டெல்லியில் அனுமதியின்றி கட்டப்பட்ட 67 கட்டடங்கள் இடிப்பு

டெல்லியில் அனுமதியின்றி கட்டப்பட்ட 67 கட்டடங்கள் இடிப்பு

1 mins read
1a72c9d4-7cb9-4756-9b9d-db3cfb4d4d38
தீவிர விதிமீறலில் ஈடுபட்ட ஒன்பது கட்டடங்களுக்கு உடனடியாக ‘சீல்’ வைத்து டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். - கோப்புப் படம்: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

புதுடெல்லி: டெல்லியில் கடந்த சில நாள்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிர கள ஆய்வின் முடிவில், நகரின் பல்வேறு பகுதிகளில் 67 கட்டடங்கள் இடிக்கப்பட்டன. அவை எந்தவித முன் அனுமதியுமின்றி விதியை மீறி கட்டப்பட்டுள்ளது உறுதியானது.

டெல்லி சத்ய நிகேதான் பகுதியில் செயல்பட்டு வந்த 50 ஆண்டுகள் பழைமையான ஐந்து மாடி மாணவர்கள் விடுதிக் கட்டடம் அண்மையில் திடீரென இடிந்து விழுந்தது. இந்தக் கொடூர விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கட்டடத்தில் பல்வேறு விதிமீறல்கள் மேற்கொள்ளப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, கட்டட உரிமையாளர் ஹரிராம் குப்தா உட்பட முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த விபத்தின் தொடர்ச்சியாக, டெல்லி முழுவதும் அனுமதியின்றி சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டடங்களைக் கண்டறியும் நோக்கில் டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் விரிவான சோதனையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் அந்த 67 சட்டவிரோதக் கட்டடங்களையும் அவர்கள் இடித்து தரைமட்டமாக்கினர்.

மேலும், தீவிர விதிமீறலில் ஈடுபட்ட ஒன்பது கட்டடங்களுக்கு அதிகாரிகள் உடனடியாக ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். குறிப்பாக, நஜப்கர், ஷஹ்தாரா வடக்கு ஆகிய பகுதிகளில் அதிக அளவிலான கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்