்பு’ அறிக்கை தெரிவிக்கிறது.
தாக்குதல் பேர்வழிகள் இப்போது செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது. அதன் துணையுடன் அவர்கள் பெரிய அளவிலும் மிக விரைவாகவும் இணையத் தாக்குதல்களைத் தொடுக்க முடிகிறது.
“எண்ணிக்கையில் மட்டுமன்று, இணையத் தாக்குதல் செயல்முறையையும் ஏஐ மாற்றி வருகிறது,” என்று செக் பாயின்ட் மென்பொருள் நிறுவனத்தின் ஆய்வுத் துணைத் தலைவர் லோட்டம் ஃபின்கல்ஸ்டீன் கூறியுள்ளார்.
இந்தியாவில் இணையத் தாக்குதல்மூலம் கல்வித் துறையே அதிகம் குறிவைக்கப்பட்டது. அத்துறையைச் சேர்ந்த ஒவ்வொரு நிறுவனமும் சராசரியாக வாரத்திற்கு 7,684 இணையத் தாக்குதல்களை எதிர்கொண்டன. அந்த எண்ணிக்கையானது, அரசுத் துறையில் 4,912ஆகவும் வணிகச் சேவைகளில் 3,747ஆகவும் இருந்தது.
‘ரேன்சம்வேர்’ எனும் பிணைநிரல் தாக்குதலும் பேரச்சுறுத்தலாக இருந்து வருகிறது. பணம் கேட்டு மிரட்டப்பட்டோர் விகிதம் 53 விழுக்காடு கூடியது. அதுபோல, கைப்பேசிவழி ஆள்மாறாட்டமும் அதிகரித்து வருகிறது.
கண்காணிப்பற்ற கருவிகளையும் ‘விபிஎன்’ எனப்படும் மறைவலையையும் பயன்படுத்தி இணையத் தாக்குதல்காரர்கள் தங்களது நடவடிக்கைகளை மறைக்க முயல்கின்றனர்.
இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண, நிறுவனங்கள் ‘முன்னெச்சரிக்கைக்கு முன்னுரிமை’ அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென அறிக்கை பரிந்துரைக்கிறது.

