நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்

நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்

1 mins read
5bd9be81-bc88-48e1-9285-482ea095f949
உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய‌ மாநிலங்களில் தலா 12 கல்லூரிகள் மூடப்பட்டுவிட்டன. - கோப்புப் படம்: என்இசி.காம்

புதுடெல்லி: இந்தியாவில் இயங்கி வந்த 58 பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகள் மூடப்பட்டுவிட்டதாக அகில இந்தியத் தொழில்நுட்பக் குழுமம் தெரிவித்துள்ளது.

குறைவான மாணவர்ச் சேர்க்கை, போதுமான உட்கட்டமைப்பு வசதி இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அக்குழுமம் விளக்கமளித்துள்ளது.

நடப்புக் கல்வியாண்டில் 58 கல்லூரிகள் இவ்வாறு முறையாக மூடப்பட்டன. முறையான மூடல் என்றால், மூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்ட, குறிப்பிட்ட அக்கல்வி நிறுவனங்கள் நடப்பாண்டில் இருந்து முதலாம் ஆண்டுக்கான மாணவர்ச் சேர்க்கையை நடத்தக்கூடாது என்பதாகும்.

எனினும், அக்கல்லூரிகளில் ஏற்கெனவே கல்வி பயின்றுவரும் மற்ற மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடரவும் படிப்பை முடித்து பட்டங்களைப் பெறவும் எவ்விதத் தடைகளும் இருக்காது எனத் தொழில்நுட்பக் கல்விக் குழுமம் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் தலா 12 கல்லூரிகள் மூடப்பட்டுவிட்டன.

மத்தியப் பிரதேசத்தில் எட்டுக் கல்லூரிகள், தெலுங்கானா, பஞ்சாப் மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் நான்கு கல்லூரிகள், ஆந்திரா, ராஜஸ்தான் மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் மூன்று கல்லூரிகள், குஜராத், கர்நாடகா, தமிழகத்தில் இரண்டு கல்லூரிகள், ஹரியானா, ஒடிசா, உத்தராகண்ட், மேற்கு வங்க மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு கல்லூரி மூடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்