புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் சாலைகளில் உள்ள பள்ளங்களில் விழுந்து 9,438 பேர் உயிரை இழந்துவிட்டனர்.
தமிழகத்தில் மட்டும் இவ்வாறு 612 பேர் மாண்டுவிட்டதாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் சாலைகளில் உள்ள பள்ளங்கள் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 53% அதிகரித்துவிட்டது.
2020 ஆம் ஆண்டில் 1,555 பேரும், 2021ல் 1,481 பேரும், அடுத்தடுத்த மூன்று ஆண்டுகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை முறையே 1,856, 2,161, 2,385 என்றும் பதிவாகியுள்ளன.
இந்திய மாநிலங்களில் ஆக அதிகமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான் அதிகமானோர் மாண்டு போயினர். அங்கு, 5,127 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டனர். மத்தியப் பிரதேசத்தில் 969 பேரும், தமிழகத்தில் 612 பேரும், பஞ்சாப்பில் 414 பேரும் உயிரிழந்துவிட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திரா, பீகார், கோவா ஆகிய மாநிலங்களில் இவ்வாறு பள்ளங்களில் விழுந்து யாரும் உயிரிழந்ததாக எந்த ஒரு சம்பவமும் பதிவாகவில்லை.
கடந்த 5 ஆண்டுகளில், இத்தகைய சம்பவங்களில் ஏறக்குறைய 20,000 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர்களில் 9,670 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என்றும் திரு நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
நெடுஞ்சாலைகளைப் பராமரிப்பது மத்திய அரசின் பொறுப்பு என்றும் அதேபோல் மாநில அரசுக்கும் அதன் எல்லைக்குள் வரும் சாலைகளைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

