12 ஆண்டுகளில் 50 கோடி இந்தியர்கள் வறுமையிலிருந்து மீட்பு: உலக வங்கி பாராட்டு

12 ஆண்டுகளில் 50 கோடி இந்தியர்கள் வறுமையிலிருந்து மீட்பு: உலக வங்கி பாராட்டு

கோப்புப் படம்: ஃபோர்ப்ஸ் இந்தியா

31 Oct 2026 - 7:17 pm

2 mins read

புதுடெல்லி: கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவில் ஏறக்குறைய 49.6 கோடி (50 கோடி) மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் உலகிலேயே ஆக அதிகமாக, வறுமையைக் குறைத்த நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளதாகவும் உலக வங்கி தனது அண்மைய அறிக்கையில் பாராட்டு தெரிவித்துள்ளது.

‘இந்தியா வறுமை, சமத்துவ அறிக்கை 2026’ என்ற தலைப்பில் உலக வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், தீவிர வறுமை, அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் இந்தியா சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

துரிதமான வறுமைச் சரிவு

கொள்முதல் திறன் சமநிலையின் அடிப்படையில், நாள்தோறும் ரூ.399க்கும் குறைவான வருமானத்தில் வாழும் மக்களின் விகிதம் 2011ல் 57.7 விழுக்காடாக இருந்தது. இது 2023ஆம் ஆண்டில் 16.1 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

அதேபோல, தீவிர வறுமை நிலையான நாள் ஒன்றுக்கு ரூ.285க்கும் குறைவான வருமானம் ஈட்டுவோரின் எண்ணிக்கை 27.1 விழுக்காட்டில் இருந்து 2.6 விழுக்காடாகச் சரிந்துள்ளது.

தொடரும் பொருளியல் சவால்கள்

வறுமை ஒழிப்பில் நாடு பெரும் சாதனையைப் படைத்திருந்தாலும், பொருளியல் ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து சவாலாகவே நீடிக்கின்றன. நாட்டின் மிக உயர்ந்த வருமானம் ஈட்டும் 10 விழுக்காடு தொழிலாளர்களின் சராசரி வருமானம், கடைசி 10 விழுக்காட்டில் உள்ள தொழிலாளர்களின் வருமானத்தைவிட 13 மடங்கு அதிகமாக உள்ளது.

மேலும், கிராமப்புறங்களில் வறுமை விகிதம் (19.3%) நகர்ப்புறங்களைவிட (8.6%) அதிகமாகவே உள்ளது. 2017 முதல் 2023 வரை இந்தியாவில் கூடுதலாக 13.4 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருந்தாலும், பணவீக்கத்தைக் கணக்கில் கொள்ளும்போது தொழிலாளர்களின் உண்மையான ஊதிய உயர்வில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்