புதுடெல்லி: போலியான கடன் செயலிகள் உட்பட 3,718 கைப்பேசிச் செயலிகளை அரசாங்கம் முடக்கியுள்ளதாக இந்தியாவின் உள்துறை அமைச்சு மக்களவையில் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் இணையக் குற்றங்களுக்கு எதிரான தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கைப்பேசிச் செயலிகள் முடக்கப்பட்டதாக அது குறிப்பிட்டுள்ளது.
இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் மூலம், பல்வேறு அரசு முகமைகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 30ஆம் தேதி நிலவரப்படி, இணைய மோசடிகளில் சிக்கவிருந்த ரூ.11,158 கோடிக்கும் அதிகமான பணம் காப்பாற்றப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமார் நாடாளுமன்றத்தில் கூறினார்.
அந்தத் தேதி வரை இணையக் குற்றம் தொடர்பாக 32.80 லட்சம் புகார்கள் பதிவாகியுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
‘குடிமக்கள் நிதியியல் இணைய மோசடிப் புகார் பராமரிப்பு’ என்னும் முறை வாயிலாக அந்தப் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.
மோசடி குறித்துப் புகார் அளிக்கப்பட்டவுடன், வங்கிகள், கட்டணம் செலுத்தும் தளங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளை உடனடியாக நிறுத்த அல்லது முடக்க அந்த மோசடிப் புகார் பராமரிப்பு முறை உதவுகிறது.
திருடிய பணத்தை இணையக் குற்றவாளிகள் கைமாற்றவும் மறைக்கவும் பயன்படுத்தும் போலி வங்கிக் கணக்குகளுக்கு எதிராகவும் அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இதுவரை 32.08 லட்சம் போலி வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டு, ரூ.25,698 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இணையக் குற்றச் செயல்பாடுகளுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 15.75 லட்சம் சிம் அட்டைகளையும் 5.77 லட்சம் ஐஎம்இஐ எண்களையும் அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
குற்றவாளிகள் போலி இணைப்புகளையும் சாதனங்களையும் பயன்படுத்தி இணைய மோசடிகளில் ஈடுபடுவதைத் தடுப்பதே இந்நடவடிக்கைகளின் நோக்கம் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
புகார்களுக்கு விரைவாகத் தீர்வு காணவும் முகமைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் மோசடிக்காரர்கள் திருடிய நிதியை விரைந்து முடக்கி, மீண்டும் உரியவர்களிடமே ஒப்படைக்கவும் புதிய நடைமுறைகளை உள்துறை அமைச்சு அறிமுகப்படுத்தி உள்ளது.


