சீனக் குடியுரிமை அலுவலகத்தில் இருந்த 49 தமிழர்களைக் காணவில்லை

சீனக் குடியுரிமை அலுவலகத்தில் இருந்த 49 தமிழர்களைக் காணவில்லை

நேப்பாளத்திற்குச் சென்ற 106 தமிழர்களில் 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
1 of 3
படம்: சவுத் சைனா போஸ்ட்
படம்: காத்மாண்டு போஸ்ட்
படம்: தினமணி

28 Aug 2026 - 6:42 pm

2 mins read

காத்மாண்டு: நேப்பாள எல்லைப் பகுதியில் ஆகஸ்ட் 26ஆம் தேதி காலை ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில், சீனக் குடியுரிமை அலுவலகம் அடித்துச் செல்லப்பட்ட விபத்தில் அங்குக் காத்திருந்த 49 தமிழர்களின் கதி என்னவென்று தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் அஞ்சுகின்றனர்.

சென்னையைச் சேர்ந்த சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனம் மூலம் காஞ்சிபுரம், திருச்சி, ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 49 பேர் கொண்ட குழுவினர் கைலாச யாத்திரையை முடித்துவிட்டு, சீனாவிலிருந்து நேப்பாளத்திற்குள் நுழைவதற்காக ஆகஸ்ட் 26ஆம் தேதி காலை 10.18 மணிக்கு கைரோங்க் சீனக் குடியுரிமைத் துறை அலுவலகத்திற்குச் சென்றனர். அங்கு அவர்கள் எடுத்த புகைப்படமும் வெளிவந்துள்ளது

அவர்கள் அலுவலகத்திற்குள் நுழைந்த 12 நிமிடங்களில், அதாவது காலை 10.30 மணிக்கு அப்பகுதியில் திடீரெனக் கடும் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதில் அந்த அலுவலகத்தின் அடித்தளமே அடித்துச் செல்லப்பட்டு, கட்டடம் அடையாளமின்றிச் சிதைந்த சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 27ஆம் தேதி காத்மாண்டுவிலிருந்து டெல்லி வழியாகச் சென்னை திரும்ப வேண்டிய அவர்களது பயணம் ரத்தான நிலையில், வெள்ளத்திற்குப் பிறகு 49 பேரைப் பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. வெள்ளத்தில் அவர்கள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதால், நேப்பாளத்திலிருந்து நல்ல செய்தி வராதா என்ற ஏக்கத்தில் அவர்களது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

டெல்லி திரும்பிய தமிழர்கள்

இதற்கிடையே நேப்பாளத்தில் மீட்கப்பட்ட 21 தமிழர்கள் விமானம் மூலம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28) புதுல்லி திரும்பினர். அவர்களை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விமானநிலையம் சென்று வரவேற்றார்.

வெள்ளப் பேரிடரில் சிக்கிய 290 இந்தியர்களைத் தேடும் பணி நடப்பதாக இந்திய அரசு முன்னதாகத் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) மீட்கப்பட்டனர்.

நேப்பாள பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள 106 தமிழர்களை மீட்பது குறித்து டெல்லி சென்றுள்ள தமிழக அமைச்சர்கள், மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

நேப்பாளத்திற்குச் சென்ற 106 தமிழர்களில் 21 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் 85 பேரின் நிலவரம் தெரியவில்லை.

View post on Instagram
 
குறிப்புச் சொற்கள்